I.N.D.I.A: `தொகுதிப் பங்கீடு, செப். 30-ல் இறுதி முடிவு!’ - மும்பை கூட்டமும் அரசியல் நகர்வுகளும்!
செப்டம்பர் 30-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிசெய்யப்படும் என்று மும்பையில் கூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.

28 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்துக்கு நேற்று பிற்பகல் வரை எதிர்க்கட்சித் தலைவர்கள் வந்துகொண்டிருந்தனர். மாலையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆரம்பக்கட்ட கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் இன்று (செப். 1) என்ன அம்சங்கள் குறித்துப் பேசலாம் என்பது குறித்தும், மத்திய அரசு திடீரென எந்த ஆலோசனையும் செய்யாமல் நாடாளுமன்றத்தின் அவசரக்கூட்டம் இந்த மாதம் ஐந்து நாள்கள் நடைபெறும் என்று அறிவித்திருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி, சரத்பவார், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், ஒமர் அப்துல்லா உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் இன்று நடைபெறவிருக்கும் கூட்டத்தில் இந்தியா கூட்டணிக்கு அமைப்பாளர்/ ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்புக் குழுவை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்படவிருப்பதாகத் தலைவர்கள் தெரிவித்தனர்.
நேற்றைய கூட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து வரும் 30-ம் தேதி இறுதி முடிவு எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதோடு கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கின் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு செய்வது என்று நேற்று முடிவு செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்தக் கூட்டம் குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, ``இந்தியா கூட்டணிக்கு ஓர் அமைப்பாளர், ஒருங்கிணைப்புக் குழு தேவை. இப்போது நடப்பதுபோல் ஒவ்வொரு இரண்டு மாதத்துக்கு ஒருமுறை கூடி பேசிக்கொண்டிருக்க முடியாது. ஒருங்கிணைப்புக் குழு அடிக்கடி கூடி பேசினால் மிகவும் சிறப்பாக இருக்கும்” என்றார்.
இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று கேட்டதற்கு, ``பிரதம வேட்பாளரை இப்போது அறிவிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்துகொள்ளலாம்” என்றார். உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேயும், ``பிரதம வேட்பாளர் குறித்து பின்னர் முடிவு செய்துகொள்ளலாம்'' என்று தெரிவித்தார்.
சிவசேனா (உத்தவ்) தலைவர்களில் ஒருவரான பிரியங்கா சதுர்வேதி அளித்த பேட்டியில், ``2024-ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலுக்கு பயனளிக்கும் வகையில் மும்பைக் கூட்டத்தில் யுக்தி வகுக்கப்படும். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இன்று புதிய வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அளித்த பேட்டியில், ``நாட்டின் ஒற்றுமை, இறையாண்மையை வலுப்படுத்துவது அவசியம். வறுமை ஒழிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் நலன் பிரச்னைக்குத் தீர்வு காண மோடி அரசு தவறிவிட்டது. எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து விவாதிக்கப்படும். பா.ஜ.க-வுக்கு எதிராக பொது வேட்பாளரையும் நிறுத்துவோம்” என்றார்.

பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் அளித்த பேட்டியில், ``இந்தியா கூட்டணி நாட்டைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. பா.ஜ.க வெற்றி பெறாத மாநிலங்கள் துன்புறுத்தப்படுகின்றன. கூட்டணி என்பது எண்ணிக்கையைக் குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ அல்ல. நாட்டைப் பாதுகாக்க...” என்றார்.

சரத்பவார் மகள் சுப்ரியா சுலே, ``பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டத்துக்குக் காரணமான நரேந்திர மோடி அரசின் கொள்கையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை சரிசெய்வதில் இந்தியா கூட்டணி சவாலை எதிர்கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார். இன்று பத்திரிகையாளர் சந்திப்பு, கூட்டணித் தலைவர்கள் அறிமுக புகைப்படம் எடுத்தல், லோகோ வெளியிடுதல் போன்றவை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்றைய கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் அறிவிக்கப்படலாம் என்றும் அது பீகார் முதல்வர் நிதிஷ் குமாராக இருக்கலாம் என்றும் உறுதிசெய்யப்படாத தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY













எனினும், கண்ணியத்தையும் மரியாதையையும் காப்பது அனைவரின் பொறுப்பு. தனிப்பட்ட தாக்குதல், அவதூறு அல்லது வெறுப்பைத் தூண்டும் கருத்துகளை விகடன் அனுமதிக்காது.
அத்தகைய கருத்துகள் Moderation பகுதிக்குச் செல்லக்கூடும் அல்லது நிராகரிக்கப்படலாம் என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.