Published:Updated:

``அவங்க மேல இருந்த மதிப்பும், மரியாதையும் ரெண்டு மடங்காகியிருக்கு; ஏன்னா?!’’- ரம்யா கிருஷ்ணன்

`எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்னு தெரியாது. முதல் முறை வெப் சீரிஸ்ல நடிக்கிறேன். நான் யார் கேரக்டர்ல நடிச்சேனோ அந்தக் கேரக்டர் எனக்கு நிறைய கத்துக்கொடுத்துச்சு’

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சீரியல், ரியாலிட்டி ஷோ என அனைத்திலும் தடம்பதித்த ரம்யா கிருஷ்ணன், இப்போது வெப் சீரிஸிலும் களமிறங்கியிருக்கிறார். கெளதம் மேனனும் 'கிடாரி' இயக்குநர் பிரசாத் முருகேசனும் இணைந்து இயக்கும், 'குயின்' வெப் சீரிஸில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். அதைப் பார்த்தவுடன் நமக்கு யார் கேரக்டர் என்று தெரியும். ஆனால், சில காரணங்களுக்காக கேரக்டர் பெயர்களில் சில மாற்றங்கள் செய்துள்ளனர்.

'அவங்கதான் ஆனா அவங்க இல்லை' என்பதுபோல் உருவாகி இருக்கும் இந்த சீரிஸ், டிசம்பர் 14-ம் தேதி எம்.எக்ஸ்.பிளேயரில் வெளியாக இருக்கிறது. சென்னை வந்த ரம்யா கிருஷ்ணனிடம் வெப் சீரிஸ் அனுபவம் குறித்து பேசினோம்.

முதன்முறையா கெளதம் மேனன் இயக்கத்துல நடிச்சது எப்படி இருந்தது?

``ஏற்கெனவே `காக்க காக்க' படத்துல ஒரு பாட்டுக்கு மட்டும் வந்திருக்கேன். ஆனா, படம் முழுக்க வர்றது இதுதான் முதல் முறை. பொதுவா, ஒரு சீனைப் பத்தி விவரமா சொல்லிட்டு, அந்த ஆர்ட்டிஸ்ட்க்கான முழுச் சுதந்திரத்தைக் கொடுத்திருவார். நம்ம பண்ற சின்னச் சின்ன ரியாக்‌ஷன், உடல் மொழி எல்லாத்தையும் கவனிச்சு அதைக் கதைக்குத் தகுந்த மாதிரி நம்மக்கிட்ட கேட்டு வாங்கி அந்தக் கேரக்டராகவே நம்மை உணர வெச்சிடுவார். அதுமட்டுமல்லாமல், அவர் எதிர்ப்பார்க்குற விஷயங்களை ரொம்ப அழகா எடுத்துக்குவார். ஒரு நல்ல அனுபவமா இருந்தது."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'குயின்' அனுபவம் எப்படி இருந்தது?

'குயின்' டீம்
'குயின்' டீம்

``ரொம்ப நல்லா அனுபவமா இருந்தது. கெளதமும் பிரசாத்தும் சூப்பரா பண்ணியிருக்காங்க. அதைவிட இந்தக் கதையை அவ்வளவு அழகா எழுதியிருக்காங்க, ரேஷ்மா கட்டாலா. பவர்ஃபுல்லான கேரக்டர்கள்ல நான் ஏற்கெனவே நடிச்சிருக்கேன். ஆனா, ஷக்தி சேஷாத்ரி கேரக்டர்ல நான் நடிச்சது ரொம்ப ஸ்பெஷல். எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்னு தெரியாது. முதல் முறை வெப் சீரிஸ்ல நடிக்கிறேன். நான் யார் கேரக்டர்ல நடிச்சேனோ அந்தக் கேரக்டர் எனக்கு நிறைய கத்துக்கொடுத்துச்சு. நான் ரொம்ப அதிர்ஷ்டசாலின்னுதான் சொல்லணும்." 

இந்த வெப் சீரிஸ் அனுபவத்துல உங்களுக்கு ரொம்ப எமோஷனலான விஷயம் எது?

``கதை, வசனம் எல்லாமேதான். பொதுவாவே, இந்தக் கேரக்டரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதுல வொர்க் பண்ணும்போது அவங்களைப் பத்தி அதிகமா தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்குப் பிறகு, அவங்க மேல இருந்த மதிப்பும் மரியாதையும் ரெண்டு மடங்கு அதிகமாகியிருக்கு."

உங்க கரியர்ல இது முதல் வெப் சீரிஸ். இதுல என்ன வித்தியாசமா இருக்கு?

ரம்யா கிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணன்

``களம்தான் வேற. ஆனா, வேலை ஒண்ணுதான். கெளதமும் பிரசாத்தும் சினிமா எப்படி எடுப்பாங்களோ அப்படிதான் இதையும் எடுத்திருக்காங்க. நானும் சினிமாவுல பண்றதைதான் இதுல பண்ணியிருக்கேன். பெரிய வித்தியாசமா எதையும் பார்க்கலை."

கௌதம் மேனன், ரம்யா கிருஷ்ணன் கலந்துகொண்ட `குயின்' வெப் சீரிஸ் பிரஸ்மீட்! (படங்கள்)

பல வருடங்களுக்குப் பிறகு, உங்க கணவர் இயக்கத்துல 'ரங்கமார்த்தாண்டா'வுல நடிக்கப்போறீங்க. எப்படி இருக்கு?

``ஆமா. 1998-ல் `சந்திரலேகா' படத்தை அவர் இயக்க, நான் ஹீரோயினா நடிச்சிருந்தேன். அதுக்குப் பிறகு, 2004-ல் `ஶ்ரீ ஆஞ்சநேயம்' படத்துல கேமியோ ரோல் பண்ணேன். அதுக்குப் பிறகு, இந்தப் படம்தான். `நட்சாம்ராட்'ங்கிற மராத்தி படத்துடைய ரீமேக் இது. பிரகாஷ் ராஜ் சாரும் நானும் லீட் ரோல் பண்றோம். என் கணவர் வம்சி டைரக்ட் பண்றார். இன்னும் ஷூட்டிங் ஆரம்பிக்கலை. ரொம்ப ஆவலா வெயிட் பண்ணிகிட்டிருக்கேன். ஸ்பாட்ல அவர் என்னைத் திட்டப்போறாரா இல்லை, நான் அவரைத் திட்டப்போறேனான்னு தெரியலை" என்றார் சிரித்துக்கொண்டே.

2020-க்கு என்ன பிளான் பண்ணியிருக்கீங்க?

``எந்த பிளானும் இல்லை. அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு எதுவுமே சொல்ல முடியாது. நம்ம கையில ஒண்ணும் இல்லை. வாழ்க்கை எங்க போகுதோ அப்படியே நம்மளும் ஜாலியா போயிட வேண்யதுதான். குழப்பமே தேவையில்லை."

`இது வெறும் ஆரம்பம்தான்!' - ரம்யாகிருஷ்ணன், கௌதம் மேனன் இணையும் `குயின்' வெப் சிரீஸ் டிரெய்லர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு