இங்கிலாந்தில் 15 ஆண்டுகளாக `சிக் லீவி’ல் (sick leave) இருக்கும் தகவல் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர், 15 ஆண்டுகளாக சம்பளத்தை உயர்த்தவில்லை எனக் கூறி தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கும் சம்பவம் பலருக்கும் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஊழியரின் பெயர் இயன் கிளிஃபோர்ட் (Ian Clifford). இவர், 2008 முதல் ஐ.பி.எம் எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் `சிக் லீவி’ல் இருக்கிறார். இந்த விவகாரத்தில் நிறுவனம், முதலில் அவருக்கு ஆண்டொன்றுக்கு தருவதாக ஒப்புக்கொண்ட 72,037 பவுண்டுகளை, 2008 முதல் 2013 வரை வழங்கி வந்திருக்கிறது. அதன் பின்னர் 2013-ல் நிறுவனம் அந்த நபரை, ஐ.பி.எம் சுகாதாரத் திட்டத்தில் சேர்த்தது.

இந்தத் திட்டத்தின்படி, இதிலுள்ள நபர் 65 வயது வரை, ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ஊதியத்தில் 25 சதவிகிதம் பிடித்தம் செய்யப்பட்டு 75 சதவிகிதம் ஊதியமாக வழங்கப்படும். அதன்படி இயன் கிளிஃபோர்ட்டுக்கு ஆண்டுக்கு 54,028 பவுண்டுகள் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்தது. மேலும், இந்த திட்டத்தில் இருப்பவர்கள் வேலை செய்யவேண்டியதில்லை. அதே சமயம் இறுதிவரை ஊழியராகவே இருப்பார்.
இந்த நிலையில் 2022-ம் ஆண்டு இயன் கிளிஃபோர்ட், தன்னுடைய நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக தனக்கு ஊதிய உயர்வு செய்யப்படாததால், தான் ஊனமுற்றோர் பாகுபாட்டுக்கு ஆளானதாக ஐ.பி.எம் நிறுவனத்தின் மீது வேலைவாய்ப்பு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார். மேலும், நீதிமன்றத்தில் நிறுவனத்தின் சுகாதாரத் திட்டத்தைக் குறிப்பிட்டு, ``வேலை செய்ய முடியாத ஊழியர்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதே திட்டத்தின் நோக்கம். ஆனால், ஊதியம் சரியாக வழங்கப்படவில்லையென்றால் அது முழுமையடையாது" என்று இயன் கிளிஃபோர்ட் கூறினார்.
ஆனால் நீதிமன்றம் அவரின் கூற்றை மறுத்து, `அவருக்குப் பலனளிக்கும் வகையில், நிறுவனம் சரியான நிவாரணம் வழங்கியிருக்கிறது’ என்று கூறி அவரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

இந்தத் தீர்ப்பில் நீதிபதி ஹவுஸ்கோ (Housego), ``வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கலாம், ஆனால், வேலை செய்யாத ஊழியர்களுக்கு அது வேண்டாம். ஆனால், இதுவல்ல என் தீர்ப்பு. ஊனமுற்றோர் மட்டுமே இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய முடியும் என்பதால், இந்த விவாதம் நிலையானது அல்ல. அதுமட்டுமல்லாமல் இந்தத் திட்டம் தனக்கு திருப்தியாக இல்லை எனக் கூறுவது ஊனமுற்றோர் பாகுபாடு அல்ல. ஆண்டுக்கு 50,000 பவுண்டுகளின் மதிப்பு என்பது அடுத்த 30 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்தாலும் கூட, அது அவருக்கு கணிசமான ஊதியமே ஆகும்" என்றார்.