Published:Updated:

இப்படியும் சில யூதர்களா... ஒரு பெண் ஏன், எதற்காக வெளியேறுகிறாள்?! #Unorthodox #Webseries

முற்றிலுமாக எந்த ஒரு மாற்றத்தையும், முற்போக்குச் சிந்தனைகளையும் எதிர்க்கும் இந்தச் சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று தனியாகச் சில கடமைகளை வகுத்திருக்கின்றனர்.

நியூயார்க்கில் வசிக்கும் யூத சமூகத்தைச் சேர்ந்தவர் எஸ்ட்டி. 19 வயதிலேயே மத வழக்கப்படி அவருக்குத் திருமணம் நடத்திவைக்கப்படுகிறது. பல கேள்விகளோடும், குழப்பங்களோடும் திருமண வாழ்விலிருந்து வெளியேறி, பெர்லினுக்குத் தப்பிச்செல்கிறார் எஸ்ட்டி. ஆனால், அங்கும் துரத்திவருகிறது திருமண உறவுகள். இதுதான் நெட்ஃபிளிக்ஸில் ஹிட் அடித்திருக்கும் `Unorthodox' மினி தொடரின் கதை.
Unorthodox
Unorthodox

பெண் என்பவள் குழந்தை பெறுவதை மட்டும்தான் தன் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும் என்கிற ரீதியில் வளர்க்கப்படுகிறாள் எஸ்ட்டி. எஸ்ட்டிக்கு சிறு வயது முதல் இசையின் மேல் ஆர்வம். ஆனால், அதையே யாருக்கும் தெரியாமல் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற சூழலில்தான் அவள் இருக்கிறாள். திருமணமான பின்னர் அதையும் விடவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறாள். ஏனெனில், பெண் பொதுவெளியில் பாடுவது அந்தச் சமூகத்தில் அநாகரிகமாகக் கருதப்படுகிறது.

எஸ்ட்டியின் அம்மா இந்தச் சமூகத்தில் இருக்க விருப்பம் இல்லாமல், தன் குடிகாரக் கணவனை விட்டுவிட்டு எஸ்ட்டியுடன் பெர்லின் செல்கிறார். ஆனால், கணவரின் குடும்பத்தினர் எஸ்ட்டியை அவரிடமிருந்து பிரித்துவிடுகின்றனர். இதனால் தன் அம்மா தன்னை விட்டுச் சென்றுவிட்டார் என்று நினைத்தே வாழ்கிறார் எஸ்ட்டி. பின்னர் ஒருகட்டத்தில், எஸ்ட்டியை அவர் சந்திக்க வரும்போது, 'என்றாவது இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று விரும்பினால், ஜெர்மனிக்கு வரவிரும்பினால் வா' என்று சொல்லி ஜெர்மானிய குடியுரிமையைப் பெறுவதற்கான ஆவணங்களைத் தந்துவிட்டுப்போகிறார். தான் என்றும் இந்த இடத்தை விட்டு வெளியேறப்போவதில்லை என்று நினைக்கும் எஸ்ட்டிக்கு பின்னர் உதவி செய்கின்றன அந்த ஆவணங்கள்.

Unorthodox
Unorthodox

யூதர்களில் ஒரு மதப் பிரிவான ஹசிடிக்குகளின் வாழ்க்கை முறையையும் அவர்களின் நம்பிக்கையையும் தெளிவாகப்பேசுகிறது இந்தத் தொடர். கடவுளின் பெயரால் ஏகப்பட்ட பழங்கால விதிமுறைகளை வைத்துக்கொண்டு அதை விடாமல் கடைப்பிடிக்கின்றனர் அம்மக்கள். வெளியுலகத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்கிறார்கள். இன்டர்நெட் வசதி இருக்கும் மொபைல் போன் வைத்திருப்பதுகூட அங்கே குற்றமாகக் கருதப்படுகிறது. ஸ்மார்ட்போன் இல்லாமல் வளரும் யான்கி, எஸ்ட்டியைத் தேடிச் செல்லும் போது, அவனுடைய உறவினர் மாய்ஷிடம் இருக்கும் ஸ்மார்ட்போனில், "டெலிபோன், எஸ்ட்டி எங்கே?" என்று அறியாமையில் கத்துகிறான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுபோன்ற பல சந்தர்ப்பங்களில் வசனங்களை மிகச் சிறப்பாக அமைத்திருக்கிறது டைரக்டர் மரியா ஷ்க்ரேடர் (Mariyaa Schrader) மற்றும் குழு. எஸ்ட்டியிடம் பெர்லின் வந்ததற்கான காரணத்தைக் கேட்கும் நண்பர்களிடம், "கடவுள் என்னிடம் அதிகமாக எதிர்பார்த்துவிட்டார். இனி நான்தான் என் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று பதிலளிக்கிறார் எஸ்ட்டி. முதன் முதலில் பெர்லினுக்கு வரும் போது ஓர் இசைப் பேராசிரியர் எஸ்ட்டிக்கு சாண்ட்விச் வாங்கித் தருகிறார். அதில் பன்றிக்கறி இருப்பது தெரிந்ததும், உடல் ஏற்றுக்கொள்ளாது என்று நினைத்து வெளியில் ஓடுவார்.

Unorthodox
Unorthodox
ஆனால், பின்னர் தனக்கு எதுவும் ஆகாததால், தான் இத்தனை வருடங்களாக நம்பிய ஒன்று நிஜமில்லை என்பதை உணரும் காட்சிகள் உட்பட தொடரின் காட்சிகள் பலவும் பவர்ஃபுல்லானவை. இதுபோல் படிபடியாக தன் புதிய சுதந்திரத்தை உணர ஆரம்பிக்கிறார் எஸ்டி.

இத்தொடர் 2012-ல் வெளியான டெபோரா ஃபெல்ட்மேன் என்பவரின் புத்தகமான Unorthodox: The Scandalous Rejection of My Hasidic Roots-ன் தழுவல். முற்றிலுமாக எந்த ஒரு மாற்றத்தையும், முற்போக்குச் சிந்தனைகளையும் எதிர்க்கும் ஒரு சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று தனியாகச் சில கடமைகளை வகுத்திருக்கின்றனர். பெண்ணிற்குக் குழந்தை பெற்றுத் தருவது மட்டுமே வேலை. அப்படி அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்றால், கணவன் அவளை விவாகரத்து செய்யலாம். எஸ்ட்டிக்கும் இந்த நிலை ஏற்பட, அப்போதுதான் அவர் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிவு செய்கிறார்.

Unorthodox
Unorthodox
கடந்த காலத்தில் சூப்பர் ஹீரோக்கள்!
எஸ்ட்டியாக நடித்திருக்கும் ஷிரா ஹாஸ் (Shira Hass) அந்தக் கதாபாத்திரத்தின் பல்வேறு மனநிலைகளைக் கச்சிதமாக முகத்தில் நிறுத்தி மனதைக் கனக்கவைக்கிறார். மிகவும் பிற்போக்கான எண்ணங்கள் கொண்ட சமூகத்தில் ஒரு பெண் சிறு வயதிலேயே முடக்கப்பட்டு பின்னர் சுதந்திரத்தைத் தேடிச் சென்று அதை ருசிக்கும் தருணத்தைக் காட்சியாக அமைத்ததற்காவே இந்த சிரீஸுக்குக் கொடுக்கலாம் ஒரு பெரிய பூங்கொத்து.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு