திருமணம் என்பது இப்போது ஆடம்பரமான ஒன்றாக மாறிவிட்டது. சாப்பாட்டுக்கு மட்டுமே பல லட்சம் ரூபாய் செலவு செய்கிறார்கள் பலரும். ஆனால், ஓர் இஸ்லாமிய திருமணத்தில், ஆடம்பர செலவு செய்ய வேண்டாம் என்ற முடிவு எடுத்து, மேலும் அப்படி திருமணம் செய்ய ஆகும் தொகையை ஏழைக் குழந்தை களின் படிப்புச் செலவுக்கு அளிக்க முடிவு எடுத்துள்ளார் திருமண வீட்டின் தலைவர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மெளலானா ஆசாத் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருப்பவர், கல்வியாளர் மொகமத் ஆதிக். இவர் தன் பேத்தி கதீஜாவின் திருமணத்தில்தான், மேற்சொன்ன முடிவை எடுத்துள்ளார்.
மொகமத் ஆதிக், தன் பேத்தியின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், மொகமத் அவ்வாறு ஆடம்பரமாக நடத்தாமல் மிகவும் எளிய முறையில் திருமணத்தை மசூதியில் நடத்தி முடித்துள்ளார். அதோடு திருமணத்துக்கு ஆகும் செலவுத் தொகையைக் கொண்டு தன் பேத்தி பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் அமைக்கவும் முடிவு செய்துள்ளார்.

மொகமத் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருவதால் பொருளாதார ரீதியாக மிகவும் வசதியாக இருக்கிறார். அப்படி இருந்தும் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு சாப்பாடு போடவில்லை. மாறாக திருமணத்தில் உலர்ந்த பேரீச்சம்பழமும், பழ க்ரீமும் மட்டும் வழங்கப்பட்டது. இதன் மூலம் தன் குடும்ப திருமண பாரம்பர்யத்தை உடைத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் அழைத்து, விருந்தைக்கூட தவிர்த்து எளிய முறையில் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். தன் பேத்தி பெயரில் அமைக்கப்படும் தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏழைக் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு உதவி செய்ய முடிவு செய்துள்ளார் மொகமத் ஆதிக்.
இது குறித்து அவர் கூறுகையில், ``பெண் சிசு வதைக்கு எதிரான விழிப்புணர்வு நோக்கிலும், ஆண் - பெண் பாகுபாட்டை போக்கவும், மகள்களுக்கு பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், வரதட்சணைக்கு எதிரான செயல்பாடாகவும், எங்கள் குடும்பத்தில் நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வரும் திருமண பாரம்பர்யத்தைத் தகர்த்து எளிய முறையில் நடத்தி இருக்கிறேன்’’ என்றார்.
திருமணத்தில் அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இத்திருமணம் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று பாராட்டப்பட்டு வருகிறது.