Published:Updated:

காங்கிரஸ்: அக்.17-ல் புதிய தலைவர் தேர்தல்... யாருக்கு வாய்ப்பு அதிகம்?! - ஓர் அலசல்

சோனியா காந்தி, ராகுல் காந்தி

``ராகுல் காந்தி வெற்றி பெற வாய்ப்புள்ள இடத்தில் நிற்கிறாரே தவிர, வெற்றிக்காக உழைக்கத் தயாராக இல்லை.” - ரவீந்திரன் துரைசாமி

காங்கிரஸ்: அக்.17-ல் புதிய தலைவர் தேர்தல்... யாருக்கு வாய்ப்பு அதிகம்?! - ஓர் அலசல்

``ராகுல் காந்தி வெற்றி பெற வாய்ப்புள்ள இடத்தில் நிற்கிறாரே தவிர, வெற்றிக்காக உழைக்கத் தயாராக இல்லை.” - ரவீந்திரன் துரைசாமி

Published:Updated:
சோனியா காந்தி, ராகுல் காந்தி

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தோல்விக்குப் பொறுப்பேற்று, அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, தலைவர் பதவியிலிருந்து விலகினார். பின்னர், சோனியா காந்தி இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார். கட்சிக்கு முழு நேர தலைவர் உட்பட உட்கட்சித் தேர்தலை நடத்துமாறு குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் சர்மா உள்ளிட்ட அதிருப்தி தலைவர்கள் 23 பேர் அடங்கிய ஜி-23 குழு, கடந்த 2020-ம் ஆண்டு, ஜூலை மாதம் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியது. இதையடுத்து சோனியா காந்தி, அதே ஆண்டு, ஆகஸ்ட் மாதம் பதவி விலக முன்வந்தார். ஆனால், காங்கிரஸ் காரிய கமிட்டி கேட்டுக்கொண்டதால் பதவியில் நீடித்தார்.

ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத்
ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத்

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் உட்கட்சித் தேர்தலைக் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் காரிய குழு அறிவித்தது. வட்டாரக் குழு, மாவட்டத் தலைவர், மாநிலத் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு, ஆகஸ்ட் 21-ம் தேதியிலிருந்து செப்டம்பர் 20-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சி செப்டம்பர் 7-ம் தேதி பாத யாத்திரையைத் தொடங்குகிறது. அதற்கான பணிகளைக் கவனிக்க வேண்டியிருப்பதால், தலைவர் தேர்தல் சில வாரங்கள் தள்ளிப்போகும் என்று தகவல்கள் வெளியாகின.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான சரியான தேதியை முடிவு செய்ய காரிய கமிட்டி கூட்டம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 28) நடந்தது. மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ள சோனியா காந்தி, காணொளிக் காட்சி மூலம் தலைமை தாங்கினார். அவருடன் சென்றிருக்கும் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரும் காணொளிக் காட்சி வழியாகப் பங்கேற்றனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக், அதிருப்தி குழுவைச் சேர்ந்த ஆனந்த் சர்மா, காங்கிரஸின் தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதன் மிஸ்திரி, கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில், தலைவர் தேர்தலுக்கான கால அட்டவணை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அரை மணி நேரம் நடந்த கூட்டத்தில், அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

 மதுசூதன் மிஸ்திரி
மதுசூதன் மிஸ்திரி

இது குறித்து காங்கிரஸின் தேர்தல் பிரிவுத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, “காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும். இதற்கான அறிவிப்பாணை அடுத்த மாதம் 22-ம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்குகிறது. மனுத்தாக்கலுக்கு செப்டம்பர் 30-ம் தேதி கடைசி நாள். ஒருவருக்கு மேல் போட்டியிட்டால், அக்டோபர் 17-ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். அக்டோபர் 19-ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படும்” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதற்கடுத்து பேசிய கே.சி.வேணுகோபால், “தேர்தல் கால அட்டவணைக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாதயாத்திரை செல்பவர்கள் ஓட்டுப்போட உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்” என்று கூறினார்.

கே.சி.வேணுகோபால்
கே.சி.வேணுகோபால்

``காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்குமாறு ராகுல் காந்தியைக் கடைசி நிமிடம் வரை வலியுறுத்துவோம்” என்று அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே போன்றோருடன் அனைத்து மாநிலத் தலைவர்களும் வலியுறுத்திவருகின்றனர். ஆனால், அந்தப் பதவியை ஏற்க ராகுல் காந்தி மறுத்துவருகிறார். இது ஒருபுறம் இருக்க அசோக் கெலாட்டை தலைவராக்க முயற்சி நடப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், அதை அசோக் கெலாட் மறுத்துள்ளார். கபில் சிபல், அஸ்வனி குமார் ஆகியோரைத் தொடர்ந்து குலாம் நபி ஆசாத்தும் விலகிய நிலையில் இந்தத் தேர்தல் நடக்கிறது.

