ஒடிசா மாநிலம் கோபிநாத் பூரியில் உள்ள கோயில் ஒன்றில் 2014 ஆம் ஆண்டு விலை உயர்ந்த கோயில் நகைகளை ஒருவர் திருடிச் சென்றிருக்கிறார். தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நகைகளைக் கோயிலுக்கு அருகில் உள்ள பூசாரியின் வீட்டிற்கு வெளியே வைத்திருக்கிறார். மேலும், திருடியதற்கு வருந்தி மன்னிப்பு தெரிவித்து கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
அந்த நபர் எழுதிய கடிதத்தில், “ கோயிலில் யாகம் நடக்கும்போது நகைகளைத் திருடிச் சென்றேன். நகைகளைத் திருடிச் சென்றதால் வாழ்க்கையில் பல பிரச்னைகளை சந்தித்தேன். அதனால்தான் கடவுளிடம் மன்னிப்பு கேட்டு கோயில் நகைகளைத் திருப்பித் தர முடிவு செய்தேன். எனது பெயரையோ, முகவரியையோ இந்த கடிதத்தில் நான் குறிப்பிடவில்லை” என்று எழுதி இருக்கிறார்.
திருடிய நகைகளை கோயில் பூசாரியின் வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டு சென்ற அந்த பையில் சுமார் 4 லட்சம் மதிப்பிலான கிருஷ்ணர் மற்றும் ராதையின் தலைக்கவசம், காதணிகள், வளையல்கள், புல்லாங்குழல் ஆகியவை இருந்திருக்கிறது. அதுமட்டுமின்றி அந்த நபர் 201 ரூபாயை தட்சணையாகவும், 100 ரூபாயை அபராதமாகவும் வைத்துச் சென்றிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய கோயில் பூசாரி , “ கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் திருட்டு நடந்ததை அடுத்து உடனடியாக லிங்கராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தோம். எங்கள் கோவிலுக்கு காவல்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். யாகம் செய்ய அருகிலுள்ள கிராமத்திலிருந்து வந்த எங்கள் உள்ளூர்வாசிகள் மற்றும் சில கோயில் பூசாரிகளை போலீசார் விசாரித்தனர். திருடியதற்கான எந்தத் தடயமும் இல்லாததால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் இதுதொடர்பாக பேசிய மற்றொரு கோயில் பூசாரியான கைலாஷ் பாண்டா, “ காவல்துறையினர் ஒரு வருடம் முழுவதும் தேடி நகைகள் கிடைக்காததால் நாங்கள் நம்பிக்கையை இழந்தோம். மிகவும் சிரமப்பட்டு, தெய்வங்களுக்கு புதிய நகைகளை வாங்கினோம். கடவுள் அந்த நபரை தண்டித்ததால்தான் திருடிய நகைகளை அவராகவே கொண்டு வந்து தந்திருக்கிறார்" என்று கூறியிருக்கிறார்.