Published:Updated:

டஃப் கொடுக்கிறதா ஆம் ஆத்மி... குஜராத், இமாச்சல் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் கவனிக்கப்படுவது ஏன்?

மோடி - கெஜ்ரிவால் - சோனியா காந்தி

`காங்கிரஸ் கட்சிக்கு மாற்று நாங்கள்தான், பா.ஜ.க எங்களைப் பார்த்து பயப்படுகிறது' என இரண்டு தேசியக் கட்சிகளுக்கும் எரிச்சலூட்டிக்கொண்டிருக்கிறது ஆம் ஆத்மி.

டஃப் கொடுக்கிறதா ஆம் ஆத்மி... குஜராத், இமாச்சல் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் கவனிக்கப்படுவது ஏன்?

`காங்கிரஸ் கட்சிக்கு மாற்று நாங்கள்தான், பா.ஜ.க எங்களைப் பார்த்து பயப்படுகிறது' என இரண்டு தேசியக் கட்சிகளுக்கும் எரிச்சலூட்டிக்கொண்டிருக்கிறது ஆம் ஆத்மி.

Published:Updated:
மோடி - கெஜ்ரிவால் - சோனியா காந்தி

`காங்கிரஸ் கட்சிக்கு மாற்று நாங்கள்தான், பா.ஜ.க எங்களைப் பார்த்து பயப்படுகிறது' என இரண்டு தேசியக் கட்சிகளுக்கும் எரிச்சலூட்டிக்கொண்டிருக்கிறது ஆம் ஆத்மி. `டெல்லி மாடல்' எனும் பெயரில் தலைநகரைத் தாண்டி பஞ்சாப், ஹரியானா, கோவா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் எனப் பிற மாநிலங்களின் தேர்தல்களிலும் களமிறங்கி, தனக்கான வலுவான கிளையை ஆம் ஆத்மி ஊன்றிவருகிறது. வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி கணிசமான வாக்கு சதவிகிதத்தையும் போட்டியிடும் முதல் தேர்தலிலேயே ஆம் ஆத்மி பெற்றுவிடுகிறது. அந்த வகையில், டெல்லி, பஞ்சாப் வெற்றியைத் தொடர்ந்து, தற்போதைய குஜராத், இமாச்சலப் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தலிலும் கால்பதித்திருக்கிறது ஆம் ஆத்மி.

ஆம் ஆத்மி - பாஜக
ஆம் ஆத்மி - பாஜக

குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி:

குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி களமிறங்குவதை அனைத்துக் கட்சிகளும் உன்னிப்பாக கவனிக்கக் காரணம், குஜராத் பா.ஜ.க-வின் கோட்டை! பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலம். `குஜராத் மாடல்' எனும் பிரசாரம்தான், மோடியை வெற்றிபெறச் செய்து இந்தியாவையே பா.ஜ.க-வின் ஆட்சி, ஆளுகைக்குள் கொண்டுவர முக்கியக் காரணம். இதுமட்டுமல்லாமல், கால் நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து குஜராத்தை பா.ஜ.க ஆண்டுவருகிறது. இப்படி பா.ஜ.க-வின் அசைக்க முடியாத எஃகு கோட்டைக்குள் துளையிடுவதைப்போல ஆம் ஆத்மி நுழைவதை பா.ஜ.க-வால் துளியும் சகித்துக்கொள்ள முடியவில்லை.

குறிப்பாக, கடந்த ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற சூரத் மாநகராட்சி தேர்தலில் 27 இடங்களில் வெற்றிபெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது ஆம் ஆத்மி. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஒன்றில்கூட வெற்றிபெறவில்லை. அப்போதே ஆம் ஆத்மியின் இந்த வெற்றி பா.ஜ.க., காங்கிரஸ் என இரண்டு தரப்புக்கும் குடைச்சலை உருவாக்கியது. அதேநேரம் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, குஜராத்தில் களம்காணப் பெரும் ஊக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தது. இந்த நிலையில், குஜராத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்க பா.ஜ.க., காங்கிரஸ் என்ற வழக்கமான போட்டிக்கு பதிலாக மூன்றாவது அணியாக ஆம் ஆத்மியும் நுழைந்தது. பிரதமர் மோடி, அரவிந்த் கெஜ்ரிவால் என மூத்த தலைவர்கள் சூறாவளிப் பிரசாரத்தை மேற்கொண்டனர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

குறிப்பாக, பா.ஜ.கவுக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ``குஜராத் மாநிலத்துக்குள் புதிய தோற்றங்களுடன் 'அர்பன் நக்சல்கள்' நுழைய முற்படுகிறார்கள். அவர்கள் தங்களின் உடைகளை மாற்றியுள்ளனர். நம் மாநிலத்தின் துடிப்புமிகு இளைஞர்களை அவர்கள் தவறாக வழிநடத்துகின்றனர். இந்த அர்பன் நக்சல்கள் நம் இளம் தலைமுறையினரை அழிக்க நாம் அனுமதிக்கக் கூடாது" என மறைமுகமாக ஆம் ஆத்மி கட்சியை விமர்சித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

