ஆன்மிகத்தில் சிலர் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருப்பது வழக்கம். அதைச் சிலர் தவறாகப் பயன்படுத்திக்கொள்வதுண்டு. கென்யாவில் பால் தேங்கே மெக்கன்சி என்ற பாஸ்டர், தன்னிடம் வருபவர்களிடம் `உலகம் அழியப்போகிறது' என்றும், `யேசுவைக் காண விரும்புபவர்கள், மாலிண்டி என்ற இடத்தில் இருக்கும் சகஹோலா வனப்பகுதியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், யாரும் நோன்பைக் கைவிடக் கூடாது என்றும், அப்படிக் கைவிட்டால் காட்டில் தலைமறைவாக வாழும்படியும் கேட்டுக்கொண்டார். சகஹோலா வனப்பகுதி 800 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இங்குதான் மெக்கன்சியின் பேச்சைக் கேட்டு அவருடைய ஆதரவாளர்கள் பல நாள்கள் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்துவந்திருக்கின்றனர். இதில் சாப்பிடாமலிருந்து இதுவரை 200-க்கும் அதிகமானோர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இரண்டு நாள்களுக்கு முன்பு மேலும் 22 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் சாப்பிடாமலிருந்து உயிரை விடக் காரணமாக இருந்ததாக மெக்கன்சி உட்பட 26 பேரை கென்ய போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். சாதாரண டாக்ஸி டிரைவரான மெக்கன்சி, பாஸ்டராகி சொந்த டி.வி சேனல் தொடங்கி... 800 ஏக்கர் பரப்பளவில் பண்ணையை ஆரம்பித்திருக்கிறார். இந்த 800 ஏக்கர் பண்ணை, சாப்பிடாமல் இறந்தவர்களின் மயானமாகக் காட்சியளிக்கிறது.
மெக்கன்சி `குட் நியூஸ் இன்டர்நேஷனல்' என்ற பெயரில் சொந்தமாக சர்ச் ஆரம்பித்தார். ருத் காஹிந்தி என்பவர் மெக்கன்சியைப் பிரார்த்தனை செய்ய முதலில் அழைத்தார். மெக்கன்சியும் அடிக்கடி அங்கு சென்று ஜெபம் செய்துவிட்டு வந்தார். நாளடைவில் சொந்தமாக சர்ச் ஆரம்பித்தபோது, ருத் காஹிந்தியின் வீட்டை தனது சர்ச் தலைமை அலுவலகமாக மெக்கன்சி மாற்றிக்கொண்டார்.
மெக்கன்சியின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை. அவர்கள் அனைவரும் மெக்கன்சியின் பண்ணையில் ரகசியமாகக் கல்லறைகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் அவர்களின் உறவினர்கள் காடுகளில் தங்களது சொந்தங்களைத் தேடி அலைகின்றனர். கடந்த மார்ச் மாதம் மனித உரிமை ஆர்வலர் விக்டர் என்பவருக்கு ஏராளமானோர் உண்ணாவிரதம் இருந்து இறப்பதாகத் தகவல் கிடைத்தது.

உடனே அவர் அங்கு சென்று சாப்பிடாமல் சாகக்கிடந்தவர்களுக்கு உதவ முயன்றபோது, அவரை `யேசுவின் விரோதி' என்று திட்டியிருக்கின்றனர். விக்டர் சாப்பிடாமல் சாகக்கிடந்த ஒரு பெண்ணுக்கு சாப்பாடு கொடுக்க முயன்றபோது, அவர் சாப்பிட மறுத்த வீடியோகூட வெளியாகியிருக்கிறது.
இது குறித்து மெக்கன்சியிடம் போலீஸார் விசாரித்தபோது, தான் யாரையும் சாப்பிடாமல் விரதம் இருக்கச் சொல்லவில்லை என்றும், புதிய ஏற்பாட்டின் இறுதி அத்தியாயங்களை மட்டுமே கற்பித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.