மும்பை: யூடியூப் பார்த்து பைக் திருட்டு; மாணவிகள் முன் பந்தா! - 4 மாணவர்களைக் கைதுசெய்த போலீஸ்
மும்பையில் யூடியூப் பார்த்து சாவி இல்லாமல் எப்படி இரு சக்கர வாகனங்களை ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்று தெரிந்துகொண்டு, திருடிய கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மும்பை மேற்கு புறநகர்ப் பகுதியில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் காணாமல் போய்க்கொண்டிருந்தன. போலீஸாருக்கு வந்த புகார்களின் அடிப்படையில் அவர்கள் விசாரித்துவந்தனர். இரு சக்கர வாகனங்கள் திருட்டு நடந்த இடங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாமல் இருந்தன. இதனால் திருடர்கள் எங்கு கண்காணிப்பு கேமரா இல்லாமல் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அதன் பிறகே திருடுவதை வாடிக்கையாகக்கொண்டிருக்கின்றனர் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். இதனால் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது போலீஸாருக்கு மிகவும் சவாலாக இருந்தது.
கடந்த மாதம் கோரேகாவ் பகுதியில் இது போன்று ஓர் இரு சக்கர வாகனம் காணாமல்போனது. அதையடுத்து, போலீஸார் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கோரேகாவ் பகுதியில், சந்தீப் கெய்க்வாட் என்ற மாணவர் அடிக்கடி கல்லூரிக்கு மாணவிகளைக் கவர பல வகையான இரு சக்கர வாகனங்களில் வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் கெய்க்வாட்டைப் பிடித்துச் சென்று விசாரித்தபோது, இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். அவரும் அவர் நண்பர்கள் மகேஷ் ஸ்வாமி, கணேஷ் சவான், யோகேஷ் ஆகியோரும் இரு சக்கர வாகனங்களை சாவி இல்லாமல் எப்படி ஸ்டார்ட் செய்வது என்பதை யூடியூப் பார்த்து தெரிந்துகொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத, கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களைத் திருடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தது விசாரசணையில் தெரியவந்தது.

இதில் மகேஷ் ஸ்வாமிதான் முதலில் தன் அப்பாவின் இரு சக்கர வாகனத்தை சாவி இல்லாமல் திறந்து பார்த்திருக்கிறார். அதைத் தன் நண்பர்களிடம் காட்டியிருக்கிறார். உடனே அவர்கள் தங்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சந்தீப்பும் கற்றுக்கொடுத்தார். நான்கு பேரும் ஜாலிக்காக மட்டுமே இரு சக்கர வாகனங்களைத் திருடுவதை வாடிக்கையாகக்கொண்டிருந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ``திருடிச் செல்லும் பைக்கில் எரிபொருள் காலியாகிவிட்டால் உடனே அதை அப்படியே அங்கேயே விட்டுச்செல்வதை நான்கு பேரும் வழக்கமாகக்கொண்டிருந்தனர். திருடிய இரு சக்கர வாகனங்களில் மாணவிகள் முன் பந்தா காட்டுவதற்காக நான்கு பேரும் சென்றுள்ளனர். நான்கு பேருமே கல்லூரி மாணவர்கள். அவர்களிடமிருந்து ஏழு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.













எனினும், கண்ணியத்தையும் மரியாதையையும் காப்பது அனைவரின் பொறுப்பு. தனிப்பட்ட தாக்குதல், அவதூறு அல்லது வெறுப்பைத் தூண்டும் கருத்துகளை விகடன் அனுமதிக்காது.
அத்தகைய கருத்துகள் Moderation பகுதிக்குச் செல்லக்கூடும் அல்லது நிராகரிக்கப்படலாம் என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.