Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய்

திரைப்பட நடிகர்

தனது ரசிகர்களால் இளையதளபதி என்று அழைக்கப்படும் இவரின் இயற்பெயர் ஜோசப் விஜய். தமிழ்த் திரைப்படத் துறையில் விஜய் என்கிற பெயரில் அறிமுகமனார். பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் மகன் ஆவார். "நாளைய தீர்ப்பு" என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

பிறப்பு: 
சென்னையில் ஜூன் 22-ம் தேதி 1974-ம் வருடம் பிறந்தார். இவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழர், அம்மா ஷோபா மலையாளி. 

குடும்பம்:
விஜய் அவர்களின் தந்தை ராமநாதபுரம் மாவட்டம் காமன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர். இந்த தகவலை முதன் முதலாக அவர்  ''சினிமா கனவில், 18 வயதில் ராமநாதபுரம் மாவட்டம் காமன்கோட்டை கிராமத்தில் இருந்து சென்னைக்கு ஓடிவந்து... தெருவோரங்களில் படுத்துக் கிடந்த எனக்கு... இன்று ஒரு மதிப்பான வாழ்க்கை கிடைத்திருக்கிறது"  என ஆனந்த விகடன் பேட்டியில் தெரிவித்தார். அவரது தாய் ஷோபா கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் வாழ்ந்த திரு.நீலகண்டன் என்ற நாடக இயக்குநரின் மகளாவார். ஷோபா பிரபல மேடைப் பாடகரும் ஆவார். "நண்பர் இளையராஜாவின் மேடைக் கச்சேரிகளில் பாடச் செல்வார். ஒரு கச்சேரி பாடினால் 100 ரூபாய் கிடைக்கும். அவர் பாடும் நாட்களில் எங்களுக்கு உணவு... பாடாத நாட்கள் பட்டினி. ஆனால்... அந்த வறுமையிலும்கூட எங்களின் மகிழ்ச்சி குறையாமல் இருந்தது!'' என்றும் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மனைவி பெயர் சங்கிதா, மகன் - ஜேசன் சஞ்சய், மகள் - திவ்யா சாஷா

இளமைப் பருவம் - கல்வி:
விஜய் ஒரு கத்தோலிக்க குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு 12 வயதில் ஞானஸ்தானம் செய்து வைக்கப்பட்டது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள "பால லோக் மெட்ரிகுலேஷன் பள்ளி"யில் பள்ளிப்படிப்பை மேற்கொண்டார்.  " நடிகர் விஜய் படிக்கும் போது ஒழுக்கமான மற்றும் அமைதியான மாணவன். அவர் விளையாட்டுகளில் மிகவும் திறமையானவர்" என அவரின் ஆங்கில ஆசிரியரான திருமதி.மீனா சுரேஷ் ஒரு விழாவில் குறிப்பிட்டார். சென்னை லயோலா கல்லூரியில்  "காட்சி ஊடக" இளங்கலை படித்த விஜய் நடிக்கும் ஆர்வத்தில் பாதியில் கல்லூரிப்படிப்பை கைவிட்டார். 

‘‘நான் பிறந்ததே சினிமா குடும்பம்தானே. அப்பா அப்போ பரபரப்பான கமர்ஷியல் டைரக்டர். குழந்தை நட்சத்திரமா நிறைய படங்களில் நடிக்க வெச்சார். குட்டி விஜயகாந்த்னா அப்போ என்னைத்தான் கூப்பிடுவாங்க. எனக்கும் சினிமா தான் எதிர்காலம்னு முடிவு பண்ணிட்டேன். லயோலாவுல சேர்ந்ததும் இன்னும் ஆர்வம் பத்திக்குச்சு!’’

தனிப்பட்ட வாழ்க்கை:
விஜய்க்கு சங்கீதா என்ற மனைவியும் ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர்.  ஜேசன் சஞ்சய் "வேட்டைக்காரன்" படத்திலும், சாஷா "தெறி" படத்திலும் சிறு காட்சியில் நடித்திருந்தனர். விஜய் -சங்கீதா திருமணம் காதல் திருமணமாகும். விஜய் அவர்களின் மனைவி சங்கீதா லண்டனில் படித்து வளர்ந்த இலங்கை யாழ்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ஈழத்தமிழர்.  

'' ‘பூவே உனக்காக' படத்தைப் பார்த்து விஜய்யோட தீவிர ரசிகை ஆயிட்டேன். அவரைப் பார்க்கிறதுக்காகவே  லண்டனில் இருந்து கிளம்பி வந்துட்டேன். ரசிகைனு அறிமுகமாகி, நண்பர்களாகி, அப்புறம் காதலர்களானோம். அந்தச் சமயத்தில் விஜய் ‘காலமெல்லாம் காத்திருப்பேன்' படத்தின் படப்பிடிப்பில் பிஸியா இருந்தார். ஒருமுறை தன்னோட வீட்டுக்கு வரச்சொல்லி அழைச்சிருந்தார். விஜய்யோட அம்மா, அப்பா  எல்லாருமே எங்கிட்ட நல்லா பழகினாங்க. விஜய்யைப் பார்க்க ரெண்டாவது முறை அவரோட வீட்டுக்குப் போனப்போ, அவரோட அப்பா எங்கிட்ட, 'விஜய்யும் நீயும் திருமணம் செய்துகொள்ளுங்கள்'னு சொன்னார். இன்ப அதிர்ச்சியா இருந்தது. எல்லாரோட ஆசிர்வாத்தோடும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்" 

ஆகஸ்ட் 25-ம் தேதி 1999-ம் ஆண்டு சங்கீதா சொர்ணலிங்கம் என்பவரை திருமணம் செய்தார். 2000-ல் சஞ்சய் என்ற மகனும், 2005-ல் திவ்யா என்ற மகளும் பிறந்தார்கள். விஜய்க்குத் திருமணம் ஆனவுடனேயே அவரது சொந்த காஸ்ட்யூம் டிசைனராக மாறிவிட்டார் மனைவி சங்கீதா. இன்றைக்கு வரைக்கும் அவர் தேர்ந்தெடுத்துத் தருகிற டிரெஸ்களை மட்டுமே அணிகிறார் விஜய்.

