நெடுவாசல் | Latest tamil news about Neduvasal | VikatanPedia
Banner 1
ஹைட்ரோ கார்பன் போராட்டக்களம்

நெடுவாசல்

அண்மையில் மத்திய அரசாங்கம் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்திருந்தது. அவற்றில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமமும் ஒன்று. புதுகோட்டை மாவட்டம் என்றாலும், இந்தக் கிராமம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ளதால், அதன் மண் வளம், நீர் வளம் எல்லாம் தஞ்சாவூர் பகுதியைப் போலவே உள்ளது.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை!

விவசாயம்:

ஒருகாலத்தில் இந்தப் பகுதி மக்கள் மானாவாரி பயிர்களையே பயிரிட்டனர். ஆழ்துளைக் கிணறு அறிமுகப்படுத்தப்பட்ட பின், இந்தப் பகுதியில் விவசாயம் செழித்தோங்கத் தொடங்கியது. நிலக்கடலை, உளுந்து, வாழை, கரும்பு உள்ளிட்டவை இந்தப் பகுதியின் பிரதான பயிர்கள். இந்தக் கிராமத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள செம்மண் பூமியில் தைலமரம், முந்திரி ஆகியவை மிகுந்து காணப்படுகிறது. நெடுவாசல் பகுதியைச் சேர்ந்த அடுத்த தலைமுறை இளைஞர்கள் படித்துவிட்டு சென்னை, பெங்களூரு, அரபு நாடுகளுக்கு வேலைநிமித்தம் சென்றிருந்தாலும், இன்னும் கணிசமானோருக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருக்கிறது.

ஓ.என்.ஜி.சி:

ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு புதிதாக அனுமதி வழங்கி இருந்தாலும், மூன்று தசாப்தங்களுக்கு முன்பே இந்தப் பகுதிக்குள் ஓ.என்.ஜி.சி நுழைந்து விட்டது. நெடுவாசலுக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள கருக்காகுறிச்சி, வானகன்காடு இயற்கை எரிவாயு எடுக்கும் பணிகளை 1990-களிலேயே தொடங்கி இருக்கிறது. இங்குள்ள நிலங்களை விலை கொடுத்து கையகப்படுதாமல், குத்தகை முறையில் கைப்பற்றி பதினைந்தாயிரம் முதல் இருபதாயிரம் அடி ஆழம் வரை நிலத்தை துளைத்து, எரிவாயு எடுத்து இருக்கிறது. 

ஏன் நெடுவாசல்....?

ஏன் நெடுவாசல் கிராமத்தையும், அதைச் சுற்றி உள்ள பகுதிகளையும் குறிவைக்கிறார்கள் என்ற கேள்விக்கு அறிவியலாளர்கள்  சொல்லும் விளக்கம், “இந்த பகுதி மியூசோயிக் யுகத்தைச் சேர்ந்தவை.  மியூசோயிக் யுகத்தைச் சேர்ந்த பகுதிகளில் எப்போதும் வளங்கள் கொட்டிக்கிடக்கும். இங்கும் அபரிவிதமான வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதனால்தான், இந்தப் பகுதியைக் குறிவைத்திருக்கிறார்கள்.” என்கிறார்கள்.

ஏன் எதிர்க்கிறீர்கள்?

ஓ.என்.ஜி.சி-க்கு நிலத்தை குத்தகைக்கு கொடுத்து விட்டு இப்போது ஏன் எதிர்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, அப்பகுதி மக்கள் இரண்டு பிரதான காரணங்களைச் சொல்கிறார்கள். “முன்பு எங்களுக்கு எந்த விழிப்புணர்வும் இல்லை. மண் எண்ணெய் எடுக்கிறோம் என்றுதான் முதலில் எங்களிடமிருந்து நிலத்தை குத்தகைக்கு கேட்டார்கள். இந்த ஊர் வளர்ச்சியடையப் போகிறது என்ற நம்பிக்கையில்தான் நாங்களும் நிலத்தைக் கொடுத்தோம். ஆனால், அவர்கள் எங்களுக்கு வாக்குறுதி அளித்த எந்த வளர்ச்சியும் வந்து சேரவில்லை. அதுமட்டுமல்ல, ஓ.என்.ஜி.சி துளையிட்ட சுற்றுப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் அபரிமிதமாகக் குறைந்துள்ளது. மேலும், அவர்கள் எண்ணெய் எடுத்துவிட்டு, கைவிட்டுச் சென்ற சில இடங்களில் அவ்வப்போது தீப்பிடிக்கிறது. அதனால்தான் இப்போது நாங்கள் எதிர்க்கிறோம்” என்றனர். 

மேலும் அவர்கள், “இந்தப் பகுதி விவசாயத்துக்கு உகந்த பகுதி. 90 சதவிகித மக்கள் தங்கள் வாழ்வாதாரமாக விவசாயத்தையே நம்பி இருக்கிறோம்.  ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம் என்ற பெயரில், இந்தப் பகுதியை முற்றும் முழுவதுமாக சீரழித்து விட்டால், நாங்கள் வாழ்வாதாரத்துக்காக எங்கே செல்வது...?” என்று நியாயமான கேள்வியை எழுப்புகிறார்கள். 

நெடுவாசலுக்கு செல்லும் வழி...?

புதுக்கோட்டை சென்று அங்கிருந்து பட்டுக்கோட்டை செல்லும் பேருந்தில் ஏறி, ஆவணம் என்னும் இடத்தில் இறங்கி நெடுவாசலுக்குச் செல்ல வேண்டும். அதுபோல, பட்டுக்கோட்டையில் இருந்து வருபவர்கள், புதுக்கோட்டை, அறந்தாங்கி செல்லும் பேருந்துகளில் ஏறி, ஆவணம் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். 

சட்டமன்ற... நாடாளுமன்ற உறுப்பினர்கள்:

நெடுவாசல் கிராமம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த மெய்யநாதன். நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த பி.ஆர் செந்தில்நாதன்.  

தொடரும் போராட்டம்:

ஹைட்ரோ கார்பன் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே நெடுவாசலில் போராட்டம் தொடங்கி விட்டது. ஊர் மக்கள் ஒன்றுகூடி, “ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டியக்கம்” என்ற பெயரில் இயக்கத்தை கட்டமைத்து தொடர்ந்து அறவழியில் போராடி வருகிறார்கள். ஃபிப்ரவரி 26 -ம் தேதி, நடந்த அறவழி போராட்டத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இயக்குநர் தங்கர்பச்சான், இயக்குநர் பாண்டிராஜ், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பேராசிரியர் த. செயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, ஃபிப்ரவரி 26 -ம் தேதி அன்று புதுக்கோட்டையிலும் அறவழிப் போராட்டம் நடந்தது.

வெளி இணைப்புகள்

நெடுவாசல் லைவ் அப்டேட்ஸ்

நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவாக பறந்த மீம்ஸ் தொகுப்பு