நீட்(EXAM) | Latest tamil news about NEET | VikatanPedia
Banner 1
நுழைவுத்தேர்வு

நீட்(EXAM)

நீட் (தேசிய தகுதிக்காண நுழைவுத் தேர்வு) எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் ஒரு நுழைவுத்தேர்வு. இதுவரை தமிழ்நாட்டில் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்றது.

மருத்துவத்தில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு ஆகியவற்றுக்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நுழைவுத்தேர்வு நீட் என்பதாகும். ஆங்கிலத்தில் National eligibility cum entrance test  என்று கூறுவார்கள். இந்தியாவில் உள்ள எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் ஆகிய மருத்துவக்கல்லூரிகள் நீங்கலாக, மற்ற அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு நடைபெறும் என்று இந்திய மருத்துவக்கழகம் அறிவித்தது. 2012 ஆம் ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இத்தேர்வு 2013 ஆம் ஆண்டு நடைபெற்றது. நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக, அனைத்திந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு ( AIPMT) வழக்கத்தில் இருந்தது. நாட்டின் அனைத்து மாநிலங்களும், தமக்கென்று தனியாகத் தேர்வு முறைகளைக் கொண்டு மருத்துவப்படிப்பிற்கான மாணவர்களைத் தேர்வு செய்தன. வேலூர் மருத்துவக்கலூரி, ஜிப்மர், எய்ம்ஸ் போன்ற கல்லுரிகள் தமக்கென்று நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்களைத் தேர்வு செய்தன. பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், மற்றும் உயிரியல் பாடப்பிறிவில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 

எங்கே தவறுகின்றது நீட்? 
இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லை. ஆனால், அவர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதைப்போலவே, முதலில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தேர்வு நடைபெறும் என்ற நிலைமாறி தற்பொழுது ஏழு மொழிகளில் தேர்வு எழுதலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் நீட் தேர்வில் வெற்றி பெறுவது என்பது, பயிற்சி மையத்தில் தேர்வுக்கென்று முறையாகப் பயிற்சி எடுக்கும் மாணவர்களுக்கு மட்டுமே கைக்கெட்டும் தொலைவில் உள்ளது. ஆதலால், நீங்கள் படிக்கும் பாடத்திட்டத்தைவிட, நீங்கள் பயிற்சி எடுக்கும் விதமே நீங்கள் மருத்துவர்  ஆவீர்களா இல்லையா என்று முடிவு செய்கின்றது. மேலும் இத்தேர்வானது,மாணவர்கள் திறமையை மதிப்பிடுவதை ஒரே வகையில் மட்டுமே செய்கின்றது. வெறும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுவதன் மூலமாக மட்டுமே ஒரு மாணவரின் திறமையை எடைபோட முடியாது. அதைப்போலவே நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகலுக்கும் ஒரே பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படுவதில்லை.

ஆதலால், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே அடிப்படையில் செய்யவேண்டிய மாற்றங்களைச் செய்யவேண்டியது அவசியம் ஆகின்றது. அனைவருக்கும் ஒரே தேர்வுமுறை என்பதைக் கருத்தில் கொண்ட அரசு, ஒரே கல்வித்திட்டம் என்பதனைக் கருத்தில்கொள்ளவேண்டும். அதைப்போலவே, ;நுழைவுத்தேர்வு முறை என்பது பொருளாதார ரீதியாக, சமுக ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு எட்டாக்கனியாவே உள்ளது. எனவே, கல்வி என்பதில் சமவாய்ப்பு மறுக்கப்படாமல், அனைவருக்கும் சமமாக ;நுழைவுய்த்தேர்வுக்கான பயிற்சியையும் அரசு வழங்க வேண்டும். குறைந்தபட்சம் இதனை அவர்கள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். மருத்துவப்படிப்பில் தகுதி  என்பது நுழைவுத்தேர்வில் மட்டும் இல்லை. அதனைத்தாண்டி நிறைய உள்ளது, நிஜவாழ்விற்கான மருத்துவர்களாக அவர்களை நாம் தயார் செய்ய வேண்டும் என்பதனை இந்த அரசு கருத்தில் கொள்ள வேண்டும். 

தொகுப்பு : சிவ.உறுதிமொழி