Published:Updated:

120 இந்திய வீரர்கள், 2000 பாகிஸ்தான் வீரர்களைத் தோற்கடித்த வீரக்கதை..! ராஜஸ்தான் கதைகள்- 2

120 இந்திய வீரர்கள், 2000 பாகிஸ்தான் வீரர்களைத் தோற்கடித்த வீரக்கதை..! ராஜஸ்தான் கதைகள்- 2

120 இந்திய வீரர்கள், 2000 பாகிஸ்தான் வீரர்களைத் தோற்கடித்த வீரக்கதை..! ராஜஸ்தான் கதைகள்- 2

120 இந்திய வீரர்கள், 2000 பாகிஸ்தான் வீரர்களைத் தோற்கடித்த வீரக்கதை..! ராஜஸ்தான் கதைகள்- 2

120 இந்திய வீரர்கள், 2000 பாகிஸ்தான் வீரர்களைத் தோற்கடித்த வீரக்கதை..! ராஜஸ்தான் கதைகள்- 2

Published:Updated:
120 இந்திய வீரர்கள், 2000 பாகிஸ்தான் வீரர்களைத் தோற்கடித்த வீரக்கதை..! ராஜஸ்தான் கதைகள்- 2

ரொக்ஸானாவைப் பார்ப்பேன்... அவள் சிரிப்பு என் நினைவில் நீங்காமல் இந்தளவிற்குத் தங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு இல்லாத ஒரு நாளின் காலைப் பொழுது அது. ஒரு பயணத்தின் எல்லா நாட்களும் நமக்கு சுவாரஸ்யத்தையும், பேரனுபவங்களையும், பெரு மகிழ்ச்சியையும் கொடுத்துவிடுவதில்லை. ஏன்... சில பயணங்களே கூட ஏதுமற்றவையாக முடிந்துவிடுவதுண்டு. அந்த நாளின் தொடக்கம் எனக்கு அப்படியானதாகத்தான் இருந்தது. 

மெல்லிய வெயில் அடித்துக் கொண்டிருந்த அந்தக் காலை நேரம் வண்டி நின்றதும்தான் கண் விழித்தேன். அது அதிக மனித நடமாட்டம் இல்லாத பகுதியாகத் தெரிந்தது. யோசித்துப் பார்த்தால்... மனிதர்கள் மட்டுமல்ல... நாய், பூனை, ஒட்டகம், புறா, மான், மயில் என எதன் நடமாட்டமும் இல்லை அங்கு. அது ஏதோ ராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் இடம் என்பது மட்டும் தெரிந்தது. அங்கிருந்த ஒரு பலகையில் எழுதியிருந்த ஹிந்தி எழுத்துக்களைக் கூட்டி ஒரு வழியாக "லாங்கோஸாலா" என்று படித்து முடித்தேன்.

"ஹாய்... வெல்கம் டூ லாங்கேவாலா... தி லேண்ட் ஆஃப் கரேஜ்" (Welcome to Longewala- The Land of Courage) என்று அழகான ஆங்கிலத்தில் ஒரு குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன். மிடுக்கான ராணுவ அதிகாரி. ஆனால், முதல் பார்வையிலேயே அவரிடம் ஏதோ ஒரு கம்பீரம் குறைவதாகவே எனக்குத் தோன்றியது. ஆனால், அவர் அந்த இடம் குறித்து சொன்ன கதையில் அத்தனை கம்பீரம்... கர்வம்.... அந்தக் கதையைக் கேட்க நாம் 1971ம் ஆண்டிற்கு பயணிக்க வேண்டும்.

இன்றைய தேதிக்கு அது மனித நடமாட்டம் இல்லாத... இல்லை... ஏதொன்றின் நடமாட்டமும் அல்லாத தனித்த பாலைவனப் பகுதியாக இருக்கிறது என்றால், 1971-ல் எப்படி இருந்திருக்கும்? அதை உங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். ஆனால், அந்தக் கற்பனையை ஒரு பனிக்கொட்டும், குளிர் இரவிலிருந்து தொடங்குங்கள். 

டிசம்பர் மாதம், 4-ம் தேதியின் நள்ளிரவு. லாங்கேவாலாவில் இந்திய ராணுவத்தின் 23-வது பெட்டாலியனின் "பஞ்சாப் ரெஜிமெண்ட்" . 
பேரமைதி சூழ்ந்திருந்த அந்த நள்ளிரவு நேரம், சற்று தூரத்தில் சில நடமாட்டங்கள் இருப்பதையும், சிலர் கிசுகிசுப்பதையும்... சில பூச்சிகள் கண்டுகொண்டு இந்திய ராணுவ வீரர்கள் தங்கியிருந்த பகுதிக்கு பறந்து வந்தன. ஆனால், இந்திய ராணுவத்தினருக்கு பூச்சிகளின் மொழி புரியவில்லை என்பதால் மட்டுமல்ல... அவர்கள் அந்தப் பூச்சிகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்தப் பூச்சிகளும் இன்னும் சில மணிகளில் இங்குப் பெரும் பிரளயம் ஏற்படப் போகிறது என்பதை உணர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு பறந்துபோயின. 

