நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு மருத்துவ உலகம் நவீனமடைந்துவருகிறது. எந்த நோய் வந்தாலும் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையை அனைவரிடத்திலும் ஏற்படுத்திவருகின்றனர் மருத்துவர்கள். ஆனால், அத்தகைய மருத்துவம் அனைத்துத் தரப்பினரையும் சென்று சேர்கிறதா என்கிற கேள்வியை சில மரணங்கள் நம்மிடம் கேட்டுவிடுகின்றன. இன்றளவும்கூட நகரத்தை எட்டிய மருத்துவம், கிராமத்தின் கடைசி குடிசையை எட்டியதா என்றால்... யாராலும் ஆம் என்று சொல்லிவிட முடியாது. அரசாங்கம் தன்பங்குக்கு அவசர உதவிக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையைச் செய்துவந்தாலும், எல்லா நேரங்களிலும் சரியான நேரத்துக்கு அவை வந்துவிடுவதில்லை.

அரசே இப்படியென்றால், மருத்துவத்தைப் பெரும்பாலும் வணிகமாகப் பார்க்கும் தனியார் மருத்துவமனைகளைச் சொல்லவே வேண்டாம். பணமில்லையென்றால் பிணத்தை எடுத்துச்செல்லக்கூட ஆம்புலன்ஸ் நகராது. ஆம்புலன்ஸுக்குக்கூட பணமில்லாமல் பலர், சடலங்களைத் தோளில் சுமந்துசென்ற எத்தனை அவலங்களைப் பார்த்திருப்போம். ஆனால் இவ்வாறு நிகழும்போதெல்லாம் இவை இனியும் வேண்டாம் என மனிதம்கொண்ட சிலர், தங்களின் ஆதரவுக் கரங்களை நீட்டிவருகின்றனர். அந்தக் கரங்களின் நீட்சியாகத்தான் மேற்கு வங்கத்தில் முறையான போக்குவரத்து வசதியின்மையால் சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்குச் செல்லமுடியாமல் தந்தையை இழந்த ஷஃபிகுல் ஹக் என்பவர், இலவச ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கியிருக்கிறார்.
இவர் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்திலுள்ள ராய்கஞ்ச் பிளாக்கின் விதிஹார் பகுதியைச் சேர்ந்தவராவார். ஷஃபிகுல் ஹக் பல விசேஷ நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் தொழிலை நடத்திவருகிறார். இவர் தங்கியிருக்கும் பகுதியிலுள்ள சுற்றுவட்டார கிராமங்களில் அந்த அளவுக்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்பதால் சிலர், ஏழைகளின் கையறு நிலையை தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்தி ஆம்புலன்ஸ் கேட்டு வருவோரிடம் அதிக பணம் கேட்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏழை நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்தச் சூழலில்தான் ஷஃபிகுல் ஹக் தன்னுடைய தொழில் வளர்ந்தபோது, அதிக அளவில் ஆம்புலன்ஸ்கள் இருந்தால் ஏழை நோயாளிகளை எளிதில் நேரத்துக்கு மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியும் என்று யோசித்திருக்கிறார். யோசித்ததோடு மட்டுமல்லாமல் உடனடியாக இலவசமாக இரவுநேர ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கியிருக்கிறார். ஏன் இரவு நேர ஆம்புலன்ஸ் சேவை என்று கேட்டதற்கு, பகலில் கார்கள் நிறைய கிடைக்கும், ஆனால் இரவில் கிராமப்புறங்களில் கார்கள் பெரியளவில் கிடைக்காது என்கிறார் ஷஃபிகுல் ஹக். மேலும் ஷஃபிகுல் ஹக், இரவு எவ்வளவு நேரமானாலும் ஆம்புலன்ஸ் உதவிக்கு அழைக்கலாம் என்று கூறினார்.
ஒருவரின் மரணம், எப்போதும் வெறும் மரணத்தோடு மட்டும் நின்றுவிடுவதில்லை... மாறாக வாழ்வதற்கான, வாழ வைப்பதற்கான வழியைக் காட்டிவிட்டுச் செல்கிறது.