நமக்கு எங்கிருந்தாவது பணம் வரவேண்டியிருந்தால் அடிக்கடி போனை பார்த்துக்கொண்டே இருப்போம். மெசேஜ் வந்துவிடாதா என்று காத்துக்கொண்டிருப்போம். ஆனால், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளிக்கு அவரிடம் கேட்காமல் அவரது வங்கிக் கணக்குக்கு 100 கோடி ரூபாய் வந்திருக்கிறது. மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள பாசுதேவ்புர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மொகமத் நசிருல்லா. கூலி வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் பணத்தில் வாழ்ந்து வருகிறார். சில நேரத்தில் வேலை இல்லாமல் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறாராம். அவர் தனது கிராமத்திலுள்ள வங்கியில் கணக்கு ஒன்று திறந்திருந்தார்.

அதில் குறைந்தபட்ச தொகை இல்லை என்று கூறி வங்கிக் கணக்கை அதிகாரிகள் பிளாக் செய்து வைத்திருந்தனர். இந்த நிலையில், திடீரென அவரது வீட்டுக்குச் சில சைபர் க்ரைம் பிரிவு போலீஸார் வந்தனர். மொகமத் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது என்றும், பணத்தை யார் டெபாசிட் செய்தது என்றும் மொகமத்திடம் கேட்டனர். ஆனால் அவர், `நானே சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கிறேன். எனக்கு யார் 100 கோடி ரூபாய் கொடுப்பார்கள்?' என்று கேட்டார்.
உடனே அதிகாரிகள், அது பற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறி, வரும் 30-ம் தேதி காவல் நிலையத்தில் ஆஜராகும்படி கூறிவிட்டுச் சென்றிருக்கின்றனர். இதனால் மொகமத் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடி வருகிறார். அக்கௌன்ட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கூகுள் பே மூலம் பார்த்தால் 100 கோடி ரூபாய் எனக் காட்டுகிறது. நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் செக் செய்து பார்த்தபோதும், 100 கோடி பணம் இருப்பதாகவே காட்டுகிறது. அவரது வங்கிக் கணக்கில் 100 கோடி வருவதற்கு முன்பு வெறும் 17 ரூபாய் மட்டும்தான் இருந்தது.

இது குறித்துப் பேசிய மொகமத், ``எனது வங்கிக் கணக்குக்கு 100 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. போலீஸார் என்னைப் பிடித்துச் சென்று கொலைசெய்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. 100 கோடியால் எனது தூக்கம் போய்விட்டது. எனது வீட்டில் இருப்பவர்களும் அழுதுகொண்டிருக்கிறார்கள். பணம் யாருக்குச் சொந்தமோ அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும்" என்றார். போலீஸார் வழக்கு பதிவுசெய்திருப்பதால் வங்கி நிர்வாகம் தற்காலிகமாக மொகமத் வங்கிக் கணக்கை சஸ்பெண்ட் செய்து வைத்திருக்கிறது.