பிரபல தொழிலதிபரும், தியாகராஜர் கல்லூரி குழுமத் தலைவரும், மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்காருமான கருமுத்து கண்ணன் இன்று மரணமடைந்தார்.
அரசியல் மற்றும் கலை, இலக்கியத்துறையில் சிறந்த ஆளுமைகளை உருவாக்கிய மதுரை தியாகராஜர் கலைக்கல்லூரி, நாட்டின் மிகச்சிறந்த தியாகராஜர் பொறியியற்கல்லூரி, ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பை அளித்துவரும் தியாகராஜர் நூற்பாலை என பாரம்பரியமிக்க நிறுவனங்களின் தலைவராகச் செயல்பட்டு வந்தவர் கருமுத்து கண்ணன். இவர் பத்தாண்டுகளுக்கு மேலாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்காராக இருந்து ஆன்மிகப்பணியும் ஆற்றிவந்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் வணிக சமூகத்தில் பிறந்த கருமுத்து கண்ணனின் தந்தை தியாகராஜ செட்டியார், பிரிட்டிஷ் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையில் படித்து அங்குள்ள தமிழ் மக்களின் உரிமைக்காகப் பாடுபட்டார். அங்கு தமிழ் நாளிதழும் நடத்தினார்.

தனித்தமிழ் பற்றாளரான அவர் தமிழகம் திரும்பி தமிழ்நாடு எனும் நாளிதழை நடத்தி ஏராளமான தமிழ் அறிஞர்களுக்கு ஆதரவு அளித்தார். மதுரையில் மீனாட்சி மில் உள்ளிட்ட பல நூற்பாலைகளைத் திறந்து மக்களுக்கு வேலை வாய்ப்பை அளித்தார். அப்படியே பள்ளி, கல்லூரிகளையும் திறந்து கல்விப்பணி ஆற்றினார்.
தியாகராசர் செட்டியாரின் மகன்களில் ஒருவரான கருமுத்து கண்ணன், தந்தை மறைவுக்குப்பின் இளம் வயதிலயே தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தை கவனிக்கத் தொடங்கினார். அதோடு மதுரை நகரின் வளர்ச்சிக்கும் பல உதவிகளைச் செய்தார். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், அனைத்து சமூக மக்களுக்கும் பிடித்தமானவராக இருந்தவர். அதனால்தான் அ.தி.மு.க, தி.மு.க என ஆட்சிகள் மாறினாலும் மீனாட்சியம்மன் கோயில் தக்காராகப் பொறுப்பு வகித்தார்.

எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் கருமுத்து கண்ணன் சமீப நாள்களாக உடல் சுகவீனம் அடைந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென மரணம் அடைந்தார். அவர் மறைவுச்செய்தி கேட்டு மதுரை மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.
கருமுத்து கண்ணன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்துவின் இரங்கல்...
’இதயத்தை இடம்மாற்றிப்போடும் செய்தி, மதுரையில் என் நண்பர் கருமுத்து கண்ணன் காலமாகிவிட்டார். ஒரு கல்வித் தந்தை, ஒரு தொழிலரசர், ஒரு சமூக அக்கறையாளர் மீனாட்சியம்மன் கோயில் தக்கார் என்று மரணம் ஒரே கல்லில் பல கனிகளை அடித்துவிட்டதே! அனைவர்க்கும் என் ஆழ்ந்த ஆறுதல். எனக்கு யார் சொல்வது?’