``ஸ்டாலினுக்கு ஆப்பு அடிக்கப்போகிறவர் செந்தில் பாலாஜிதான்” - எடப்பாடி பழனிசாமி
``மக்களை ஏமாற்றுவதற்காகவே ஒருவரை அனுப்பியிருக்கிறார்கள். அவர்தான் செந்தில் பாலாஜி. “ - எடப்பாடி பழனிசாமி.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தலைவர்களின் இறுதிக்கட்ட பிரசாரம் அனல் பறக்க தொடங்கியிருக்கிறது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறும் நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து ஈரோட்டில் எதிர்க்கட்சித் தலைவரும், கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர், ``அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தி.மு.க நிறுத்திவிட்டது. நாங்கள் கொண்டுவந்த மினி கிளினிக் திட்டம், தாலிக்குத் தங்கம், அம்மா குடிநீர், இருசக்கர வாகனத்துக்கு மானியம், அம்மா சிமென்ட் போன்றவற்றை நிறுத்திவிட்டனர். கட்டுமானப் பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது. ரூ.290-க்கு விற்கப்பட்ட சிமென்ட் விலை தற்போது ரூ. 450-க்கு விற்கப்படுகிறது. ரூ.35,000-க்கு விற்ற ஒரு டன் கம்பியின் விலை ரூ.75,000-ஆகவும், ரூ. 6-க்கு விற்ற செங்கல்லின் விலை ரூ.12-ஆகவும், ஜல்லி, எம்.சாண்ட், மணல் என எல்லாவற்றின் விலையும் தாறுமாறாக உயர்ந்துவிட்டது.

ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.1,000 வீதம் உரிமைத்தொகை தருவதாகக் கூறியிருந்தார்கள். இப்போது கேட்டால் எல்லாருக்கும் கொடுக்க முடியாது. கணக்கு பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று நிதியமைச்சர் கூறுகிறார். ஆட்சிக்கு வரும்போது எல்லோருக்கும் கொடுப்பதாகத்தானே கூறினீர்கள்... அதை நம்பித்தான் மக்கள் ஓட்டு போட்டார்கள். இப்போது மாற்றிப் பேசுகிறார்கள். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியானதும் ஒரு பேச்சு.
இங்கு வீடு வீடாக அமைச்சர்கள் ஓட்டுக் கேட்டு வந்தால் அவர்களிடம் கேளுங்கள். காஸ் சிலிண்டருக்கு மானியமாக ரூ.100-ம், மாதம்தோறும் உரிமைத்தொகை ரூ.1,000 வீதம் 22 மாதங்களுக்குக் கணக்கு போட்டு ரூ.24,200 தரும்படி ஸ்டாலினிடம் கேளுங்கள். ஸ்டாலின் நம் குடும்பப் பெண்களுக்கு கடன்பட்டிருக்கிறார். அதைப் பெண்கள் கேட்க வேண்டும்.
இன்று இத்தனை அமைச்சர்கள் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். இதற்கு முன்பு அவர்கள் வந்ததுண்டா... எனவே, மக்கள் ஸ்டாலினுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெறும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து மாவட்ட கலெக்டர், தேர்தல் நடத்தும் அலுவலர் என எல்லோருக்கும் புகார் கொடுத்துவிட்டோம். எந்த நடவடிக்கையும் இல்லை.

