காதலுக்காக எத்தனையோ பேர் ரத்தம் சிந்தி போராடியிருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் திருமணமான கையோடு மணக்கோலத்தில் காவல் நிலையத்துக்கு வந்து தன் காதலனைத் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டத்திலுள்ள சிர்காவ் என்ற கிராமத்தில் பெண் ஒருவருக்கு அவரின் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துவைத்தனர். ஆனால், அந்தப் பெண் ஏற்கெனவே ஒருவரைக் காதலித்திருக்கிறார். அது குறித்து தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்தப் பெண்ணின் காதல் தெரியவந்தவுடன், உடனே வேறு மாப்பிள்ளை பார்த்து பெற்றோர் திருமணத்தை நடத்தியிருக்கின்றனர்.
அப்படியிருந்தும் அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் தன் காதலனுடன் வெளியேற மணக்கோலத்தில் புறப்பட்டார். அவர் நேராக காவல் நிலையத்துக்குச் சென்று தன்னை, தன்னுடைய காதலனுடன் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் இருவரையும் திருமணம் செய்துகொள்கிறேன் என போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனால் காவல் நிலையத்தில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது. காவல் நிலையத்திலிருந்த பெண் காவலர்கள், அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்கள் சொல்லும் எதையும் அந்தப் பெண் கேட்கத் தயாராக இல்லை. அதோடு கோபத்தில், தன்னிடம் இருந்த மொபைல் போனையும் கீழே போட்டு உடைத்தார். அந்தப் பெண்ணின் குடும்பத்தினரும் காவல் நிலையத்தில் அவரைச் சமாதானப்படுத்த முயன்றனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் பரத்குமார், ``அப்பெண்ணை மீட்டு அவரை அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்திருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.
அந்தப் பெண்ணின் கணவரும் காவல் நிலையம் வந்திருந்தார். அவர், `என் மனைவி தன்னுடைய காதலனையும் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்' என்றார்.