உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் 105 வயதாகும் தன் மாமியாரை அடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கான்பூரில் உள்ள சாகேரி பகுதியில் வசிக்கும் பகவான் பாலி என்பவரின் மனைவி, ஆர்த்தி குப்தா. இவர், பகவான் பாலியின் 105 வயதாகும் தாய் ஜெயராம் தேவியைத் துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் அப்பகுதி மக்களால் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, போலீஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி, மாமியாரைத் துன்புறுத்திய மருமகளைக் கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோவில், வயதான பெண் ஒருவரை இன்னொரு பெண் மோசமாகத் தாக்குவதும், சில நேரங்களில் அவர் தலைமுடியைப் பிடித்து தரையில் முட்டுவதுமான காட்சிகள் காண்போரை பதைபதைக்க வைக்கின்றன. இதை, அக்கம்பக்கத்தினர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது வைரலாகியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுகுறித்து அப்பகுதி மக்கள், `பகவான் பாலி இ-ரிக்ஷா ஓட்டுநராக உள்ளார். அவரின் மனைவி ஆர்த்தி குப்தா, தன் மாமியாரை இரக்கமின்றி அடிப்பதைக் கண்டு அவருக்குத் தக்க தண்டனை வாங்கித் தர வேண்டும் என்ற நோக்கில் வீடியோவை எடுத்துப் பதிவிட்டோம்' என்று கூறியுள்ளார்கள். வீடியோ வைரல் ஆக, அதைப் பார்த்த சக்கேரி இன்ஸ்பெக்டர், பெண் போலீஸாருடன் சென்று ஆர்த்தியைக் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட மருமகளிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சக்கேரி இன்ஸ்பெக்டர் மதுர் மிஸ்ரா தெரிவித்துள்ளார். `அந்த வீடியோ என்னை உலுக்கிவிட்டது' என்று இணை கமிஷனர் ஆனந்த் பிரகாஷ் திவாரி கூறியுள்ளார். இந்த வழக்கின் முழு விசாரணையும் ஏசிபி மிருகங்க் சேகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 2020-ல் இருந்ததைவிட 30% அதிகரித்துள்ளதாகத் தேசிய மகளிர் ஆணைய 2021 ஆய்வு தெரிவித்தது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளில், பெண்களே குற்றவாளி ஆகும் சூழல்கள் துயரம். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் பலவற்றைப் பெண்களே மேற்கொள்கின்றனர்.