ராஜஸ்தானில், ஆற்றில் குளிக்கச் சென்ற கணவனின் காலைக் கவ்விய முதலையை, மனைவி ஒற்றை ஆளாய் பிரம்பால் அடித்துவிரட்டிய சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.
ராஜஸ்தானில் கடந்த செவ்வாய்க்கிழமை, மாலை நான்கு மணியளவில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பன்னே சிங் என்பவர், சம்பல் ஆற்றில் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டியிருக்கிறார். முழங்கால் அளவே இருந்த தண்ணீரில், குளிக்கலாமென்று பன்னே சிங் இறங்கியிருக்கிறார். அப்போது திடீரென எங்கிருந்தோ வந்த ஒரு முதலை பின்னாலிருந்து பன்னே சிங்கின் காலைக் கவ்வியது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பன்னே சிங்கின் மனைவி விமல் பாய், கணவனைக் காப்பாற்றும் செயலில் சற்றும் யோசிக்காமல் உடனடியாக இறங்கினார். தொடர்ந்து விமல் பாய், தன்னுடைய கையிலிருந்த பிரம்பால் முதலையைக் கடுமையாகத் தாக்க, முதலையும் பன்னே சிங்கின் காலை விட்டுவிட்டது. அப்படியிருந்தும் முதலை மீண்டும் அவரைத் தண்ணீரில் இழுக்க வந்தபோது, விமல் பாய் முதலையின் கண்ணில் பிரம்பால் அடித்ததும் முதலை பின்வாங்கியது.
பிறகு பன்னே சிங்கும், விமல் பாயும் பாதுகாப்பாக அந்த இடத்தைவிட்டு வந்துவிட்டனர். அதைத் தொடர்ந்து பன்னே சிங், காலில் ஏற்பட்ட காயம் காரணத்தால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்த மருத்துவர்கள், அவரை கரௌலியிலுள்ள மற்றொரு மருத்துவமனைக்குச் செல்ல பரிந்துரைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பன்னே சிங், ``முதலை தன்னுடைய தாடையால் என்னுடைய காலைப் பிடித்து தண்ணீரில் இழுக்க முயன்றது. அப்போது என்னால் முடித்த அளவுக்கு முதலையின் வயிற்றுப்பகுதியைப் பிடித்துக்கொண்டேன். என்னுடைய மனைவி பிரம்பால் முதலையை தாக்கினார். பிறகு அருகிலிருந்த மற்றவர்களும் ஓடிவந்து, முதலையிடமிருந்து என்னைக் காப்பாற்றினர்" என்று தெரிவித்தார்.