டாக்டர் செல்லகுமார் எம்.பி
டாக்டர் செல்லகுமார் எம்.பி

இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் டாக்டர் செல்லகுமார் எம்.பி-யைத் தொடர்புகொண்டோம். ``கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரை இருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மனதில் நேரு குடும்பத்திலிருந்துதான் தலைவர் வர வேண்டும் என்பது எல்லோருடைய ஒருமித்த விருப்பமாக இருக்கிறது. வாரிசு அரசியல் குறித்து மாற்றுக்கட்சியினர் விமர்சனம் முன்வைக்கலாம். ஆனால், அடிப்படையில் இருக்கும் உண்மை அவர்களுக்குப் புரியாது.

காரணம் என்னவென்றால் இந்தியாவில் இருக்கக்கூடிய எந்த ஓர் அரசியல் இயக்கமும் இனம், மொழி, மதம், சாதி என ஒரு சாராரைச் சார்ந்துத்தான் நடத்தியிருக்கும். ஆனால், காங்கிரஸ் என்கிற ஓர் இயக்கம் மட்டும்தான் எல்லா இந்தியர்களையும் ஒன்றிணைத்து, வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஓர் அரசியல் இயக்கமாக இருக்கிறது. அதற்கு ஒரு தலைமை என்று வரும்போது, இந்தப் பாகுபாடு எண்ணங்கள் இல்லாத ஒரு தலைமை தேவைப்படுகிறது. அந்தத் தலைமை நேரு குடும்பத்திடம் தவிர வேறு எந்தக் குடும்பத்திலும் கிடையாது. வேறு யாரை முன்னிறுத்தினாலும் ஏதோ ஒருவிதத்தில் பற்றுதல், சார்பு இருக்கும். மற்றவர்களெல்லாம் ஏதோ ஒரு காலகட்டத்தில், ஏதோ ஒரு காரணத்துக்காக நரேந்திர மோடியுடன் சமரசம், சமாதானப் போக்கைக் கடைப்பிடிக்கிறார்கள். எனவே சர்வாதிகார ஆட்சி நடத்தும் நரேந்திர மோடியை எதிர்த்து நிற்க ராகுல் காந்திதான் சரியான நபராக இருப்பார்” என்றார்.

காங்கிரஸில் நடக்கும் குழப்பங்கள், அடுத்த தலைவராக யார் தேர்வானால் காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கும் போன்ற கேள்விகளோடு அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியைத் தொடர்புகொண்டோம். “ராகுல் தவிர வேறு யார் தலைவராக வந்தாலும் அந்தக் கட்சி தாக்குப்பிடிக்காது. காங்கிரஸை ஒற்றுமையாக வைத்திருக்க ராகுலால்தான் முடியும். ராகுல் அல்லாமல், இன்னொருவர் வந்தால் அவர் டம்மியாகத்தான் இருப்பார். எனவே ராகுல் தலைமைப் பொறுப்பை ஏற்பது காங்கிரஸுக்கு நல்லது.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

இன்னும் தயங்கித் தயங்கி, `தோற்றுப் போகும்... தோற்றுப் போகும்...’ என்றிருந்தால், அவர் தலைமை ஏற்றுக்கொள்ளவே காங்கிரஸ் கட்சி இருக்காது. இன்னும் அவர் தலைமைப் பொறுப்பு ஏற்காத வரை நாளுக்கு நாள் பின்னடைவு ஏற்படும். இதனால் ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் வளர்ச்சி அடையும். ராகுலைப் பொறுத்தவரை வெற்றிபெற வாய்ப்புள்ள இடத்தில் நிற்கிறாரே தவிர, வெற்றிக்காக உழைக்கத் தயாராக இல்லை” என்று முடித்தார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, கடைசியாகக் கடந்த 2000-ம் ஆண்டு நடந்தது. அப்போது, ஜிதின் பிரசாதாவை சோனியா காந்தி தோற்கடித்தார். காங்கிரஸ் தலைவராக நீண்டகாலம் நீடிப்பவர் சோனியா காந்தி. ராகுல் காந்தி பதவி வகித்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை நீங்கலாக, 1998-ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி இருந்துவருகிறார்.