உலகின் முன்னணிப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டரைத் தன் வசப்படுத்தியதிலிருந்து தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.
குறிப்பாக ஊழியர்களின் பணிநீக்கம், புளூ டிக் விவகாரம், போலிக் கணக்குகளின் தடை போன்றவை பேசுப்பொருளாக மாறி சர்ச்சையைக் கிளப்பின. இதுமட்டுமன்றி, “நான் ட்விட்டர் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமா?” என்று மக்களிடம் கருத்துக் கணிப்பு ஒன்றையும்கூட எலான் மஸ்க் நடத்தியிருந்தார்.

இப்படி அடிக்கடி ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டுவரும் எலான் மஸ்க் தற்போது ட்விட்டரின் லோகோவை மாற்றியுள்ளார். அதாவது நீல நிறப் பறவைக்கு பதில் டோஜ்காயின் கிரிப்டோ கரன்சிக்குப் பயன்படுத்தப்படும் நாய் உருவத்தைத் தனது ட்விட்டர் நிறுவனத்தின் லோகோவாக எலான் மஸ்க் மாற்றியுள்ளார். டோஜ்காயின் கிரிப்டோ கரன்சி குறித்து அடிக்கடி ட்விட்டரில் பதிவிட்டுவந்த நிலையில் இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார்.
அவர் டோஜ்காயின் கிரிப்டோ கரன்சிக்குப் பயன்படுத்தப்படும் நாய் உருவத்தை ட்விட்டரின் லோகோவாக மாற்றிய உடனே இந்த கிரிப்டோ கரன்சியின் மதிப்பு 30 நிமிடங்களில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. மார்ச் 26, 2022 அன்று ட்விட்டர் பயனர் ஒருவர் “change bird logo to doge” என்று ட்வீட் செய்திருக்கிறார். தற்போது, சொன்னபடியே லோகோவை மாற்றிவிட்டேன் என்று அந்த நபரை எலான் மஸ்க் டேக்கும் செய்திருக்கிறார்.