பள்ளியில் நாம் கற்றுக் கொள்ளும் விஷயங்கள், குறிப்பாக கணிதம், வேதியியல், இயற்பியல் போன்றவை நிஜ வாழ்க்கையில் நமக்குப் பெரிதும் உதவுவதில்லை என்று நம்மில் பலர் அடிக்கடி ஆதங்கப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் சமூகவலைத்தளமான ட்விட்டரில் பெண் ஒருவர் கேட்ட கேள்விக்கு, மற்றொரு பயனர் முக்கோணவியலைப் பயன்படுத்தி பதில் அளித்திருப்பது இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
பல்லவி பாண்டே என்ற பெண், தான் கறுப்பு நிற உடையணிந்து ஒரு படிக்கட்டுக்கு முன்பு நிற்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு அதனுடன் `என் உயரத்தை யூகியுங்கள்!' என்ற கேப்ஷனுடன் ட்விட்டரில் பவிட்டிருந்தார். மற்ற பயனர்கள் அனைவரும் தங்களால் முடிந்த அளவுக்கு பல்வேறு யூகங்களைப் பதிவிட, மிஸ்டர் நோபடி (Mr.Nobody) என்ற கணக்கை உடைய நபர் இந்த சவாலைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு, முக்கோணவியலைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணின் உயரத்தை கணித்திருந்தார்.
அவர், ``உங்களைப் பார்க்க "5' 4.5" உயரம் போல் தெரிகிறது, உண்மையை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்” என்று பதிவிட்டிருந்தார். மேலும் அவர் தன் கணக்கீடுகளைக் காட்ட ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். அவரது கணக்கு சரியா, இல்லையா என பலரும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்க, மறுபுறம் அவரது முயற்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இதற்கிடையில் மிஸ்டர் நோபடி (Mr. Nobody) -யின் ட்வீட்டுக்கு பதிலளித்திருந்த பல்லவி பாண்டே, ``உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துகள். ஆனால் உங்கள் கணிப்பைவிட நான் மிகவும் உயரமானவள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ``நண்பா பலர் நிஜ வாழ்க்கையில் பத்தாம் வகுப்புக்குப் பிறகு முக்கோணவியலைப் பயன்படுத்தியதில்லை. ஆனால், அதற்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளீர்கள்” என்றும் நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார் பல்லவி பாண்டே. மிஸ்டர் நோபடியின் முயற்சியைப் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். அத்துடன் அவரது பதிவும் வைரலாகி வருகிறது.