முரண்டு பிடித்த கெலாட்... என்ட்ரி ஆகும் திக்விஜய் சிங் - காங்கிரஸ் தலைவர் தேர்தல் சலசலப்புகள்!

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப்போவதாக அசோக் கெலாட், சசி தரூர் உட்பட பல பெயர்கள் அடிப்பட்ட நிலையில், தற்போது திக்விஜய் சிங் வேட்புமனு தாக்கல் செய்யப்போகிறார் என்று செய்திகள் பரபரக்கின்றன.

Published:Updated:
 திக்விஜய் சிங்!
திக்விஜய் சிங்!
Google Preference
0Comments
Share

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவிருக்கிறது. அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து கட்சிக்குள் பரபரப்பான காட்சிகள் அரங்கேறிவருகின்றன. அடுத்தடுத்து இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், பல சட்டமன்றத் தேர்தல்கள் என தொடர் தோல்விகளைச் சந்தித்த நிலையில், 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Twitter

அதையொட்டி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சில மாதங்களுக்கு முன்பு ‘சிந்தனை அமர்வு’ என்ற நிகழ்வை காங்கிரஸ் நடத்தியது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்று, ‘ஒருவருக்கு ஒரு பதவி’, ‘தேர்தலில் போட்டியிட ஒரு குடும்பத்துக்கு ஒரு சீட்’ என்கிற முடிவு. அந்த முடிவு, காங்கிரஸ் கட்சிக்குள் பலருக்கு அதிர்ச்சியை அளித்தது.

ஒருவருக்கு ஒரு பதவி என்கிற அந்த முடிவு இன்றைக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு பெரும் தடைக்கல்லாக இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டாம் என்கிற முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருப்பதால், தலைவர் பதவிக்கான தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவார் என்று செய்திகள் வெளியாகின. நேரு குடும்பத்தின் ஆதரவுடன் அவர் போட்டியிடுவார் என்றும் சொல்லப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர், தலைவர் பதவிக்கு போட்டியிட ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டிவந்தார்.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

நேரு குடும்பத்தின் ஆதரவு இருப்பதால் அசோக் கெலாட் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாகப் பார்க்கப்பட்டது. இந்த நேரத்தில் ஒரு சிக்கல் எழுந்தது. காங்கிரஸ் தலைவராகிவிட்டால் ராஜஸ்தான் முதல்வர் பதவியை கெலாட் ராஜினாமா செய்ய வேண்டும். கெலாட் ராஜினாமா செய்தால், கட்சிக்குள் அவருக்குப் போட்டியாக செயல்படும் சச்சின் பைலட் ராஜஸ்தான் முதல்வராக வந்துவிடுவார். ஆனால், முதல்வர் பதவிக்கு சச்சின் வருவதை கெலாட் விரும்பவில்லை.

முதல்வராக இருந்துகொண்டே, கட்சித் தலைவர் பதவியையும் வகிக்க வேண்டும் என்பது கெலாட்டின் விருப்பம். ஆகவே, சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஒருவேளை சச்சின் பைலட் முதல்வராக நியமிக்கப்பட்டால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 90 எம்.எல்.ஏ-க்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் சி.பி. ஜோஷியிடம் அளித்துள்ளனர். இதனால், ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து கட்சியின் தலைமையிடம் சச்சின் பைலட் பேசியிருக்கிறார். காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட கெலாட் முடிவெடுத்துவிட்டால், முதல்வராக அவர் நீடிக்கக் கூடாது என்று பைலட் கறாராகத் தெரிவித்திருக்கிறார். மேலும், எம்.எல்.ஏ-க்களை ஒன்றிணைக்கும் பொறுப்பு தன்னுடையது என்றும் அவர் தலைமையிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், தலைவர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து அசோக் கெலாட் பின்வாங்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

சச்சின் பைலட்
சச்சின் பைலட்

எனவே, தலைவர் பதவிக்கு வர ஆசைப்படும் சசிதரூர், தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறார். இதற்கிடையில், மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், தலைவர் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்திருப்பதாக தகவல் வெளியாயிருக்கிறது. கேரளாவில் ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் இருந்த திக்விஜய் சிங், திடீரென டெல்லி சென்றிருக்கிறார்.

தேர்தலில் போட்டியிடுவது என்பது அவரது தனிப்பட்ட முடிவு என்று கூறுகிறார்கள். இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஏ.கே.அந்தோணியை, கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா நேற்று திடீரென சந்தித்து பேசினார்.

ஏ.கே.அந்தோணி
ஏ.கே.அந்தோணி

அப்போது, நடைபெற உள்ள கட்சித்தலைவர் தேர்தல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தேர்தலில் களமிறங்க சாத்தியமுள்ள வேட்பாளர்கள் குறித்து அவர்கள் விவாதித்ததாக தெரிகிறது. இதன் மூலம் காங்கிரஸ் தலைவர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதாக கட்சித் தலைமை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இதனிடையே ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் ஹூடாவும் சோனியா காந்தியைச் சந்தித்தார். எனவே, தலைவர் பதவிக்கு பூபிந்தர் ஹூடாவும் போட்டியிடுவார் என்று பேசப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரியும் போட்டியில் இருப்பதாக செய்திகள் வருகின்றன.

ராகுல் காந்தி - சோனியா காந்தி
ராகுல் காந்தி - சோனியா காந்தி

வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (செப். 30) கடைசி நாள். அக்டோபர் 1-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ம் தேதி கடைசிநாள். அன்று மாலை 5 மணிக்கு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருந்தால், அக்டோபர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். செப்டம்பர் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல்வாதி என்பதால் அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு வருவதையே நேரு குடும்பம் விரும்பியது. ஆனால், தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பமில்லை என்று சோனியா காந்தியிடம் அவர் தெரிவித்துவிட்டார். ஆகையால், சசிதரூரும் வேறு சிலரும் போட்டியில் இறங்கினாலும், திக்விஜய் சிங்குக்குத்தான் நேரு குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading...
Vikatan

விகடனின் கிளாசிக் படைப்புகள் இப்போது ஆடியோ புத்தகங்களாக!