சினிமா பங்களிப்பு:
தந்தை இயக்குநர் சந்திரசேகர் படங்களில் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்த விஜய் அவரின் இயக்கத்திலேயே "நாளைய தீர்ப்பு" என்கிற படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து "செந்தூரப்பாண்டி" என்கிற படத்தில் நடித்தார். இதில் விஜயகாந்த் கௌரவ வேடத்தில் நடித்தார். இது வரை மொத்தம் 67 படங்களில் நடித்துள்ள விஜய் 60 படங்களில் நாயகனாக நடித்துள்ளார். தற்போது 61-வது படம் தயாராகி வருகிறது.

தெறி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்-அட்லீ கூட்டணியில் இன்னொரு படம் உருவாக உள்ளது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ஜோதிகா, சமந்தா, வடிவேலு, சத்யராஜ் என்ற பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கவிருக்கின்றனர். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.  

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'வெற்றி', 'நான் சிவப்பு மனிதன்', 'சட்டம் ஒரு விளையாட்டு' ஆகிய மூன்று படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.  1984ல் 'வெற்றி' படம் ரிலீஸ் ஆனது. அதைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது ஒட்டுமொத்தமாக விஜய் சினிமாவுக்கு நடிக்கவந்து 30 ஆண்டுகள் ஆகின்றன.

 காதலுக்கு மரியாதை (1998) படத்துக்காகவும், திருப்பாச்சி (2005) படத்துக்காகவும் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருதை இருமுறை பெற்றவர். 'விஜய் டி.வி"-யின் விருதுகளை 5 முறை வென்றுள்ளார். இவை தவிர, கில்லி (2004) - 'சென்னை கார்ப்பரேட் கிளப்'-பின் சிறந்த நடிகர் விருது, கில்லி (2004) - 'தினகரன்' நாளிதழின் சிறந்த நடிகர் விருது, கில்லி (2004) - 'ஃபிலிம் டுடே' சிறந்த நடிகர் விருது, பொதுச்சேவை அறிவிப்புக்கு (2005) வெள்ளி விருது, போக்கிரி (2007) - தமிழின் சிறந்த நடிகருக்கான 'அம்ரிதா மாத்ருபூமி' விருது, போக்கிரி (2007 )- சிறந்த நடிகருக்கான 'இசை அருவி' தமிழ் இசை விருது, வேட்டைக்காரன் (2009) - சிறந்த நடிகருக்கான 'இசை அருவி' தமிழ் இசை விருது, துப்பாக்கி, நண்பன் (2012) - விகடன் சிறந்த நடிகர் விருது... என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான ’புலி’ படத்தின் 'ஏண்டி ஏண்டி' பாடலுடன் சேர்த்து 29 பாடல்கள் பாடியுள்ளார். அவற்றில் இவருக்கு முதலில் பாடும் வாய்ப்புக் கொடுத்த இசையமைப்பாளர் தேவா இசையில் மட்டும் பத்து பாடல்களைப் பாடியிருக்கிறார். 'கத்தி' படத்தின் வசூல் 100 கோடிகளைத் தொட்டதில் தமிழில் ரஜினிக்குப் பிறகு 100 கோடி க்ளப்பில் இணைந்த நாயகன் விஜய்தான்.

சாதனைகள்:
விஜய் நடித்த கத்தி படம் வெளியான முதல் நாளே 15 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரஜினிக்கு பிறகு 100 கோடி வசூல் செய்த முதல் ஹீரோ விஜய்தான் 

விருதுகள்:
காதலுக்கு மரியாதை படத்துக்காக 1998-ல் ஒருமுறையும், 2005-ல் 'திருப்பாச்சி' படத்திற்காகவும் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதினை இருமுறை பெற்றுள்ளார்.   

சிறந்த நடிகருக்கான விகடன் விருது

சேவைகள்:
ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி அன்று ஆதரவற்றோர் இல்லங்களிலும் அரசு மருத்துமனைகளிலும் நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குவது விஜய் அவர்களின் வழக்கம். கடந்த 2009-ம் ஆண்டு  ஜூலை முதல் தனது ரசிகர் மன்றங்களை "மக்கள் இயக்கம்" என்கிற அரசியல் கட்சியாக மாற்றினார். அன்றைய காலகட்டத்தில் ஆளும் திமுக அரசை எதிர்த்து சில போராட்டத்திலும் அந்த இயக்கம் ஈடுபட்டது. 2011-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவை ஆதரித்தது. 

திருச்சி மாவட்ட விஜய் தலைமை நற்பணி இயக்கம் சார்பில் 15 ஏழை ஜோடிகளுக்கு இலவசத் திருமண விழா ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் விஜய் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.
பீரோ, மிக்ஸி, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட 51 சீர்வரிசைப் பொருட்கள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. விழா முடிந்தவுடன் அங்குள்ள பெண்கள் விஜய்யிடம் கேள்விகளைக் கேட்டார்கள். அதற்கு விஜய் அளித்த பதில்கள்: 

தொகுப்பு : வரவணை செந்தில்