பொதுவாக திருமணங்கள் விவகாரத்தில் முடியும்போது, ஜீவனாம்சம் கேட்பதைப் பார்த்திருப்போம், சில இடங்களில் சொத்தில் பங்கு கேட்பதையும் பார்த்திருப்போம். ஆனால், தென்னாப்பிரிக்காவில் விவாகரத்தான பெண் ஒருவர், நான்கு வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய திருமணத்துக்கு போட்டோ ஷூட் நடத்திய லான்ஸ் ரோமியோ எனும் புகைப்படக்காரரிடம் போட்டோ ஷூட்டுக்கான பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டிருக்கும் சம்பவம் பலரைச் சிரிக்கவைத்திருக்கிறது.

முதலில் அந்தப் பெண் விளையாட்டாகக் கேட்கிறார் என்றுதான் அந்தப் புகைப்படக்காரர் நினைத்திருக்கிறார். பின்னர்தான் அவர் நிஜமாகவே கேட்கிறார் எனப் புகைப்படக்காரருக்குப் புரிந்தது. அதைத் தொடர்ந்து புகைப்படக் கலைஞர் பணத்தைத் தர மறுத்திருக்கிறார். அதோடு நிறுத்தாமல், பணம் கேட்டு அந்தப் பெண் அனுப்பிய மெசேஜை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
அதில், ``உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். 2019-ல் நடந்த என்னுடைய திருமணத்துக்கு நீங்கள்தான் போட்டோ எடுத்தீர்கள். இப்போது நான் விவாகரத்து பெற்றுவிட்டேன். இனி அந்தப் படங்கள் எனக்கும், என்னுடைய முன்னாள் கணவருக்கும் தேவையில்லை. உங்கள் வேலையை நீங்கள் நன்றாகத்தான் செய்தீர்கள். ஆனால், அந்தப் படங்கள் தற்போது எங்களுக்குத் தேவையில்லாதவையாகிவிட்டன . எனவே, நாங்கள் உங்களுக்குக் கொடுத்த பணம் எனக்குத் திரும்ப வேண்டும். ஏனெனில், இனி அவை எங்களுக்குத் தேவைப்படப்போவதில்லை" என்று புகைப்படக்காரரிடம் விவாகரத்தான பெண் கூறியிருக்கிறார்.
முதலில் அந்த புகைப்படக்காரர், அப்பெண் விளையாடுவதாக நினைத்து பதில் சொல்கிறார். பின்னர் அப்பெண் குறைந்தது 70 சதவிகிதமாவது ரீஃபண்ட் தாருங்கள் என கேட்கிறார். ரீஃபண்ட் கிடையாது என ஒப்பந்ததில் போடப்படவில்லை என்றும் அப்பெண் வாதாடுகிறார்.

அதற்கும் புகைப்படக்காரர் மறுக்கவே, வக்கீலை வைத்தும் அவரைத் தொடர்புகொள்ள முயன்றிருக்கிறார் அந்தப் பெண். இன்னொரு பக்கம் சம்பந்தப்பட்ட பெண்ணின் முன்னாள் கணவர் புகைப்படக்காரரிடம், இதற்காக மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இந்த நிலையில் புகைப்படக்காரரின் ட்விட்டர் பதிவுக்குப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். அதிலும் ஒருவர், ``இந்த ஆண்டின் சிறந்த கதை இதுதான்" எனக் கருத்து தெரிவிட்த்திருக்கிறார்.