முக்கிய அரசியல் புள்ளிகள், திரைத்துறை பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகளிலிருந்த ப்ளூ டிக்கை நீக்கியிருக்கிறது ட்விட்டர்.
மிழக முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி, ரத்தன் டாடா, சினிமா பிரபலங்களான ரஜினிகாந்த், விஜய், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி, கீர்த்தி சுரேஷ், கார்த்தி, சுருதிஹாசன், லோக்கேஷ் கனகராஜ், இசை அமைப்பாளர், ஏ ஆர் ரஹ்மான், ஜி வி பிரகாஷ், சந்தோஷ் நாராயணன், நட்சத்திர வீரர்களான தோனி, விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், ரோஹித் ஷர்மா ஆகியோரின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது. மேலும் உலக அளவில் அதிகமானோரால் பின்தொடரப்பட்ட ரொனால்டோவின் ப்ளூ டிக் உட்படப் பல கணக்குகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாகப் பயனாளிகளின் அங்கீகரிக்கப்பட்ட கணக்கு என்பதைக் குறிக்கும் வகையில் சமூகத்தில் உள்ள முக்கிய நபர்களின் கணக்குகளுக்கு ப்ளூ டிக் வழங்கப்படுவது நடைமுறையிலிருந்தது, இதற்காக எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. ஆனால் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தைத் தனதாக்கிய பிறகு பல்வேறு மாறுதல்களைக் கொண்டுவந்தார். அதில் முக்கியமானதாக, பயனாளிகளில் அங்கீகரிக்கப்பட்ட டிவிட்டர் கணக்குகள் வைத்திருப்போர், அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என முன்பே அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில் ப்ளூ டிக்கை தொடர்ந்து வைத்திருக்க மாதம் 8 டாலர்கள் துவங்கி கட்டணத்திற்கான தொகை நிர்ணயிக்கப்பட்டது.
இந்த ஏப்ரல் மாத துவக்கத்தில், கட்டணம் செலுத்தாதவர்களின் ப்ளூ டிக் நீக்கப்படும் எனக் கூறியிருந்தது போலவே தற்போது நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கட்டணம் செலுத்தியுள்ள கமல்ஹாசன், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட சிலரின் கணக்குகளில் ப்ளூ டிக் நீடிக்கிறது.