Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நரேந்திர மோடி

பிரதமர்

1950 செப்டெம்பர் 17இல் குஜராத்தில் உள்ள மேஹ்சானா மாவட்டத்தில் அமைந்துள்ள வத்நகரில் தாமோதர் தாஸ் முல்சந் மோதி-ஹீராபேன் இணையருக்கு மகனாக பிறந்தார் நரேந்திர மோடி.

  குஜராத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து,பிஜேபியில் அடிப்படை உறுப்பினாராக சேர்ந்து,தற்போது இந்தியாவின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியின் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது.

பிறப்பு:
  1950 செப்டெம்பர் 17இல் குஜராத்தில் உள்ள மேஹ்சானா மாவட்டத்தில் அமைந்துள்ள வத்நகரில் தாமோதர் தாஸ் முல்சந் மோதி-ஹீராபேன் இணையருக்கு  மகனாக பிறந்தார் நரேந்திர மோடி. மொத்தம் உள்ள 6 மகன்களில் 3வதாக பிறந்தார் மோடி.

குடும்பம்:
  இவருக்கு 'யசோதா பென்' என்ற மனைவி உள்ளார்.இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை.2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வடோதரா பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.அப்போது,அதில் தனக்கு 'யசோதா பென்' என்றவருடன் திருமணம் நடந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.அப்போது இது தொடர்பான சர்சைகள் பரபரப்பாக பேசப்பட்டது.

இளமைப்பருவம்:
  வட்நகர் மேல்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே,ரயில் நிலையத்தில் உள்ள தனது தந்தையின் டீ கடையில் வேலை செய்வார்.தனது 8வது வயதிலேயே,ஆர் எஸ் எஸ் இல் உறுப்பினராக சேர்ந்தார் மோடி. பின்னர்,குஜராத் பல்கலை கழகத்தில் அரசியல் அறிவியலில் (Political Science) முதுகலை பட்டம் பெற்றார்.

தீவிர அரசியல்:
  'அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்' அமைப்பின் குழு தலைவர் ஆக தேர்வு செய்யப்பட்டார்.நெருக்கடி நிலையின் போது, பல போராட்டங்களில் கலந்து கொண்டார்.அப்போது,ஆர் எஸ் எஸ்ஸின் தீவிர பற்றாளராக மாறினார்.பிஜேபியில் உறுப்பினாராக சேர்ந்தார் மோடி.உறுப்பினாராக சேர்ந்த 1 வருட காலத்தில்,குஜராத் மாநில பொது செயலாளர் ஆக நியமிக்கப்பட்டார்.

திட்டமிடுதல்:
  1988 முதல் 95 வரையிலான காலகட்டத்தில் மிகச்சிறந்த திட்டமிடுபவராக செயல்பட்டார் மோடி. குஜராத் பா.ஜ.க.,வை ஆளுங் கட்சியாக்க தேவையான அடிப்படைப்பணிகளை சிறப்பாக ஒருங்கிணைத்தவர் என்ற பெயரையும் பெற்றார். இந்தசமயத்தில் இரண்டு முக்கியமான தேசிய நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பணியும் அவருக்கு வந்துசேர்ந்தது. அதில் ஒன்று சோம்நாத் முதல் அயோத்தி வரையிலான அத்வானியின் ரதயாத்திரை. அதேபோல கன்னியா குமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான யாத்திரை.இவற்றை எல்லாம் சரியாக செயல்படுத்தி தான் யார் என்று நிரூபித்தார்.

தேசிய செயலாளர்:
 1998ஆம் ஆண்டில் 'இமாச்சல பிரதேசம்','குஜராத்' தேர்தல் பொறுப்பாளராக அத்வானியால் நியமிக்கப்பட்டார்.பின்னர் இமாச்சலபிரதேசம்,பஞ்சாப்,ஹரியானா,சண்டிகர்,ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றின் பொது செயலாளர் ஆக நியமிக்கப்பட்டார்.1998இல் அடல் பிகாரி வாஜிபாய் பிரதமராக பதவியேற்றபொழுது,மோடிக்கு 'தேசிய செயலாளர்' என்ற பதவியும் அளிக்கப்பட்டது.

குஜராத் முதல்வர்:
  அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த 'கேசுபாய் பட்டேல்' ராஜினாமா செய்ததை அடுத்து,2001,அக்டோபர் 7இல் குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றார்.நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.பிப்ரவரி 27,2002ஆம் ஆண்டு நடந்த 'கோத்ரா ரயில் எரிப்பு' சம்பவத்தின் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சியமைத்தார்.பின்னர் 2007,2012 ஆகிய தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று 4வது முறையாகவும் குஜராத் முதல்வர் ஆக பதவியேற்று,திறம்பட செயலாற்றினார்.நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையை படைத்தார் நரேந்திர மோடி.

