எந்த வேலைகளைச் செய்யும்போதும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது. சாப்பிடும் போது, உறங்குவதற்கு முன்பு, ஏன் கழிவறைகளிலும் போனை உபயோகிக்காவிடில் எதுவும் நடப்பதில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.

இந்நிலையில், ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள `Debu - chan’ என்ற உணவகம் ஒன்று, தங்களுடைய உணவகத்தில் சாப்பிடும் வாடிக்கையாளர்கள் பிஸியான நேரத்தில் ஸ்மார்ட்போன்கள் உபயோகிப்பதற்குத் தடை விதித்துள்ளது.
``பரபரப்பாக உணவகம் இயங்கிக் கொண்டிருக்கும்போது சாப்பிட வருபவர்கள் நான்கு நிமிடங்களாவது உணவை ருசித்துச் சாப்பிடாமல், ஸ்மார்ட்போனில் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நாங்கள் பரிமாறும் நூடுல்ஸ் மிகவும் மெல்லியதாக ஒரு மில்லிமீட்டர் அகலம் மட்டுமே இருக்கும். எனவே அவை மிக விரைவாக கெட்டுப்போய்விடும். நான்கு நிமிடங்கள் வரை காத்திருப்பது அந்த உணவுக்கு மோசமான சுவையை உண்டாக்கிவிடும்.
உணவகத்தில் சீனாவின் ஸ்பெஷல் நூடுல்ஸ் உணவு (Ramen) வழங்கப்படுகிறது. 33 இருக்கைகள் கொண்ட உணவகத்தில் பிஸியான நேரங்களில் இருக்கைக்காக 10 பேர் வரை காத்திருப்பதுண்டு.

இருக்கைகள் நிரம்பியவுடன் மக்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு, ஸ்மார்ட்போன்களை கவனிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதை நிறுத்துங்கள் என நான் அவர்களிடம் சொல்ல வேண்டியுள்ளது’’ என்று உணவகத்தின் உரிமையாளர் கோட்டா காய் (Kota Kai) தெரிவித்துள்ளார்.
பிறர் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும், உணவின் தரத்தைத் தக்கவைக்கவும், சாப்பிடும் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சாப்பிடும் நேரத்தில், ஸ்மார்ட்போன்களை உபயோகிக்கக் கூடாது என்ற உணவகத்தின் அறிவிப்பு தற்போது வைரலாகி வருகிறது.