திடீரென குண்டுச் சத்தங்கள் கேட்கத் தொடங்கின. கூடாரங்களில் உறங்கிக் கொண்டிருந்த ராணுவ வீரர்கள் அத்தனைப் பேரும் சில நிமிடங்களில் வரிசையாக கையில் ஆயுதங்களுடன் வந்து நின்றனர். சில நிமிடங்களுக்கு முன்னர் வரை அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்... உறக்கத்தில் அவர்களுக்கு கனவுகள் வந்திருக்கலாம். அந்தக் கனவில் காதலியோ, மனைவியோ, குழந்தையோ, அம்மாவோ, அப்பாவோ, செல்ல நாய்க்குட்டியோ, கரடி பொம்மையோ, முதல் முத்தமோ, அம்மாவின் உருளைக் கிழங்கு பொரியலோ, வீட்டுப் பிரச்னையோ, கடன் பிரச்னையோ, பேய்க் கனவோ, பாம்புக் கனவோ, தேவதைகள் கனவோ, சாமி கனவோ... எதுவாகவும் இருந்திருக்கலாம். ஆனால், ஒரு சத்தம்...சில நிமிடங்கள்... இதோ தங்கள் உயிரைத் தியாகம் செய்ய அவர்கள் தயாராகிவிட்டார்கள். குண்டு கிழித்து, ரத்தம் கொட்டி சாகத் தயாராகிவிட்டார்கள். வதை முகாம்களில் சிக்கி எத்தனை வேதனைப்பட்டாலும் அதைத் தாங்கிக் கொள்ளத் தயாராகிவிட்டார்கள். நாட்டின் நலனுக்காக உயிர் அடங்கும் அந்தக் கடைசி நொடிவரை வீரத்துடனும், தீரத்துடனும் போராடத் தயாராகிவிட்டார்கள்.

"சர்... எதிரிங்க நிறைய டேங்க்குகளை வச்சிருக்காங்க சர். அவங்களுடைய எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்ன்னு நினைக்கிறேன் சர். உங்க ஆர்டருக்காக நாங்க வெளிய வெயிட் பண்ணிட்டிருக்கோம் சர். " உறுதியான ஒரு சல்யூட்டோடு அந்த வீரன், அந்த கூடாரத்தைவிட்டு வெளியேறினான். 

ஒரு சில நொடிகள் கண்களை மூடி ஆழமாக யோசித்தார் மேஜர் குல்தீப் சிங். தன் கூடாரத்தின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பச்சை நிற ரேடியோ ஃபோனை எடுத்து, ஜெய்சல்மரிலிருந்த தலைமையகத்திற்கு பேசினார். இருக்கும் நிலையை விளக்கினார்.

"குல்தீப்... நீங்கள் அங்கு வைத்திருக்கும் வீரர்களைக் காட்டிலும் எதிரிப்படை எண்ணிக்கையில் பலமடங்கு அதிகம். டேங்கர் உட்பட பல ஆயுதங்களை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். நம் போர் விமானங்களில் இரவு விளக்குகள் கிடையாது. எங்களால் நாளை காலை தான் நம் படைகளை நீங்கள் இருக்கும் பகுதிக்கு நகர்த்த முடியும். தலைமை நீங்கள் போரிடாமல் திரும்பிவிடுவது நல்லது என கருதுகிரது. காரணம் நீங்கள் போரிடுவது தற்கொலைக்கு சமம். இறுதி முடிவை நீங்கள் எடுங்கள். நாளை...முதல் வெளிச்சம் படரும் முதல்  நொடி நம் 'ஹாக்கர் ஹண்ட்டர்' (Hawker Hunter) போர்விமானங்கள் உங்களை நோக்கி பெரும் வேகத்தில் வானில் பறக்கத் தொடங்கும்."

"தேங்க்யூ சர். ஜெய்ஹிந்த்"

"ஜெய்ஹிந்த்"

ஒரு பெரூமூச்சை எடுத்தார் மேஜர் குல்தீப் சிங். வெகு வேகமான நடையோடு தன் படை வீரர்கள் குழுமியிருந்த இடத்திற்கு வந்தார்.

"வீரர்களே... இது ஒரு ஆகச்சிறந்த தருணம். நாம் மொத்தம் 120 பேர் இருக்கிறோம். எதிரிப் படை 10,20,100,200,1000,2000,10000,20000 என எத்தனையாகவும் இருக்கலாம். ஆனால், இந்த நொடி போர்க்களத்திற்கு செல்ல தீர்மானித்துவிட்டேன். என்னுடன் வருபவர்கள் வரலாம். வரத் தயங்குபவர்கள் இப்போதே கிளம்பிவிடலாம். என்னுடன் வந்துவிட்டு பாதியில் திரும்பி ஓட நினைத்தால், நிச்சயம் நான் அவர்களை சுட்டு வீழ்த்திவிடுவேன். ஜெய்சல்மர் நகரைக் கைபற்றுவது தான் எதிரிகளின் திட்டமாக இருக்கக்கூடும். அது மட்டும் நடந்துவிட்டால் நாட்டிற்கே பெரிய ஆபத்து ஏற்படலாம். எனக்கு நம்பிக்கை இருக்கிறது...நம்மால் அவர்களை வெல்ல முடியும். நம்பிக்கையிருப்பவர்கள் களத்திற்கு வாருங்கள். யாராவது கிளம்ப நினைக்கிறீர்களா?"

"நோ சர்" பெரும் குரல் எடுத்து அத்தனைப் பேரும் ஒரு சேர கத்தினார்கள். 

"ஜெய்ஹிந்த்"

"ஜெய்ஹிந்த்".

பாகிஸ்தானிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாகனம்

அந்த நள்ளிரவுக் குளிரில், அந்தப் பாலைவன மணலில் தீரத்துடன் போரிட்டார்கள் இந்திய வீரர்கள். அவர்கள் எதையும் யோசிக்கவில்லை. உடலின் மொத்த சக்தியையும் கொடுத்துப் போரிட்டார்கள். பதுங்கிப் பாய்ந்து போரிட்டார்கள். மறுநாள் முழு வெளிச்சம் பரவுவதற்கு முன்னரே ஹண்ட்டர் போர் விமானங்கள் லாங்கேவாலாவுக்கு வந்து சேர்ந்தது. ஆச்சர்யம் போர் முடிந்திருந்தது. இந்தியா வெற்றியடைந்திருந்தது. 

போர் பலங்களும், இழப்புகளும்:

இந்தியப் போர்வீரர்களின் மொத்த எண்ணிக்கை : 120

பாகிஸ்தான் போர் வீரர்களின் மொத்த எண்ணிக்கை : 2000

போரில் இறந்த இந்திய வீரர்கள்: 2

போரில் இறந்த பாகிஸ்தான் வீரர்கள்: 200. 

பாகிஸ்தானிடம் கைப்பற்றப்பட்ட டேங்குகள் : 34 (மற்ற பிற வாகனங்கள் 500).

சற்று யோசித்துப் பாருங்கள். 120 பேர் கொண்ட படை, 2000 பேர் கொண்ட படையை அடித்து நொறுக்கியுள்ளது! 300 ஸ்பார்டன்ஸை விஞ்சிய கதை. 

பாகிஸ்தானிடமிருந்து கைப்பற்றப்பட்ட டேங்க்

நான் நின்றுகொண்டிருந்த இடத்தில்தான் இந்தக் கதைகள் எல்லாம் நடந்தது என்பதை சில நிமிடங்கள் யோசித்துப் பார்த்தேன். அந்த பாலைவன மண்ணில் கால்களை ஆழப் புதைத்து, புதைத்து நடந்து அந்தப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்தேன். அங்கு அந்தப் போரில் கைப்பற்றப்பட்ட டேங்குகளும், வண்டிகளும் காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. எனக்கருகில் இருந்த இரண்டு டேங்குகளை சுட்டிக்காட்டி,
"அதிலிருக்கும் கொடிகளைப் பார்க்காமல் எது எந்த நாடுடையது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?" என்று அந்த மேஜர் கேள்வி கேட்டார். 
நீண்ட நேரம் யோசித்துவிட்டு "தெரியவில்லை" என்றேன். 

"இதோ இதுதான் பாகிஸ்தானுடையது. டேங்கரின் முன்பக்கம் கீழ்நோக்கி சாய்ந்திருந்தால் அது பாகிஸ்தானுடையது. அதன் முன்பக்கம் நிமிர்ந்திருந்தால் இந்தியாவுடையது. இந்தியா முழுக்க இதுதான் அடையாளம்" என்று பெருமையாகச் சொன்னார்.