உண்மையில் தி.மு.க-வினருக்கு தெம்பும் திராணியும் இருந்தால் வாக்காளர்களை அடைத்துவைக்காமல் ஓட்டுக் கேட்டுப் பாருங்கள். அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. வாக்காளர்களை 15 நாளாக ஒளிச்சுவெச்சுருக்கீங்க. ஒருவருக்கு தண்டனை தருவதானால் அவர்களை ஓர் இடத்தில் அடைத்து வைப்பார்கள். அப்படி இந்தத் தொகுதி வாக்காளர்களுக்கு தி.மு.க தண்டனைதான் வழங்கியிருக்கிறது. இன்னும் சில நாள்கள் போனால் அவர்களுக்கு மனநல மருத்துவர் சிகிச்சை அளிக்கும் நிலை வரும். எனவே, இந்தத் தேர்தலில் ஸ்டாலினுக்குப் பாடம் புகட்டுங்கள். உங்களைப் பட்டியில் அல்ல, கூண்டில் அடைத்தாலும் இரட்டை இலைக்குத்தான் நீங்கள் ஓட்டுப் போடுவீர்கள் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள்.
தி.மு.க ஒரு கார்ப்ரேட் கம்பெனி. அதற்கு ஸ்டாலின்தான் எம்.டி., உதயநிதி சேர்மன், கனிமொழி டைரக்டர். ஏற்கெனவே சேர்மனும், டைரக்டரும் பேசிவிட்டுச் சென்றுவிட்டார்கள். நாளை (இன்று) எம்.டி (ஸ்டாலின்) வருவார். அவர்களிடம் ஏமாந்துவிடாதீர்கள். ப.சிதம்பரம் பேசும்போது, நீட் தேர்வை ரத்துசெய்ய அ.தி.மு.க நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க-வின் மக்கள் நல்வாழ்வுத்துறை இணை அமைச்சராக காந்திசெல்வன் இருந்தபோது 2010-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் நீட் தேர்வு கொண்டுவருவதற்கான அரசாணை பிறப்பித்து கெஜட்டில் வெளியிடப்பட்டது. தைரியமும் தில்லும் இருந்தால் இது பற்றி முதல்வர் ஸ்டாலின் ஈரோட்டில் பிரசாரம் செய்யும்போது பதிலளிக்க வேண்டும்.

நீட் தேர்வை ரத்துசெய்ய சட்டப் போராட்டம் நடத்தியவர் ஜெயலலிதா. காங்கிரஸின் அமைச்சராக சிதம்பரம் இருந்தார். அவரின் மனைவி நளினி சிதம்பரம் நீட் தேர்வுக்கு எதிராக வாதாடியவர். சிதம்பரம் அவர்களே... உங்கள்மீது மரியாதை வைத்திருக்கிறோம். நீங்கள் அரசியல் நடத்துவதற்காக உண்மையை மறைத்துப் பேசாதீர்கள். கண்ணுக்குத் தெரியாத காற்றில்கூட ஊழல் செய்தது தி.மு.க. ஊழல் பற்றிப் பேச தி.மு.க-வுக்குத் தகுதி இல்லை. எங்களை மிரட்டுவதற்காக எங்கள்மீது வழக்கு தொடருகிறீர்கள். இதெற்கெல்லாம் அ.தி.மு.க தொண்டன் எப்போதும் பயப்பட மாட்டான்.

