Tamil News Today Live: ``எங்களுக்குள் இருந்த இடைவெளி குறைந்திருக்கிறது!'' - மும்பையில் ராகுல் காந்தி
Tamil News Today Live : 01-09-2023 இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

``எங்களுக்குள் இருந்த இடைவெளி குறைந்திருக்கிறது!'' - மும்பையில் ராகுல் காந்தி

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் `இந்தியா' கூட்டணியின் மூன்றாவது கூட்டம் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ``இந்தியா கூட்டணியின் மும்பை கூட்டம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. எங்களுக்குள் இருந்த இடைவெளி குறைந்திருக்கிறது. இந்தக் கூட்டணியில் இருக்கும் தலைவர்களுக்கிடையே இருக்கும் நல்லுறவு வலுவடைந்திருக்கிறது. என்.டி.ஏ கூட்டணியை `இந்தியா' கூட்டணி வீழ்த்தும் என நான் உறுதியாக நம்புகிறேன்'' எனத் தெரிவித்திருக்கிறார்.
``நமது கூட்டணிக்கு கொள்கையே தலைமை தாங்க வேண்டும்!''



மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் `இந்தியா' கூட்டணியின் மூன்றாவது கூட்டம் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், ``நமது கூட்டணிக்கு ஒருங்கிணைப்புக் குழுவையும், குறைந்தபட்ச செயல் திட்டத்தையும் உடனடியாக உருவாக்க வேண்டும். `இந்தியா' கூட்டணியின் முகமாக அந்த அறிக்கைதான் அமையும். நமது நாட்டை பா.ஜ.க ஆட்சி பல்வேறு வகைகளில் சீரழித்திருக்கிறது.
அதை எப்படிச் சரிசெய்யப்போகிறோம் என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்வதற்கான அறிக்கையாக அது அமைய வேண்டும். ஒரு கட்சி ஆட்சி முடிந்து இன்னொரு கட்சியின் ஆட்சி என்பதாக இல்லாமல், யதேச்சாதிகார ஆட்சி முடிந்து, மக்களாட்சி மலரத் தேவையான கொள்கையின் மூலமாக மக்களிடையே நாம் நம்மை அடையாளப்படுத்த வேண்டும். நம்முடைய கூட்டணிக்கு இத்தகைய கொள்கைகள் தலைமை தாங்க வேண்டும்!'' என்றார்.
உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க கேவியட் மனு!

அ.தி.மு.க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக் கோரி ஒ.பி.எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டால், தங்கள் தரப்பை விசாரிக்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க கேவியட் மனுத்தாக்கல் செய்திருக்கிறது.
``குற்றச்சாட்டு உண்மையென்றால் என்மீது நடவடிக்கை எடுங்கள்!''


நடிகை விஜயலட்சுமியின் குற்றச்சாட்டு தொடர்பாக சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். இது குறித்து பேசிய அவர், ``ஒரு பெண் என்னை ஏமாற்றிவிட்டு, வேறு ஒருவரை திருமணம் செய்து வாழ்கிறார் என்று நான் ஒரு குற்றச்சாட்டை சொன்னால் என்னைச் சும்மா விடுவீர்களா... ஏன் தேர்தல் நேரத்தில் மட்டும் இந்தக் குற்றச்சாட்டு வருகிறது.
என் மீதான குற்றச்சாட்டு உண்மை என நம்பியிருந்தால் லட்சக்கணக்கான இளைஞர்கள் என்னைப் பின்தொடர்வார்களா... உண்மையாகவே நான் குற்றம் செய்திருந்தால் என்மீது நடவடிக்கை எடுங்கள். தி.மு.க ஆட்சியில் நடவடிக்கை எடுங்களேன் பார்ப்போம். ஒரே நாடு ஒரே தேர்தலால் தண்டச் செலவுதான் ஏற்படும். `ஒரே நாடு ஒரே தேர்தல்' அவசியமற்றது'' எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் தொடங்கியது!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் 28 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்!

`சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்' என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``திமுக அரசு பொறுப்பேற்றது முதல், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள்களின் நடமாட்டம் மற்றும் போதைப்பொருள் கேந்திரமாக தமிழகம் மாறியுள்ளதை அடிக்கடி நான் எடுத்துரைத்து வருகிறேன். ஆனால் இந்த விஷயத்தில், தி.மு.க அரசு கேளாக் காதினராய் இன்றுவரை உள்ளது. பொம்மை முதலமைச்சரை விளம்பரப்படுத்துவது ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த ஆட்சியாளர்களை கட்டுப்படுத்தும் நேரம் நெருங்கிவிட்டது.
விதிவசத்தால் ஆட்சியாளர்களிடம் மாட்டிக்கொண்ட தமிழக மக்கள் இப்போது விழிப்படைந்திருக்கின்றனர். இனியாவது, சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளையும், போதைப்பொருள்கள் நடமாட்டத்தையும் முடிவுக்குக் கொண்டுவர, திறமையான காவல் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தி, இரும்புக்கரம் கொண்டு போதைப்பொருள்கள் நடமாட்டத்தை ஒடுக்குவதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், தி.மு.க ஆட்சியாளர்களுக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன். பொதுவெளியில் பாமர மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதுவே விடியா தி.மு.க அரசின் 28 மாத கால சாதனை'' என தெரிவித்திருக்கிறார்.
கௌதம சிகாமணி மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்!

செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக திமுக எம்.பியும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதம சிகாமணி மீது சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பதியப்பட்ட வழக்கின் விசாரணையை, எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் வரும் 4-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
தலைமைக் கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதுரையில் ஆகஸ்ட் 20 அன்று நடைபெற்ற மாநாட்டை சிறப்புடன் நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு மாநாட்டுக் குழுக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
`ஒரே நாடு ஒரே தேர்தல்' - குழு அமைத்தது மத்திய அரசு!

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான சட்ட விதிகளை உருவாக்குதல், அதை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றை அமைத்திருக்கிறது மத்திய அரசு. முன்னதாக, செப்டம்பர் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது!
``G20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் கலந்துகொள்வார் என்று நான் நம்புகிறேன்” - ஜோ பைடன்

இந்தியா-சீன எல்லை விவகாரம் பெரும் பிரச்னையாக வெடிக்கத் தொடக்கியிருக்கும் நிலையில், டெல்லியில் இந்த மாதம் நடைபெறவிருக்கும் `G20' மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளமாட்டார் என்றும், அவருக்கு பதிலாக சீன தூதர் ஒருவரும், `G20' நாடுகளின் சீன அதிகாரியாகப் பணியாற்றும் ஒருவரும் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,"G20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் கலந்துகொள்வார் என்று நான் நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டார்.












எனினும், கண்ணியத்தையும் மரியாதையையும் காப்பது அனைவரின் பொறுப்பு. தனிப்பட்ட தாக்குதல், அவதூறு அல்லது வெறுப்பைத் தூண்டும் கருத்துகளை விகடன் அனுமதிக்காது.
அத்தகைய கருத்துகள் Moderation பகுதிக்குச் செல்லக்கூடும் அல்லது நிராகரிக்கப்படலாம் என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.