முதல்வராக மோடியின் சாதனைகள்:
  மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட மோடி, சோலார் மின் உற்பத்தியினை அதிகப்படுத்தி குஜராத்தை மின் மிகை மாநிலமாக மாற்றினார். இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதை தவிர்க்க, “குட்கா” என்னும் போதைப்பொருளுக்குத் தடை விதித்தார். மும்பைத் தாக்குதலுக்குப் பின், குஜராத் கடலோர பாதுகாப்பைப் பன்மடங்கு பலப்படுத்தினார். 
மேலும், தண்ணீர், சாலை வசதிகள், பெண் கல்வி, ஆரோக்கியம், ஊழலற்ற நிர்வாகம், விவசாயம், தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி, குஜராத் மாநிலத்தை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாற்றிக்காட்டினார்.மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது என்றால், மோடியின் அரசியல் ஆளுமை தான் அதற்கு முக்கிய காரணம். 

விருதுகள்,சிறப்புகள்:
  2006 – ‘’இந்தியா டுடே’ நாளிதழ் இந்தியாவின் ‘சிறந்த முதல்வர்’ என்ற விருதை வழங்கி கௌரவித்தது.குஜராத் கணினித்துறையில் இவர் ஏற்படுத்திய வளர்ச்சிக்காக ‘கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பு ‘இ-ரத்னா’ விருதை வழங்கி கௌரவித்தது.
2009 ஆம் ஆண்டு ஆசியாவின் சிறந்த ‘எப்.டி.ஐ பெர்சனாலிட்டி’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.2012இல் 'டைம்’ பத்திரிகையின் முதல் அட்டையில் இந்தியாவின் ‘சிறந்த அரசியல்வாதிகளில்’ ஒருவராக சித்தரிக்கப்பட்டார்.நரேந்திர மோடியின் தலைமையிலான குஜராத் அரசாங்கம், சிறந்த நிர்வாகத்திற்கான உதாரணம் என அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது.

இணையம் மூலம் மக்களுடன் தொடர்பு:
  மக்களுடன் நேரடியாக இணைந்திருப்பதைத் தவிர இணைய தளத்திலும் வலுவான மக்கள் தொடர்பை கொண்டுள்ளார். இந்தியாவின் தொழில்நுட்ப விரும்பியாக அறியப்படும் தலைவர் இவர். மக்களை இணையதளம் மூலம் சென்றடைந்து அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவரவே தொழில்நுட்பத்தை பயன் படுத்துகிறார். பேஸ்புக், டுவிட்டர், கூகுள் பிளஸ், இன்ஸ்டாகிராம், சவுண்டு கிளவுட், லிங்கிடு-இன், வைபோ மற்றும் பிற சமூக வலைத்தளங்களை வெகுவாக பயன்படுத்துகிறார்.

2014 தேர்தல்:
  'தேசிய ஜனநாயக கூட்டணி' மூலம் போட்டியிட்டனர் பிஜேபி மற்றும் கூட்டணி வேட்பாளர்கள்.இவர்களை ஆதரித்து,கிட்டத்தட்ட 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு,430 பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் செய்தார்.2014 மே 26இல் இந்திய நாட்டின் பிரதமராக 'நரேந்திர மோடி' பதவியேற்றார்.இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த முதல் பிரதமர் இவர் ஆவார்.

திட்டங்கள்:
  “பிரதமர் மக்கள் நிதித் திட்டம்”, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நிதிநிலை முறையில் இணைக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்துள்ளது. பிரதமருடைய “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” திட்டம், தொழில் செய்வதை எளிதாக்கியதன் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. “உழைப்பே உயர்வு தரும்” என்ற திட்டத்தின் கீழ் உழைப்பாளர்களின் சீர்திருத்தம், உழைப்பாளர்களின் மரியாதை இரண்டும் பல்வேறு நடுத்தர மற்றும் சிறு தொழில் உழைப்பாளர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. திறமைமிகு இளைஞர்களுக்கும் இது உற்சாகம் அளித்துள்ளது.