உதயநிதி ஸ்டாலின், கொடநாடு கொலை வழக்கு என்று எங்களை மிரட்டுகிறார்கள். இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்தது அ.தி.மு.க அரசு. அவர்களை ஜாமீனில் எடுத்தது சென்னையைச் சேர்ந்த தி.மு.க பொறுப்பாளர், தி.மு.க வக்கீல், ஒரு தி.மு.க எம்.பி ஆகியோர்தான். அப்படியானால் யார் தவறு செய்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.
மத்திய அரசு 2030-ல் எட்டவேண்டிய உயர்கல்விக்கான இலக்கை 2019-லேயே நாம் எட்டிவிட்டோம். உணவு உற்பத்தியில் ஐந்து ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்தோம். கொரோனா தொற்று பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுத்தோம். கொரோனா தொற்றுக்குத் தேவையான சிகிச்சைகளைத் தொடர்ந்து அளித்துவந்தோம். மக்கள் பசியால் தவித்தபோது அம்மா உணவகத்தில் இலவச உணவளித்தோம்.
இன்று இந்தியாவிலேயே அதிக அளவில் தார்ச்சாலை அமைத்திருப்பது தமிழ்நாட்டில்தான். விவசாயம், தொழில், கல்வி, மருத்துவம், மின்சாரம் என அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னேறியிருக்க அ.தி.மு.க அரசுதான் காரணம்.
ஆனால், இந்த அரசு அதையெல்லாம் மறைத்து மக்கள்மீது பல்வேறு வரிகளைச் சுமத்திவருகிறது. மின்கட்டணத்தை பல மடங்கு உயர்த்திவிட்டார் ஸ்டாலின். எல்லாவற்றுக்கும் வரி போடுறாங்க. விட்டால் நடந்து செல்வதற்குக்கூட வரி விதிப்பார்கள். இதையெல்லாம் மறைத்துவிட்டு, தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான்.
தமிழகத்தில் 10 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த அ.தி.மு.க., ரூ.4.8 லட்சம் கோடி கடன் வாங்கியிருந்ததாக தி.மு.க கூறுகிறது. ஏற்கெனவே தி.மு.க ஆட்சி முடியும்போது ரூ.1.34 லட்சம் கோடியைக் கடனாக வைத்திருந்தனர். கொரோனா தாக்கத்தால் தொழில் இழப்பு ஏற்பட்டு கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டபோதும் அதைச் சமாளித்திருக்கிறோம். ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்த இந்த 22 மாதங்களில் ரூ.1.62 லட்சம் கோடி கடன் வாங்கியிருப்பதாகக் கூறுகிறீர்கள். இந்தக் கடன் மூலம் மக்களுக்குச் செய்யப்பட்ட நலத்திட்ட திட்டங்கள் என்னென்ன?

உங்களை ஏமாற்றுவதற்காகவே ஒருவரை அனுப்பியிருக்கிறார்கள். அவர்தான் செந்தில் பாலாஜி. ஆர்.கே.நகர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டைக் கொடுத்து, பணம் கிடைக்கும் என்று ஏமாற்றி ஒருவரை (டி.டி.வி.தினகரன்) வெற்றிபெறச் செய்தார். பின்னர் வெற்றிபெற்றவர் அந்தத் தொகுதிக்குச் சென்றபோது மக்கள் கல்லால் அடித்தார்கள். எனவே, இந்தத் தொகுதியில் பணியாற்றிவரும் செந்தில் பாலாஜியை மக்கள் நம்ப வேண்டாம்.
எதிர்காலத்தில் ஸ்டாலினுக்கு ஆப்பு அடிக்கப்போகிறவர் அவர்தான். பச்சோந்தியான அவர் ஐந்து கட்சிகளுக்கு மாறியவர். அவரின் யோசனையில் உருவானதுதான் மக்களைப் பட்டியில் அடைப்பது. எனவே அவர் பேச்சை நம்பி காங்கிரஸுக்கு வாக்களிக்காதீர்கள்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி செல்லும் வழியெங்கும் ரோஜாப்பூக்களைத் தூவி கட்சியினர் வரவேற்றனர். நேற்று மாலை முக்கியத் தலைவர்களின் பிரசாரம் இல்லாததால் வழக்கத்தைவிட உள்ளூர் வாக்காளர்கள் பிரசாரத்தில் பங்கேற்றனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு மாஸ் லீடருக்கான வரவேற்பை அளித்த அ.தி.மு.க-வினர் கொடி, தோரணங்கள், அலங்கார வளைவு, தாரைத் தப்பட்டை என எல்லாவற்றிலும் பிரமாண்டத்தைக் காட்டி பல இடங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறினர்.
அ.தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப அணியினர் உண்டியல் குலுக்கி, அதில் தி.மு.க ஆட்சியின் அவலங்கள் என 22 வகையான அட்டைகளை வைத்து நூதன முறையில் பிரசாரம் செய்தனர்.












எனினும், கண்ணியத்தையும் மரியாதையையும் காப்பது அனைவரின் பொறுப்பு. தனிப்பட்ட தாக்குதல், அவதூறு அல்லது வெறுப்பைத் தூண்டும் கருத்துகளை விகடன் அனுமதிக்காது.
அத்தகைய கருத்துகள் Moderation பகுதிக்குச் செல்லக்கூடும் அல்லது நிராகரிக்கப்படலாம் என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.