முன்னாள் மாணவர்கள், நண்பர்கள் என பலர் மீண்டும் சந்தித்து நினைவுகளை அசைபோட ரீயூனியனுக்கு (Reunion) திட்டமிடுவதுண்டு. இவையெல்லாம் சகஜம் தான். ஆனால், பெண் ஒருவர் தன்னுடைய இதயத்தை மீண்டும் சந்தித்து அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளார்.
இங்கிலாந்து ஹாம்ப்ஷயர் ரிங்வுட் பகுதியில் வசித்து வரும் ஜெனிஃபர் சட்டன், பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளார். இவரின் 22-வது வயதில், இதயத்தால் உடல் முழுதும் ரத்தத்தைச் செலுத்தவியலாத ரெஸ்ட்ரிக்ட்டிவ் கார்டியோமையோபதி (Restrictive Cardiomyopathy) என்ற நிலையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
மருத்துவப் பரிசோதனையில் இவரின் இதயத்தை மாற்றவில்லையெனில், உயிர் பிழைப்பது கடினம் என அறிவுறுத்தி உள்ளனர். அதனைத் தொடர்ந்து ஜூன் 2007-ல் இவருக்கு மாற்று இதயம் கிடைத்ததாகத் தகவல் வந்துள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உறுப்பு தானத்தை ஆதரிக்கும் வகையில், தன்னுடைய இதயத்தைக் அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கும்படி ராயல் கல்லூரி அறுவை சிகிச்சை மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.
16 வருட இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர், 38 வயதில் தன்னுடைய இதயத்தை லண்டனில் உள்ள ஹண்டேரியன் அருங்காட்சியகத்தில் சென்று பார்த்திருக்கிறார்.
``நீங்கள் உள்ளே நுழைந்த நிமிடம் அது என் உடலுக்குள் இருந்தது என்று நினைக்கிறீர்கள். ஆனால் இது மிகவும் நன்றாக இருக்கிறது; இது என் நண்பனைப் போன்றது. என்னை 22 வருடங்கள் உயிரோடு வைத்திருந்தது. நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். நான் என் வாழ்நாளில் ஜாடிகளில் நிறைய விஷயங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அது என்னுடையது என்று நினைப்பது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது'' என்று ஜெனிஃபர் தெரிவித்து இருக்கிறார்.