காதலிக்கும்போது அனைவருக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், திருமணம் என்று வரும்போது, சிலர் பின்வாங்குகின்றனர். அது போன்று பின்வாங்கிய காதலனுக்கு பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தக்க பாடம் கற்பித்திருக்கிறார். அந்த மாநிலத்தின், பாகல்பூருக்கு அருகிலிருக்கும் பதோதியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா. இந்தப் பெண் அதே ஊரைச் சேர்ந்த ரோஹித் என்பவரை இரண்டு ஆண்டுகளாகக் காதலித்துவந்தார்.
இருவரும் அடிக்கடி வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்ச்சியாக இருந்தனர். இதனால் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி ரோஹித்திடம், கிருஷ்ணா நெருக்கடி கொடுத்தார். உடனே கிருஷ்ணாவின் நெற்றியில் குங்குமம்வைத்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார் ரோஹித்.

ஆனால் கிருஷ்ணாவை ரோஹித் வீட்டுக்காரர்கள் ஏற்றுக்கொள்ளாமல் வீட்டைவிட்டு விரட்டிவிட்டனர். உடனே ரோஹித்துக்கு எதிராக கிருஷ்ணா, போலீஸில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து ரோஹித்தைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ரோஹித் ஜாமீனில் வந்து வழக்கம்போல் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். ஆனால், அப்படியும் கிருஷ்ணா விடவில்லை. தன்னைத் திருமணம் செய்ய வேண்டும் என்று ரோஹித்தை, கிருஷ்ணா தொடர்ந்து வலியுறுத்திவந்தார். ஆனால், அதை ரோஹித் கேட்கவில்லை.

இதனால் ரோஹித் வேலை செய்யும் அலுவலகத்துக்குச் சென்ற கிருஷ்ணா, ரோஹித்துடன் தகராறு செய்து அவரது சட்டை காலரைப் பிடித்து இழுத்துக்கொண்டு கோயிலுக்குச் சென்றார். கோயிலுக்குச் சென்று தன்னைத் திருமணம் செய்யும்படி கேட்டார். ஆனால், இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் இரண்டு பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இருவரின் பெற்றோரையும் பேச்சுவார்த்தைக்குஅழைத்திருக்கின்றனர்.