அலசல்
Published:Updated:

லோக்கல் போஸ்ட்

லோக்கல் போஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
லோக்கல் போஸ்ட்

புதுச்சேரி நகர்ப்புறத்திலும், கிராமப்புறங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக புதிய சாலைகள் போடப்படாததால் அவை குண்டும் குழியுமாகக் காட்சியளித்தன.

தூத்துக்குடி டு கோவை... துப்பாக்கி நகரமாகும் தொழில் நகரம்!

கோவை மாவட்டத்தில், அண்மையில் நிகழ்ந்த இரண்டு படுகொலைச் சம்பவங்கள் மாநில சட்டம்-ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பியிருக்கின்றன. குறிப்பாக, துப்பாக்கியால் சுடப்பட்டு, சத்யபாண்டி என்பவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம், கோவையில் துப்பாக்கி கலாசாரம் பரவிவருவதை அப்பட்டமாக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். முக்கியமாக, தென் மாவட்டமான தூத்துக்குடியைச் சேர்ந்த முக்கிய ரெளடி ஒருவருக்கு, வட மாநில தாதாக்களுடன் பெரிய தொடர்பு இருப்பதாகவும், `அவர் மூலமாகவே கோவையிலுள்ள அனைத்து ரௌடிக் கும்பல்களிடமும் துப்பாக்கி கலாசாரம் வேகமாகப் பரவிவருகிறது’ என்றும் சொல்கிறார்கள் உளவுத்துறை காக்கிகள்.

லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்

‘‘எங்க ஏரியா... உள்ளே வராதே!’’

திருச்சி மாவட்டத்திலுள்ள முருகூர், கோணப்பாதை, காமாட்சிபுரம் உள்ளிட்ட கிராமங்களின் பேருந்து நிறுத்தம், ஊர் பெயர்ப்பலகை, சாலை எச்சரிக்கைப் பலகை, குடிநீர்த் தொட்டி எனப் பார்க்கிற இடங்களிலெல்லாம் சாதி சார்ந்த நிறக் குறியீடுகள், கொடிகள் வரைந்து வைக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தங்களை ஆதிக்கச் சாதியாக எண்ணி அட்டகாசம் செய்யும் இளைஞர்கள் சிலர், இப்படிப் பொது இடங்களில் ‘இது எங்க ஏரியா... உள்ளே வராதே’ என்று கிறுக்கிவைப்பதால் உள்ளூரைச் சேர்ந்த மற்ற சமுதாய மக்களோடு தேவையில்லாத பிரச்னை உண்டாவதாகக் குமுறுகின்றனர் பொதுமக்கள். “ஒருசில பகுதிகளில் கோயில் கோபுரங்களிலேயே சாதிக்கொடியை நட்டுவைக்கிறார்கள். இந்தத் தவறான போக்கைத் தடுத்து நிறுத்தவேண்டிய அதிகாரிகளோ கண்டும் காணாமல் கடந்து செல்கின்றனர்’’ எனக் குமுறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்

திருமணம் மீறிய உறவு... போஸ்டர் அடித்து ஒட்டிய கணவன்!

வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் திரும்பிய பக்கமெல்லாம் வித்தியாசமான போஸ்டர் ஒன்று அடையாளம் தெரியாத நபர்களால் ஒட்டப்பட்டிருக்கிறது. அதில், தியேட்டர் உரிமையாளர் ஒருவரின் இரண்டு மகன்களின் பெயர், புகைப்படங்களை அச்சிட்டு, ‘ஜாக்கிரதை; இவர்கள் கள்ளக்காதலன்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது குறித்து உள்ளூர் போலீஸாரிடம் விசாரித்தபோது, ‘‘தியேட்டர் உரிமையாளரின் மூத்த மகனுக்குத் திருமணமான பெண் ஒருவருடன் ரகசியமாக உறவு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணும் வீட்டைவிட்டு வெளியேறி அவருடன் சென்றுவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கணவர்தான், இப்படி போஸ்டர் அடித்து, ஊர் முழுக்க ஒட்டி தன் ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார்’’ என்றனர்.

லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்

`பெப்பே’ காட்டும் ‘பெப்பர்’ திருடர்கள்!

