Published:Updated:

``இந்த உலகிற்கு மோசமான பெண்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்!" - ஏஞ்சலினா ஜோலி

Angelina Jolie
Angelina Jolie

கட்டாய திருமணங்கள், பிறப்புறுப்பு சிதைவு மற்றும் கௌரவக் கொலைகள் போன்றவை, பெண்களை 'இரண்டாம் நிலையிலேயே' வைப்பதற்கான ஓர் வழி என்று குறிப்பிடுகிறார் ஏஞ்சலினா ஜோலி.

பிரபல அமெரிக்க நடிகையும் திரைப்பட தயாரிப்பாளருமான ஏஞ்சலினா ஜோலி, தேர்ந்தெடுக்கப்பட்ட வலுவான கதாபாத்திரங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர். இவரின் நடிப்புத் திறனுக்கு மட்டுமல்ல மனிதாபிமான அடிப்படையில் இவர் செய்துவரும் சமூக சேவைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில், பிரபல ஆங்கில பத்திரிகையான Elle-ன் செப்டம்பர் மாத இதழுக்காக ஏஞ்சலினா, தன் மூன்று மகள்களுக்காக உருக்கமான தன்னம்பிக்கைத் தரும் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

44 வயதாகும் ஏஞ்சலினாவிற்கு, மூன்று மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் ஏஞ்சலினாவால் தத்தெடுக்கப்பட்டவர்கள். இன பாகுபாடின்றி தத்தெடுத்து வளர்த்துவரும் இவரின் பாதைகளைப் பின்பற்ற நினைப்பவர்கள் ஏராளமானவர்கள் உண்டு. அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உதவியையும் சமூக சேவைகளையும் சளைக்காமல் செய்துகொண்டிருக்கிறார். இந்நிலையில், பெண்களுக்கு அடிக்கடி வழங்கப்படும் கடுமையான 'பிராண்டிங்' பற்றியும், தன் மகள்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நினைக்கும் எதிர்கால பாடங்களைப் பற்றியும் Elle கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் ஜோலி.

Angelina Jolie Family
Angelina Jolie Family

அந்தக் கட்டுரையில், "சமுதாயத்திற்கு எதிராகப் போராடும் பெண்களை 'ஆபத்தானவர்கள்' என்று பொதுவாகக் கருதப்படுகிறது. அந்தக் காலத்திலிருந்தே, சமுதாயத்திற்குச் சாதாரணமாகக் கருதப்படும் செயல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பெண்களை, அது தற்செயலான சம்பவமானாலும் அவர்களை இயற்கைக்கு மாறானவர்கள், வித்தியாசமானவர்கள், மிகவும் ஆபத்தானவர்கள் என்று முத்திரை பதித்துவிடுகிறார்கள்.

அறிவை கூர்மைப்படுத்துவதுதான் உங்கள் வாழ்வில் நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம் என்று என் மகள்களுக்கு நான் அடிக்கடி சொல்லுவேன். நீங்கள் எவ்வளவு அழகான உடையை வேண்டுமானாலும் அணிந்துகொள்ளலாம். ஆனால், உங்கள் மனம் வலுவாக இல்லாவிட்டால் நீங்கள் அணியும் உடை ஓர் பொருட்டே அல்ல. ஒரு பெண்ணுக்கு, சுயமான விருப்பம் மற்றும் அவளுக்கென்று சொந்த கருத்துகள் இருப்பதைவிட வேறெதுவும் பெரிதல்ல. இதைவிடப் பிறரை வசியம் செய்யும் பண்பு வேறெதுவும் இல்லை.

ஸ்விக்கியில் 17,962 முறை ஆர்டர் செய்த பெங்களூரு வாடிக்கையாளர்! #5YearsOfSwiggy
Angelina with her sons
Angelina with her sons

தங்களுக்கு நம்பிக்கையில்லாத விதிகள் மற்றும் மூடநம்பிக்கைகளைப் பின்பற்ற மறுக்கும் பெண்கள்தான், தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் சிறந்ததைச் செய்ய முயற்சி செய்வார்கள். குடும்பத்தால் நிராகரிக்கப்பட்ட அல்லது வேறு எந்த கடுமையான காரணத்திற்காகவும் தனக்கான உரிமைக் குரலை விட்டுக்கொடுக்காத பெண்களே மிகவும் பலசாலிகள். இவர்களுக்குப் பெயர் 'மோசமானவர்கள்' என்றால், இந்த உலகிற்கு மோசமான பெண்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். இப்படிப்பட்ட 'மோசமான பெண்கள்' பெரும்பாலும், சமூக அநீதி மற்றும் துன்புறுத்தல்களை எதிர்த்துப் போராடிச் சோர்ந்துபோனவர்கள்" என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

சமீப காலமாக வீடு முதல் அலுவலகம் வரை பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விதமான பிரச்னைகளுக்கு எதிராக ஏஞ்சலினா போராடி வருகிறார். ஐக்கிய நாடுகளோடு நீண்டகாலமாகக் கைகோர்த்திருக்கும் ஜோலி, 2001 முதல் 2012 வரை உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதம் செய்யும் நல்லெண்ண தூதராக பணியாற்றியுள்ளார். தற்போது இங்குச் சிறப்புத் தூதராக பணியாற்றி வருகிறார்.

Angelina Jolie
Angelina Jolie

மேலும், `கட்டாய திருமணங்கள், பிறப்புறுப்பு சிதைவு மற்றும் கவுரவக் கொலைகள் போன்றவை, பெண்களை 'இரண்டாம் நிலையிலேயே' வைப்பதற்கான ஓர் வழி' என்று குறிப்பிடுகிறார். 'வேலைக்குச் செல்லும் பெண்கள், அநீதியை எதிர்த்து குரல் கொடுக்கும் பெண்கள் மற்றும் சமூக விதிமுறைகளுக்கு எதிராகப் பயணிக்கும் பெண்களைக் கடுமையான சொற்களால் அடக்கிவைக்கின்றனர்’ என்றும் குற்றம் சாட்டியுள்ளார் ஜோலி.

அடுத்த கட்டுரைக்கு