"நண்பர்களோட ஒகேனக்கல் போய்ட்டு திரும்பி வரும்போது, வழியில யானையைப் பார்த்தேன். என் பேரு முருகேசன். அதனால, பயமில்லாம நம்ம அண்ணன் விநாயகன்தானே நிற்குறான்னு மனசுல நினைச்சிகிட்டு யானைகிட்டப் போய்ட்டேன். 'உன் தம்பி முருகேசன் வந்திருக்கேன்பா'ன்னு கையெடுத்துக் கும்பிட்டேன். என்னையவே பார்த்துக்கிட்டிருந்துச்சு.
அதுக்கப்புறம், அது காட்டுக்குள்ள போய்டுச்சா இல்லையான்னுகூட எனக்குத் தெரியாது. அங்கருந்து 3 கிலோமீட்டர் வந்தபிறகுதான், எனக்கு சுயநினைவே வந்தது. ஆனா, அதுக்குள்ள என்மேல வழக்குப்பதிவு செய்து 10,000 ரூபாய் அபராதம் விதிச்சிட்டாங்க” என்று இப்போதும் பசுபதி-வடிவேலு நடித்த வெடிகுண்டு முருகேசனைப்போல வெள்ளந்தியாகத்தான் பேசுகிறார் மீசை முருகேசன்.

ஒகேனக்கல் பகுதியில் மரக்கிளைகளை ஒடித்து தின்றபடி பசிவெறியோடு நின்றிருந்த காட்டு யானையை பேசி விரட்டுகிறேன் என்கிற பெயரில் காமெடி வித்தை காண்பித்து யானையை கோபத்தில் பிளிற வைத்து வீடியோ வெளியிட்ட பென்னாகரத்தைச் சேர்ந்த மீசை முருகேசன் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு 10,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்கள். அபராதத்தை செலுத்திவிட்டு வெளியே வந்த மீசை முருகேசனிடம் "ஏன் அப்படி செய்தீர்கள்? காட்டு யானை உங்களை தாக்கியிருந்தால் உயிருக்கே ஆபத்தாகியிருக்குமல்லவா?" என்று கேட்டேன்.
“அதான், சொன்னேனே? என் அண்ணன் என்னை எப்படி தாக்குவார்? நான் வேணும்னே யானைகிட்ட போகல. உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு என்ன நடந்ததுன்னே தெரியாது. சுயநினைவே இல்லாம இருந்தேன்னுதான் சொல்லணும். யானை என்னை ஒன்னும் பண்ணாததுக்கு காரணம் நாங்க கும்பிடுற மேக மாரியம்மன்தான். எனக்கு சின்ன வயசுல இருந்தே கடவுள் பக்தி அதிகம். எங்க வீட்டு பக்கத்துலயே ஒரு பழைய மரம் இருந்தது. அங்கேயே, கோவில் கட்டி கும்பிட்டுகிட்டு வர்றோம். கடவுளோட ஆசீர்வாதம்தான் ஆடு, மாடு மேய்ச்சுக்கிட்டிருந்த என்னை 20 வருசம் கழிச்சி அதே இடத்துல 16 ஏக்கர்ல நிலம் வாங்க வெச்சது. அந்த கடவுளோட ஆசி இருக்கவேதான், இப்போ என்னை யானை ஒன்னும் பண்ணல. யானைகிட்டப் போகும்போது, நான் கும்பிடுற மேகமாரியம்மன் என்மேல இறங்கிடுச்சி. என்மேல இருந்த மாரியம்மாவோட சிங்க முகத்தைப் பார்த்ததும் யானை பயந்துட்டு என்னை ஒன்னும் பண்ணல. யானை கண்ணுக்கு நான் சிங்கமா தெரிஞ்சிருக்கேன்.

அதனாலதான், அப்படியே நின்னுடுச்சி. இல்லைன்னா என்னை தூக்கிப்போட்டு மிதிச்சி சட்னியாக்கிட்டிருக்கும்" என்கிறவரிடம் "யானை முகமோ சிங்க முகமோ.. அதெல்லாம் இருக்கட்டும். நீங்க யானைக்கிட்ட போகும்போது குடிச்ச முகத்தோட போனதா வனத்துறை அதிகாரிகள் சொல்றாங்களே?" என்று கேட்டேன். உடனே அவரது முகம் சிவந்த முகமாக மாறியது.
"நான் குடிச்சது சத்தியமா உண்மைதான். ஒகேனக்கல்ல குடிச்சிட்டு ஜாலியா குளிச்சிட்டு திரும்பி வரும்போதுதான் யானைகிட்டப் போய்ட்டேன். மறுநாள் வனத்துறை அதிகாரிங்க எங்கருக்கீங்கன்னு கேட்டு வந்துப் புடிச்சிட்டாங்க. 10 ஆயிரம் ரூபாய் ஃபைன் கட்டினாத்தான் வெளில விடுவோம்னு சொன்னாங்க.
என் பொண்டாட்டித்தான் வந்து ஃபைன் கட்டி என்னை கூப்ட்டு போனா. எனக்கு மூனு பொண்ணு, ஒரு பையன்னு மொத்தம் நாலு பிள்ளைங்க. என் மூனு பொண்ணுங்களும் 'எதுக்குப்பா இப்படி பண்ணீங்க'ன்னு பயங்கரமா திட்டுறாங்க. 'உனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சி'ன்னு பொண்டாட்டியும் திட்டுறா. இப்படி எல்லோரும் என்னை திட்டுறாங்க. என்னால குடிக்காமலும் இருக்க முடியாது; சாமி இறங்கிடுச்சுன்னா யானைகிட்டப் போகாம இருக்கவும் முடியாது. வேணும்னா, என்னை வீட்டுக்குள்ளேயே அடைச்சி வைக்கச் சொல்லுங்க, இருந்துக்கிறேன். எனக்கு இப்போ 55 வயசாகுது. பள்ளிக்கூடம் பக்கம் போனதே இல்ல. இப்போ, என் வீடியோவை உலகமே பார்த்திருக்கு. நான் உலக சாதனைதான் படைச்சிருக்கேன். ரொம்பப் பெருமையா இருக்கு. அந்த சந்தோஷமே போதும்" என்கிறார் சீரியஸாக.
இதுகுறித்து, பென்னாகரம் வனச்சரக அலுவலர் முருகனிடம் நான் பேசியபோது,"குடித்துவிட்டுதான் அந்த போதை ஆசாமி யானையிடம் சென்றிருக்கிறார். ஒகேனக்கல் பகுதியில் யானைகள் சாலைகளில் அடிக்கடி வருவது சகஜம்தான். அதற்காக, சுற்றுலா வரும் பயணிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு யானைகள் அருகில் சென்று செல்ஃபி எடுப்பதோ, கல்லால் அடித்து துன்புறுத்துவதோ கூடாது. யானை நின்றிருந்தால் வாகனத்தில் வேகமாக சென்றுவிடவேண்டும்.
மாறாக, யானைக்கு அருகில் சென்று செல்ஃபி எடுப்பது, வாகனத்தின் விளக்குகளை ஒளிரச்செய்வது போன்றவற்றைச் செய்தால் யானைக்கு கண்கள் கூசும். அதன்பிறகு, கோபத்துடன் நம்மை தாக்கவரும். பின்பு, உயிருக்கே ஆபத்துதான். அதனால், சுற்றுலா பயணிகள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்வது முக்கியம். தற்போது, யானையிடம் சென்ற போதை நபருக்கு வனவிலங்கு சட்டத்தின்படி ஃபைன் மட்டும்தான் போட்டோம். மீண்டும் மீண்டும் அவர் இதே செயலை செய்தாலோ, அவரைப் பார்த்துக்கொண்டு யாராவது யானையின் அருகில் சென்று இப்படி நடந்துகொண்டாலோ வெளியில் வராதபடி சிறையில் அடைத்துவிடுவோம்" என்று எச்சரிக்கிறார்.
யானையை அடக்க பாகனும் அங்குசமும் இருக்கு. இந்தமாதிரி ஆட்களை அடக்க என்ன செய்றதுன்னு தெரியல என்று விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறது வனத்துறை.