Banner 1
எழுத்தாளர்

சுஜாதா

தன்னுடைய தனித்துவமான எழுத்தால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கட்டிக்காத்த வசீகரன்; .இவர் இயற்பெயர் ரங்கராஜன். சுஜாதா என்பது இவருடைய மனைவியின் பெயர். அதனையே தம்முடைய புனைபெயராகவும் ஏற்றுக்கொண்டார்.

   தமிழிலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர்; தன்னுடைய தனித்துவமான எழுத்தால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கட்டிக்காத்த வசீகரன்; மென்னுணர்வுகள் ஆகட்டும், தீவிரமான புலனாய்வுக்கதைகளாகட்டும், ஆச்சரியப்படவைக்கும் அறிவியல் புனைவுகளாகட்டும்; ஆல் ரவுண்டராக இறங்கி அடித்தவர் இவர் தான்: எழுத்தாளர் சுஜாதா! 

    பிறந்தது 1935, மே மாதம் மூன்றாம்நாள். பிறந்தது மெட்ராஸ் ஆக இருந்தாலும் வளர்ந்தது என்னவோ காவிரி தாலாட்டும் திருவரங்கத்தில் பாட்டி வீட்டில்தான். இயற்பெயர் ரங்கராஜன். சுஜாதா என்பது இவருடைய மனைவியின் பெயர். அதனையே தம்முடைய புனைபெயராகவும் ஏற்றுக்கொண்டார். கட்டுக்கோப்பான வைணவக்குடும்பம் என்பதால், சிறுவயதிலேயே நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்டது. 

  திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியையும், திருச்சி புனித வளனார் (St.Joseph) கல்லூரியில் இளங்கலை இயற்பியலும் பயின்றார். அங்கே இவருக்கு நெருக்கமான நண்பராக இருந்தவர் நம் நாட்டின் மேனாள் குடியரசுத்தலைவர் திரு. கலாம் அவர்கள்! பின்பு மெட்ராஸ் தொழில்நுட்பக்கழகத்தில் மின்னணுப் பொறியியல் பயின்றார். தேர்தல் ஆணையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டபோது, அதில் இவர் முக்கியமான பங்காற்றினார். 

  எழுத்துலகில் ஆற்றிய பங்களிப்பைப் போலவே திரைத்துறையிலும் இவருடைய எழுத்து ராஜபாட்டை போட்டு நடந்தது. பிரியா, நினைத்தாலே இனிக்கும் என்று எழுபதுகளின் இறுதியில் தொடங்கிய இவருடைய திரைப்பயணம் மணிரத்தினம், ஷங்கர் போன்ற ஜாம்பவான்களோடு இணைந்து ரோஜா, இந்தியன், கன்னத்தில் முத்தமிட்டால், பாய்ஸ், ஆயுத எழுத்து, எந்திரன் என்று நினைவுகூரத்தகுந்த பல மைல்கற்களால் நிறைந்தது. நடிகர் கமலஹாசன் அவர்களோடு நெருக்கமான நண்பராகவும் இருந்தார். தயாரிப்பாளராக, பாரதி( 2000) மற்றும் லிட்டில் ஜான் (2001) ஆகிய திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். 

  நூற்றிற்கும் மேற்பட்ட நாவல்கள், இருநூற்று ஐம்பதிற்கும் மேலான சிறுகதைகள், பத்து மேடை நாடகங்கள், பத்து அறிவியல் தொடர்பான புத்தகங்கள், சிறிதளவு கவிதைத்தொகுதி என்று இவர் எழுதிய எழுத்தைவைத்துக் குட்டி நூலகமே அமைக்கலாம்! 
இவைமற்றும் இல்லாமல், விகடன், குங்குமம், கல்கி என்று தமிழ் மக்களின் எழுத்துலகில் வாசம் செய்யும் அனைத்து இதழ்களிலும் இவரது பேனா தடம்பதித்துள்ளது. 
 
 ‘கற்றதும் பெற்றதும்’, ‘ஏன், எதற்கு, எப்படி’ போன்ற தொடர்கள் இவருக்கு வயது வித்தியாசம் இல்லாத பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத்தந்தது. இவருடைய துப்பறியும் புலனாய்வு நாவலில் வரும் ‘கணேஷ்-வசந்த்’ இணையரின் கதாபாத்திர அமைப்பு, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. 

  ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் இருந்த திருவரங்கத்தை மார்கழிக்கோலங்களோடும், காவிரிக்கரையோடும் படம்பிடித்த இவருடைய ஸ்ரீரங்கத்து தேவதைகள் சிறுகதைத்தொகுதி,  இன்றுவரை இங்கு நிறையபேருக்கு எவர்க்ரீன் பேவரிட்.  ரத்தம் ஒரே நிறம், நில்லுங்கள் ராஜாவே, கொலையுதிர் காலம், என் இனிய இயந்திரா, பிரிவோம் சந்திப்போம், கரையெல்லாம் செண்பகப்பூ, சொர்க்கத்தீவு, மீண்டும் ஜீனோ என்று அனைத்துத் துறைகளிலும் எழுதித் தீர்த்த இவரின் பேனா, 27.02.2008 அன்று நின்றுவிட்டது.  

தொகுப்பு : சிவ.உறுதிமொழி