அமெரிக்காவின், கலிஃபோர்னியா மாகாணத்தில் ராக்லின் பகுதியைச் சேர்ந்தவர் கேசி ரிவாரா (41). இவர் தன்னுடைய குழந்தைகளுடன் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சில வாத்துகள் கூட்டமாகச் சாலையைக் கடக்க முயன்றிருக்கின்றன. இதை கவனித்த கேசி ரிவாரா, உடனே காரை நிறுத்தியிருக்கிறார். அதோடு அந்த வாத்துகள் வேகமாகவும் பாதுகாப்பாகவும் சாலையைக் கடக்க உதவிக்கொண்டிருந்தார்.

இதைப் பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் அவரின் செயலைப் பாராட்டி, தங்கள் வாகனங்களை நிறுத்தி அவருக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றனர். இதற்கிடையே எங்கிருந்தோ வந்த கார் ஒன்று அவர்மீது மோதியதில், குழந்தைகளின் கண்முன்னே தூக்கிவீசப்பட்டார் கேசி ரிவாரா. உடனே அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸை அழைத்திருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், கேசி ரிவாரா இறந்துவிட்டதை உறுதிசெய்தனர்.
வாத்துகளுக்காக இறங்கி வழி ஏற்படுத்திக்கொடுத்தவர் மரணித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரின் புகைப்படத்துக்கு மலர்களையும், சிறு வாத்து பொம்மைகளையும் வைத்து அந்தப் பகுதி மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

இதற்கிடையே அவரின் சகோதரி இறந்தவரின் குழந்தைகளுக்காக gofundme.com இணையப் பக்கத்தின் மூலம் நிதி திரட்டிவருகிறார். மேலும், விபத்தை ஏற்படுத்திய காரை 17 வயது சிறுவன் ஓட்டிவந்ததும், அது தற்செயலாக நடந்த விபத்துதான், திட்டமிட்டுச் செய்யப்படவில்லை எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.