பிடிக்காத ஒரு நபரைத் திட்டுவது, ஜாடைமாடையாகப் பேசுவது, அவர்கள் இல்லாத நேரத்தில் புறம்பேசுவது, போன்றவையெல்லாம் மனிதர்கள் காட்டும் இயல்பான பழியுணர்ச்சி முறை. இப்போது ஒரு படி மேலே சென்று சமூக வலைதளங்களில் ஒருவரை பற்றி ஒருவர் வீடியோக்களில் பேசி பதிவிடுவதும் நடந்து வருகிறது.
ஆனால் ஆஸ்திரேலியா நாட்டில் மர்மநபர் ஒருவர் வித்தியாசமான முறையில் தன்னுடைய பழியுணர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.

மார்ச் 20-ம் தேதி முதல், மே மாதம் 15-ம் தேதி வரை ஆஸ்திரேலியா நாட்டில் பல்வேறு காவல் நிலையங்களில் ஒரே மாதிரியான புகார்களை பல்வேறு பெண்கள் பதிவு செய்துள்ளனர். அந்தப் புகாரில், `பயன்படுத்திய' ஆணுறைகளை ஒரு கடிதத்துடன் இணைத்து தங்களுக்கு யாரோ ஒரு மர்ம நபர் கொரியர் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரிகள் பேசியபோது, ``ஆஸ்திரேலிய நாட்டில் மெல்பர்ன் பகுதியில் வாழும் பல பெண்கள், தங்களுக்கு வந்த கொரியர் பற்றி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருக்கிறார்கள். ஒரே மாதிரியான புகார் என்பதால் ஒருநபரோ அல்லது ஒரு கும்பலோ இதைச் செய்து இருக்கலாம் என்ற பாணியில் விசாரனையைத் தொடங்கினோம்.

விசாரணையின் போது அந்தப் பெண்களுக்கு வந்த கொரியரில் கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று இருக்கிறது. அத்துடன் சில ஆணுறைகளையும் இணைத்துள்ளார்கள். அதில் பயன்படுத்தி ஆணுறைகளும் இருந்தன. இதுவரை 65 பெண்கள் தங்களுக்கு இது போன்ற கொரியர் வந்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார்களைப் பதிவு செய்துள்ளனர்.
சில பெண்களுக்கு மீண்டும் மீண்டும் கொரியர் வந்துள்ளதாகவும் புகார்களில் தெரிவித்து இருக்கிறார்கள். அதனால் குறிப்பிட்ட பெண்களைப் பழிவாங்கும் எண்ணத்துடன் சம்பந்தப்பட்ட நபர் அல்லது கும்பல் ஈடுபட்டு இருக்கிறதா என்ற நோக்கத்துடன் விசாரணை செய்து வருகிறோம்" என்று தெரிவித்து உள்ளார்.