உத்தரப்பிரதேச மாநிலம், அலிகர் மாவட்டத்தில் உள்ள இக்லாஸ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பப்லு சிங் (30). இவரின் மனைவி சுமன் தேவி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்தில்தான் அடிக்கடி சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே பப்லு தன் மனைவியை அழைத்துக்கொண்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு வந்தார். ஆனால் அங்கு இருந்த ஊழியர்கள், சுமன் தேவியை பிரசவத்திற்கு அனுமதிக்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்கவேண்டும் என்று கேட்டனர். ஆனால் பப்லுவிடம் பணம் இல்லை. சுமன் தேவியோ பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.

தன் மனைவியை பிரசவத்திற்கு அனுமதிக்கும்படி பப்லு கெஞ்சினார். பணம் இல்லாமல் சேர்க்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர் ஊழியர்கள். அதோடு அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும்படி, அங்கு இருந்த செவிலியர்கள் கேட்டுக்கொண்டனர். பப்லு வேறு வழியில்லாமல் தன் மனைவியை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது சுமன் தேவிக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டதால் அங்கு இருந்த பெண்களும், அந்த வழியாகச் சென்ற பெண்களும் சேர்ந்து சாலையில் அவருக்குப் பிரசவம் பார்க்க ஆரம்பத்தினர். சேலையை தடுப்பாக பிடித்துக்கொண்டு சுமன் தேவிக்கு பிரசவம் பார்த்தனர். ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிகழ்வை யாரோ மொபைல் போனில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டனர். இதனால் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி இக்லாஸ், சுகாதாரத்துறை மையத்திற்கு வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளார். இது குறித்து இக்லாஸ் சுகாதார மையத்தின் பொறுப்பாளர் ரோஹித் கூறுகையில், ’செவிலியர்களிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. லஞ்சம் கேட்டது குறித்து விசாரித்து வருகிறோம். தற்போது குழந்தையும், தாயும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்தார்.