Published:Updated:

வாளியில் பச்சிளம் குழந்தை; காப்பாற்ற தூக்கிக்கொண்டு ஓடிய போலீஸ் - வைரல் வீடியோ பின்னணி!

குழந்தை இருந்த வாளி

இளம்பெண் கணவரை பிரிந்து 9 வயது மகனுடன் வாழ்ந்து வரும் நிலையில் கர்ப்பம் அடைந்துள்ளார். யாருக்கும் தெரியாமல் கர்ப்பத்தை மறைத்த அந்தப் பெண், பிரசவ வலி வந்ததும் வீட்டிலேயே குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

Published:Updated:

வாளியில் பச்சிளம் குழந்தை; காப்பாற்ற தூக்கிக்கொண்டு ஓடிய போலீஸ் - வைரல் வீடியோ பின்னணி!

இளம்பெண் கணவரை பிரிந்து 9 வயது மகனுடன் வாழ்ந்து வரும் நிலையில் கர்ப்பம் அடைந்துள்ளார். யாருக்கும் தெரியாமல் கர்ப்பத்தை மறைத்த அந்தப் பெண், பிரசவ வலி வந்ததும் வீட்டிலேயே குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

குழந்தை இருந்த வாளி

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் ஆறன்முழா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், வீட்டில் குழந்தையை பிரசவித்துள்ளார். பின்னர், அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து செங்கன்னூரில் உள்ள ஒரு நர்ஸிங் ஹோமுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து, பெற்றெடுத்த குழந்தை எங்கே எனக் கேட்டுள்ளார்கள்.

அதற்கு அந்தப் பெண் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதுடன் இறுதியாக, குழந்தை இறந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் செங்கன்னூர் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் ஆஸ்பத்திரிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பெண்ணுடன் வந்திருந்த அவரின் 9 வயது மகன், குழந்தை வீட்டில் வாளியில் இருப்பதாகக் கூறி உள்ளான். இதைத் தொடர்ந்து போலீஸார் ஆறன்முழாவில் உள்ள இளம் பெண்ணின் வீட்டுக்குச் சென்று பரிசோதித்தனர்.

வாளியுடன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடும் போலீஸ்
வாளியுடன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடும் போலீஸ்

அங்குள்ள குளியலறையில் ஒரு வாளியில் குழந்தையை வைத்து அதன் மீது துணியைப்போட்டு வைக்கப்படிருந்தது. போலீஸார் வாளியை எடுத்து துணியை விலக்கிப் பார்த்தனர். குழந்தை இறந்த நிலையில் இருக்கலாம் என போலீஸார் கருதிய நிலையில், குழந்தையிடம் இருந்து லேசான சத்தம் கேட்டுள்ளது.

உடனே போலீஸார் குழந்தையைக் காப்பாற்ற வாளியை எடுத்துக்கொண்டு வேகமாக ஜீப்பை நோக்கி ஓடினர். பின்னர் ஜீப்பில் பயணித்து அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் குழந்தையைச் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தை கொண்டுசெல்லப்பட்டது. அங்கு குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த இளம்பெண் கணவரை பிரிந்து 9 வயது மகனுடன் வாழ்ந்து வரும் நிலையில் கர்ப்பம் அடைந்துள்ளார். வெளியில் யாருக்கும் தெரியாமல் கர்ப்பத்தை மறைத்த அந்தப் பெண், பிரசவ வலி வந்ததும் வீட்டிலேயே குழந்தை பெற்றெடுத்துள்ளார். குழந்தையைக் கொன்றுவிடும் நோக்கத்தில் பாத்ரூமில் உள்ள வாளியில் வைத்ததுடன், குழந்தை மீது துணியையும் போட்டு வைத்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு ரத்தப்போக்கு அதிகமானதால் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்குச் சென்றுள்ளார். ஆஸ்பத்திரியில் மருத்துவர் சந்தேகத்தின் பெயரில் போலீஸுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்தே குழந்தை மீட்கப்பட்டது.

இந்நிலையில், போலீஸார் வாளியுடன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. குழந்தையின் உயிரைக் காக்க ஓடிய போலீஸாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், ``குழந்தையை மீட்ட போலீஸ் டீமுக்கும், போலீஸுக்கு தகவல் அளித்த செங்கன்னூர் நர்ஸிங்ஹோம் டாக்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வாளியில் இருந்த துணியை எடுத்துப் பார்த்தபோது குழந்தை இருப்பதைக் கண்டதும், அந்த பக்கெட்டை எடுத்துக்கொண்டு போலீஸ் ஓடிச்சென்ற காட்சி என் மனதில் இருந்து மறையவில்லை. குழந்தையின் சகோதரனான 9 வயது சிறுவன் சொன்ன தகவலுக்கு முக்கியத்துவம் அளித்து வீட்டில் சென்று குழந்தையை மீட்ட போலீஸுக்கு நன்றி. இப்போது குழந்தை கோட்டயம் மெடிக்கல் காலேஜில் தீவிர சிகிச்சை பிரிவில் கவனிப்பில் உள்ளது. பிறந்த உடனேயே பெரிய போராட்டத்தில் இருந்து மீண்டு வந்த அந்தக் குழந்தைக்கு வாழ்க்கையும் திரும்ப கிடைக்கும் என நம்புகிறேன்" என்றார்.