  முதன் முறையாக இந்திய மக்களின் நலனுக்காக இந்திய அரசு, மூன்று சமூக பாதுகாப்பு திட்டங்களை துவக்கி உள்ளது. முதியோர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பதிலும் ஏழைகளுக்குக் காப்பீடு வழங்குவதிலும் இத்திட்டம் முக்கியத்துவம் அளித்துள்ளது.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை அக்டோபர் 2, 2014ம் ஆண்டு அன்று பிரதமர் “தூய்மையான இந்தியா” இயக்கத்தை நாடு முழுவதும் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் அளவும் தாக்கமும் வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாக உள்ளது.நரேந்திர மோடியின் சர்வதேசக் கொள்கை நடவடிக்கைகள் உலக அரங்கில், மிகப் பெரிய குடியாட்சியின் பங்கையும் இந்தியாவின் திறனையும் நிரூபித்துள்ளது.

உலகளாவிய தொடர்பு:
  ஐக்கிய நாடுகள் சபையில் இவர் வழங்கிய உரை உலகெங்கும் பாராட்டப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பிறகு நேபாளத்திற்கும், 28 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவிற்கும், 31 ஆண்டுகளுக்கு பிறகு ஃபிஜிக்கும் 34 ஆண்டுகளுக்கு பிறகு செஷல்ஸ்க்கும் பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் இவர். பதவியேற்றப்பின் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள், பிரிக்ஸ், சார்க் நாடுகள் மற்றும் ஜி20 சந்திப்பு ஆகியவற்றில் கலந்து கொண்டார். உலகளவில் பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியிலான பிரச்சினைகளில் தலையீடும், இந்தியாவின் கருத்துக்களும் பெருமளவில் பாராட்டப்பட்டன. 

  பிரதமருடைய ஜப்பான் பயணம், இந்தியா – ஜப்பான் இடையேயான உறவில் மிக முக்கியமான அத்தியாயத்தை ஏற்படுத்தியது. இவர் மங்கோலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் ஆவார். சீனாவிற்கும் தெற்கு கொரியவிற்கும் இவர் மேற்கொண்ட பயணம் வெற்றிகரமாக முதலீட்டாளர்களை இந்தியாவை நோக்கி ஈர்த்தது. அவருடைய பிரான்ஸ், ஜெர்மனி பயணங்கள் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதை சுட்டிக் காட்டியுள்ளது.

  ஆஸ்திரேலிய பிரதமர் திரு. டோனி அபாட், சீனா அதிபர் திரு. ஸீ ஜின்பிங்க், இலங்கை அதிபர் மைத்திரி பால சிரிசேனா, ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் ஆகியோர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டனர். இதன் மூலம் இந்தியாவிற்கும் இந்நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது. இந்தியா – அமெரிக்க இடையேயான உறவின் வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்க அதிபர் திரு. பராக் ஒபாமா இந்தியா குடியரசு தினம் – 2015 கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
சர்ச்சைகள்:

  கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்,ஆடம்பரமான உடைகள் அணிதல்,தொடர்ந்து வெளிநாட்டு பயணம்,ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருத திணிப்பு,பலனில்லா பொருளாதார கொள்கைகள்,கருப்பு பணம் ஒழிப்பு,பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை என பல திட்டங்கள் மக்களை ஏமாற்றின.அது மட்டுமல்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முன்னுரிமை,உலகம் முழுவதும் சுற்றும் பிரதமர் இந்தியாவிற்கு எப்போது வருவார் என்ற சந்தேகம்,ஏழைகளுக்கு அநீதி இழைக்கப்படுதல்,விலைவாசி உயர்வு,ஹிந்தி திணிப்பு,தற்போது தமிழக அரசை பின்னிருந்து இயக்குதல் என பல்வேறு குற்றச்சாட்டுகள் மோடி அரசின் மீது வைக்கப்படுகின்றன.

புத்தகங்கள்:
அரசியலைத் தவிர எழுதுவதிலும் நரேந்திர மோடி ஆர்வம் கொண்டுள்ளார்.சக்தி பாவ் (2015),சமூக நல்லிணக்கம்(2015),ஜோதி பூனா(2015),சமாஜிக் சம்ரஸ்தா (சமூக நல்லிணக்கம் என்ற நூலின் குஜராத்தி மொழிப்பெயர்ப்பு) ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
தி மேக்கிங் ஆப் எ லெஜன்ட்' என்ற புத்தகம் மோடியின் வாழ்க்கை வரலாற்று புத்தகமாகும்., இப்புத்தகத்தில், மோடி, பிரதமராக பொறுப்பேற்ற பின், சந்தித்த சவால்கள், செயல்படுத்திய புதுமையான திட்டங்கள் குறித்து  இடம்பெற்று உள்ளன. 

தொகுப்பு : ர.ரகுபதி