சில சமயங்களில் மன அழுத்தம் காரணமாக மனிதர்கள் அழுவதுண்டு. அதேபோல அதிக அழுத்தம் ஏற்படும்போது செடிகளும், தாவரங்களும் கூட அழும் என பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவை அழும்போது அதன் சத்தத்தைக் கேட்க முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் (Tel Aviv University) உள்ள ஆராய்ச்சியாளர்கள் தக்காளி மற்றும் புகையிலை செடிகளை வைத்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். செடிகளை வெட்டும்போதோ அல்லது தேவையான அளவு தண்ணீர் வழங்காதபோதோ அவற்றிற்கு அழுத்தம் ஏற்படுகிறது. அப்படி அதிக அழுத்தம் ஏற்படும்போது செடிகள் அழுகின்றன என்றும் அவை அழும்போது ஒவ்வொரு விதமான சத்தத்தை எழுப்புகின்றன என்றும் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி செடிகள் அழும் சத்தம் மனித காதுகளுக்கு கேட்காமல் இருக்கலாம் ஆனால் வௌவால், எலிகள், பூச்சிகள், போன்ற உயிரினங்களுக்குக் கேட்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆராய்ச்சிக்காக 10 சென்டிமீட்டர் தூரத்தில் மைக்ரோஃபோன்கள் வைக்கப்பட்டது. அப்போது செடிகளிலிருந்து 20 முதல் 250 கிலோ ஹெர்ட்ஸ் வரை சத்தம் எழுந்ததாகவும், அவை அந்த மைக்ரோஃபோனில் பதிவானதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.