``செந்தில் பாலாஜி கைதுக்கு முழுக் காரணம் அமித் ஷாவும், அண்ணாமலையும்தான்" - மாணிக்கம் தாக்கூர்
``தமிழக சுற்றுப்பயணத்தின்போது, மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்று விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.

சிவகாசி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு பொதுநிகழ்ச்சிகளில் விருதுநகர் தொகுதி எம்.பி மாணிக்கம் தாக்கூர் கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "2021-ம் ஆண்டு நடைபெற்ற அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுக்கு ரூ.1,000 கொடுத்தும் அண்ணாமலையால் வெற்றிபெற முடியவில்லை. அவரை செந்தில் பாலாஜி தோற்கடித்தார். அதன் காரணத்தால்தான் தற்போது செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டு பழிவாங்கப்பட்டிருக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு முழுக் காரணம் அமித் ஷாவும், அண்ணாமலையும்தான்.

ரெயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நான்கு துறைகளைக் கவனித்துவருகிறார். அவரைச் சந்தித்து ரெயில்வே பிரச்னைகள் குறித்து பேசமுடியவில்லை. ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரெயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் கூட்டணி வைக்கும் பட்சத்தில், தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நீடித்தால் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி தமிழகம், பாண்டிச்சேரியிலுள்ள 40 தொகுதிகளையும் எளிதாக கைப்பற்றும்.
2015-ம் ஆண்டு பிப்ரவரியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. அதன் பிறகு, இன்றுவரை கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை. இந்த நிலையில், மதுரையில் எய்ம்ஸ் கல்லூரி தொடங்கப்பட்டுவிட்டதாகவும், அதில் மாணவர்கள் படித்துவருவதாகவும் அமித் ஷா கூறியது மிகப்பெரிய பொய்.

உண்மை என்னவென்றால் மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப்பணி இன்னும் டெண்டர் நிலையைக்கூட எட்டவில்லை என்பதே உண்மைநிலை. எனவே, மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை உடனே தொடங்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். தேவைப்பட்டால் டெல்லியில் உண்ணாவிரதம் இருப்பேன்.
மத்திய அமைச்சர் அமித் ஷா, தமிழக மக்களைத் தொடர்ந்து அவமானப்படுத்திவருகிறார். தி.மு.க., காங்கிரஸைக் குற்றம் சொல்வதையே மத்திய அமைச்சர் அமித் ஷா அரசியலாக செய்துவருகிறார். தமிழர் ஒருவர் பிரதமராக வருவார் என்று அமித் ஷா பேசியதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர் வழக்கமாக பேசுவதுபோல் இதுவும் பொய்தான். பட்டாசுத் தொழிலுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் இன்னும் 10 மாதங்களில் புதிய அரசு அமைந்தவுடன் தீர்க்கப்படும்" எனக் கூறினார்.













எனினும், கண்ணியத்தையும் மரியாதையையும் காப்பது அனைவரின் பொறுப்பு. தனிப்பட்ட தாக்குதல், அவதூறு அல்லது வெறுப்பைத் தூண்டும் கருத்துகளை விகடன் அனுமதிக்காது.
அத்தகைய கருத்துகள் Moderation பகுதிக்குச் செல்லக்கூடும் அல்லது நிராகரிக்கப்படலாம் என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.