தன் மகளின் அழைப்பை ஏற்று மலேசியப் பிரதமர் மகாதீர் ஆடிய அழகு நடனம்தான் தற்போது இணையமெங்கும் செம்ம வைரல்.

மலேசிய அரசின் ஏழாவது பிரதமராகப் பதவி வகிப்பவர், முஹமது மஹதீர். மலேசிய மக்களின் பிரியத்துக்குரிய பிரதமராக வலம் வருகிறார். தன் முதிய வயதிலும் தவறாமல் உடற்பயிற்சிகளையும் உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்து உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருபவர்.
மகாதீரின் மகள் மரீனா. இவர் பல்வேறு தொண்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மலேசியாவின் சபாஹ் சர்வதேசக் கருத்தரங்கு மையத்தின் நிகழ்வொன்றில் கலந்துகொள்ள பிரதமர் வருகை தந்திருக்கிறார். அதில் நடைபெற்ற கொண்டாட்ட பார்ட்டியில் மகள் மரீனா நடனமாடியபடியே, தந்தை மகாதீரையும் ஆடுவதற்கு அழைத்தார்.

அந்த உற்சாகத் தருணத்தில் மகளோடு இணைத்துக்கொண்டு, சின்னச் சின்ன அசைவுகளால் அட்டகாச நடனத்தை நிகழ்த்தினார், 94 வயது இளைஞரான மகாதீர். இதைக் கண்டு மகிழ்ந்த பார்வையாளர்கள் உற்சாக ஒலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
இடமும் வலமும் மாறி மாறி கால்களை எட்டு வைத்து, இடுப்பை அப்படி இப்படி என அசைத்து, முன்னும் பின்னும் நகர்ந்து வட்டமடித்து.. சிம்பிள் ஸ்டெப்புகளால் அரங்கிலிருந்த அனைவர் மனதையும் கொள்ளை கொண்டார், மகாதீர். தற்போது இணையவாசிகளின் 'கியூட்' கமென்ட்களை அள்ளி வருகிறார்.
பிரதமர் பதவியின் வேலைப்பளு கொடுக்கும் பிரஷரையும், தனது வயதையும் தாண்டி தன்னை இவ்வளவு உற்சாகமாக வைத்திருக்கிறாரே என ஆச்சர்யத்தையும் கைதட்டல்களையும் பொழிந்து வருகிறது வலையுலகம்.
உங்களுக்கு இன்னும் வயசாகல பிரதமரே!