பாகிஸ்தானில் உள்ள குடும்பத்தினர் இறந்த தங்கள் பெண்களின் சடலங்கள் உள்ள கல்லறைகளைக் கதவுகள் போட்டுப் பூட்டியுள்ளனர். கேட்பதற்கே விநோதமாக இருந்தாலும், இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் மிகவும் அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது.
இறந்த பெண்களின் சடலங்களைத் தோண்டி எடுத்து, அவற்றுடன் பாலியல் வன்புணர்வு செய்யும் சம்பவங்கள் (Necrophilia) பாகிஸ்தானில் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுவதே, இதற்கு காரணம்.

இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கெனவே பாகிஸ்தானின் பல பகுதிகளில் நடந்திருந்தாலும், இது குறித்தான ஒரு எச்சரிக்கையை மீண்டும் சமூக வலைத்தளங்களில் எழுத்தாளர்களும், ஆர்வலர்களும் ஏற்படுத்தி இருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து பலரும் தங்களது குடும்பத்தில் இறந்த பெண்களின் சடலங்களைப் பாதுகாக்கத் தொடங்கி உள்ளனர்.
இதற்கு முன்பு 2011-ம் ஆண்டில் கராச்சியின் வடக்கு நாஜிமாபாத்தைச் சேர்ந்த முஹம்மது ரிஸ்வான் என்பவர் சடலத்தோடு இருக்கும்போது, அருகில் இருந்த புதைகுழி தோண்டுபவர்கள் மற்றும் வேறு சிலரால் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
கல்லறை காவலராக இருக்கும் இவர், 48 பெண் சடலங்களை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானில் பதிவாகிய நெக்ரோபிலியா வழக்குகளில் இது மிகவும் பயங்கரமானது.
2022-ல் பாகிஸ்தானின் குஜராத்தில் உள்ள சக் கமலா கிராமத்தில் ஓர் இளம்பெண்ணின் சடலத்தை குடும்பத்தினர் அடக்கம் செய்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்.
அதே இரவில் அடையாளம் தெரியாத சில ஆண்கள் சடலத்தைத் தோண்டி எடுத்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அடுத்தநாள் சில சடங்குகளைச் செய்ய உறவினர்கள் சென்ற போது, தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் இருந்ததும், சடலத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான அறிகுறிகள் இருப்பதும் இது தெரியவந்தது.
இதுபோன்ற பல சம்பவங்கள் பாகிஸ்தானின் பல பகுதிகளிலும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. இது மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தான், பாலியல் விரக்தியுள்ள சமூகத்தை உருவாக்கியுள்ளது. மக்கள் இப்போது தங்கள் மகள்கள் இறந்த பிறகும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதைத் தடுக்க, அவர்களின் கல்லறைகளைப் பூட்டுகின்றனர்.