அடுத்து இந்தியா-பாகிஸ்தான் எல்லைக் கோட்டைப் பார்க்க போவதாகத் திட்டம். அதற்கான அனுமதியைப் பெற "தன்னோட்" (Tannot) எனும் இடத்தில் காத்திருந்தோம். அங்கு "தனோட் மாதா" எனும் ஒரு கோயில் இருந்தது. இந்தக் கோயில் எல்லைப் பாதுகாப்புப்படையின் பராமரிப்பில் இருக்கிறது. இந்தக் கோவிலுக்குப் பின்னரும் பெரும் சுவாரஸ்யமான கதை இருக்கிறது. 

1965-ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தக் கோயிலை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் மூவாயிரம் குண்டுகளை வீசியுள்ளது. ஆனால், ஒரு குண்டு கூட கோயிலை சிறிதளவேணும் சேதப்படுத்தவில்லை. அதே போல், 1971 போரிலும் கூட இந்தக் கோயிலுக்கு எதுவும் ஆகவில்லை. போர் முடிந்த பின்னர், பாகிஸ்தான் ராணுவ அதிகாரி இந்தியாவிடம் சிறப்பு அனுமதி பெற்று இந்தக் கோயிலைப் பார்க்க வந்தார். இந்திய ராணுவ வீரர்களுக்கு இதுதான் அவர்களைக் காக்கும் எல்லைச் சாமி. 

தன்னோட்டில் அனுமதி கிடைத்ததும் தேசத்தின் எல்லையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினோம். அந்த செக்போஸ்ட்டைக் கடந்து போய்க் கொண்டிருந்தோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த சலனங்களும் இல்லை. வெறும் மணல். வண்டியும் நிற்காமல் போய்க் கொண்டேயிருந்தது. வெளியில் அடித்த அனலுக்கு, வண்டியின் ஏசியே செயல்பட முடியாமல் தவித்தது. 

இறுதியாக இறுதிக்கு வந்தடைந்தோம். அந்த முள்வேலி எங்கு முடிகிறது என்பதே கண்ணிற்குத் தெரியவில்லை. மறுகரை தெரியாத கடல் போல் அந்த முள்வேலி நீண்டிருந்தது. அதைப் பார்த்த போது ஏனோ "இலங்கையின் முள்வேலி கதைகள்" தான் ஞாபகத்திற்கு வந்தது. அங்கு பேரமைதி. பெரும் நிசப்தம். காற்றின் சத்தம் மட்டும் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. முள்வேலியில் ஆங்காங்கே கண்ணாடி பாட்டில்கள் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தன. அவ்வப்போது அந்தச் சத்தம் மட்டும் கேட்டது. 

ஒரு கண்காணிப்பு கோபுரம். அதில் இரண்டு ராணுவ வீரர்கள், கைகளில் துப்பாக்கியோடு பாலைவனத்தைப் பார்த்தபடி காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். அங்கு எங்களுக்கு நீண்ட நேரம் இருக்கவோ, போட்டோ எடுக்கவோ அனுமதி கிடையாது. சீக்கிரமே கிளம்பத் தயாரானோம். ஆனால், அந்த நிசப்தம் என்னை சில நிமிடங்களுக்கே ஏதோ செய்துவிட்டது. எங்காவது நின்று...

மேஜர் குல்தீப் சிங்

"ஆ....ஊ....ஏ...." எனக் கத்த வேண்டும் போல் தோன்றியது. ஆனால், எந்தச் சலனமும் இல்லாமல் அந்த இரண்டு ராணுவ வீரர்களும் அங்கு, அப்படியே நின்று கொண்டிருந்தார்கள். 

வண்டியில் வந்த வழியே திரும்பிக் கொண்டிருந்தோம். 

லாங்கேவாலாவில் பல ஆயிரம் குண்டுச் சத்தங்களுக்கு மத்தியில் வீரப் போர் புரிந்த அவர்களைக் காட்டிலும், இந்த ஆழ்ந்த நிசப்தத்தில், ஆள் அரவமற்ற பாலைவனத்தில் காற்றின் சத்தத்தோடு மட்டும் உரையாடி காவல் காத்துக் கொண்டிருந்த அந்த இரண்டு ராணுவ வீரர்கள்தான்  ஆகச்சிறந்த வீரர்களாக எனக்குத் தெரிந்தனர். 

அடுத்து நாங்கள் செல்லவிருந்த இடத்திற்கு பெயர் "சாம் மணல் மேடு". எப்படியாவது மாலை சூரியன் மறைவதற்குள் அந்த மணல்மேடு பகுதியை அடைந்துவிட வேண்டும் என்ற தவிப்பு அனைவருக்குமே. எங்கள் டிரைவர் வண்டியை பெரும் வேகம் கொண்டு ஓட்டிக் கொண்டிருந்தார்...