நீலகிரி மாவட்டம், கூடலூரில் மிளகுச் சாகுபடி அமோகமாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், மார்க்கெட்டில் எப்போதுமே மவுசு குறையாத மிளகைக் குறிவைத்துத் திருடும் கேரள கொள்ளைக் கும்பல்களின் நடமாட்டம் நீலகிரியில் அதிகரித்திருக்கிறது. குடோன்கள் மற்றும் மண்டிகளிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள மிளகு மூட்டைகள் மிகக்குறுகிய காலத்தில் திருடப்பட்டிருக்கின்றன. சில ‘பெப்பர் திருடர்கள்’ விவசாயிகளின் வீடுகளுக்குள் புகுந்து, சேமிப்பில் வைத்திருக்கும் பெப்பர் மூட்டைகளைத் திருடிச் சென்றிருக்கிறார்கள். இது தொடர்பாக ஒரு சிலரை கேரளாவுக்குச் சென்று நீலகிரி போலீஸார் கைதுசெய்தபோதும் திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இதனால், “பறித்த மிளகை வெயிலில் போட்டு உலர்த்தக்கூட முடியவில்லை” எனப் புலம்பும் விவசாயிகள் காவல் நிலையங்களை முற்றுகையிட்டுவருகிறார்கள்.

லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்

‘‘பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்!’’

புதுச்சேரி நகர்ப்புறத்திலும், கிராமப்புறங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக புதிய சாலைகள் போடப்படாததால் அவை குண்டும் குழியுமாகக் காட்சியளித்தன. இதனால், சாலை விபத்துகள் என்பவை அன்றாட நிகழ்வாகவே மாறிப்போயின. பலகட்ட கோரிக்கைகளுக்குப் பிறகு, தற்போதுதான் சாலை அமைக்கும் பணிகளைத் தொடங்கியிருக்கிறது பொதுப்பணித்துறை. ‘அப்பாடா...’ என பொதுமக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு ஓரிரு நாள்கள்கூடத் தாண்டவில்லை. அதற்குள் அந்தப் புதிய சாலைகளைத் தோண்டி, ஆளுங்கட்சியினரின் பிறந்தநாள் பேனர்களை நட்டுவைக்க ஆரம்பித்துவிட்டனர் அவர்களின் அடிப்பொடிகள். ‘அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என்று அடுத்தடுத்து இவர்கள் பிறந்தநாள் கொண்டாட, பேனர் நட ஆரம்பித்தால் எல்லாச் சாலைகளும் மீண்டும் பழைய நிலைமைக்கே சென்றுவிடும். இதற்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்’ என்றபடி தலையிலடித்துக்கொள்கிறார்கள் அதிகாரிகள்.

லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்

காயம்பட்ட திருடன்... கடுப்பான கொள்ளையர்கள்!

சிவகாசி, செங்கமல நாச்சியார்புரத்திலுள்ள ஒரு வீட்டுக்குள் திருட முயன்ற மர்ம நபர், வீட்டின் படுக்கையறையிலிருந்த மர பீரோவைக் காலால் எட்டி உதைக்க, பீரோவிலிருந்த கண்ணாடி நொறுங்கி அவர் காலில் வசமாகக் கிழித்திருக்கிறது. இதனால், திருட்டு முயற்சியைக் கைவிட்டுவிட்டு ரத்தக் காயத்தோடு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். வீடு முழுக்க ரத்தம் தோய்ந்த கால்தடங்களைப் பார்த்த உரிமையாளர், பீரோவிலிருந்த பணம், நகை தப்பித்ததே என்று நிம்மதிப் பெருமூச்சுடன் போலீஸில் புகாரளித்திருக்கிறார். இதேபோல, வில்லிப்புத்தூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்ட கொள்ளையர்கள், ஒரே நாளில் அடுத்தடுத்த வீடுகளின் கதவை உடைத்துத் திருட முயன்றிருக்கிறார்கள். ஆனால், அந்த வீடுகளில் எங்கு தேடியும் பணமோ, நகையோ சிக்கவில்லை. இதனால் கடுப்பான கொள்ளையர்கள், வீட்டின் உரிமையாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தும்விதமாக அங்கிருந்த பொருள்களை அடித்து, உடைத்துச் சிதறடித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

- தேன்மொழி