அதேசமயம், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், `குடும்பத்துக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.1,000, வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000, விவசாயத்துக்கு இலவசம் மின்சாரம்' என இலவச வாக்குறுதிகள் கொடுத்தார். மேலும், பா.ஜ.க-வின் அடிமடியில் கைவைக்கும் வகையில், ``குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், டெல்லி மக்களைப்போல, குஜராத் மக்களும் அயோத்திக்குச் சென்று ராமரை வழிபட இலவச தரிசன திட்டத்தைச் செயல்படுத்துவோம்!" என்றார். தொடர்ந்து, ``பசு பராமரிப்புக்காக நாள்தோறும் ரூ.40 வழங்குவோம், பால் கறக்காத பசுக்கள், சாலைகளில் சுற்றித்திரியும் பசுக்களைப் பாதுகாப்பதற்காக பராமரிப்பு கொட்டகைகள் அமைப்போம். பசுக்களின் நலனுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்" என பா.ஜ.க பாணியிலேயே வாக்குறுதிகள் கொடுத்தார்.

இதை விமர்சிக்கும் வகையில் பிரதமர் மோடி, ``நமது நாட்டில், தேர்தல் நேரத்தில் இலவச அறிவிப்புகளை அள்ளிவீசும் ஒரு புதிய கலாசாரம் உருவாகியிருக்கிறது. இது நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் ஆபத்து. இது போன்ற அறிவிப்புகள் குறித்து இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்'' என்றார்.

அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால், ``உங்கள் நண்பர்களின் ஆயிரம் கோடி ரூபாய்க் கடன்களை ரத்துசெய்வதும், வெளிநாட்டு அரசுகளின் ஒப்பந்தங்களை உங்கள் நண்பர்களின் நிறுவனங்களுக்கு வழங்குவதும்தான் இலவசங்களைக் காட்டிலும் ஏமாற்றும் செயல். என்னை விமர்சிப்பவர்கள், தங்கள் அமைச்சர்களுக்கு அனைத்து வசதிகளும் கொடுக்கிறார்கள். அதுவே மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தினால், இலவசம் என்கிறார்கள்'' எனக் காட்டமாக பதிலடி கொடுத்தார்.

மோடி - கெஜ்ரிவால்
மோடி - கெஜ்ரிவால்

பா.ஜ.க-வைப்போல காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மியை விமர்சித்துவருகிறது. குறிப்பாக, ``காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்துவதற்காகத்தான் ஆம் ஆத்மி மற்ற மாநிலங்களில் களமிறங்குகிறது. பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து, பா.ஜ.க எளிமையாக வெற்றிபெற ஆம் ஆத்மி உதவுகிறது. பா.ஜ.க-வின் மற்றோர் அணிதான் ஆம் ஆத்மி" எனக் கடுமையாக விமர்சித்தது.

இதற்கும் பதிலடிகொடுக்கும்விதமாக, ``காங்கிரஸைப் பலவீனப்படுத்த நான் தேவையா... ராகுல் காந்தியே அந்த வேலையைச் சிறப்பாகச் செய்துவருகிறார். அப்படி இருக்கும்போது நான் அதற்குத் தேவையா?" என நக்கலாகப் பதிலளித்திருக்கிறார். மேலும், ``பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியுடன் ரகசியக் கூட்டங்களை நடத்தியிருக்கிறது. காங்கிரஸும் பா.ஜ.க-வும் மறைமுகக் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மியை வீழ்த்த முயல்கின்றன. எங்களைத் தோற்கடிக்க இரு கட்சிகளும் ஒரே மொழியைப் பயன்படுத்துகின்றன. பா.ஜ.க எதிர்ப்பு ஓட்டுகளைப் பிரிப்பதற்கு காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க பலப்படுத்த முயல்கிறது. ஆம் ஆத்மி ஓட்டுகளைப் பிரிக்கும் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருக்கிறது" என பதில் குற்றசாட்டையும் வைத்திருக்கிறார்.

ஆம் ஆத்மி - காங்கிரஸ்
ஆம் ஆத்மி - காங்கிரஸ்

கருத்துக்கணிப்புகளின்படி, ``குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சியமைக்க வாய்ப்பில்லைதான். ஒருசில இடங்களில் வெற்றிபெறலாம். இருப்பினும், போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெறும். பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு விழக்கூடிய வாக்குகளில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கான வாக்குகளைப் பெருமளவு பிரிக்கும். 15% அதிகமான வாக்குகளைப் பெறும்" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இமாச்சலப் பிரதேசத் தேர்தலில் ஆம் ஆத்மி:

பா.ஜ.க ஆட்சி செய்துவரும் மற்றொரு மாநிலமான இமாச்சலப் பிரதேசத்துக்கு, வரும் நவம்பர் 12-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. குஜராத்துக்கு இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், இமாச்சலப் பிரதேசத்துக்கான தேர்தல் தேதியை தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதால் அந்த மாநில அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. மேலும், பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் சொந்த மாநிலம் என்பதால், கூடுதல் கவனமும் பெறுகிறது. மொத்தம் 68 சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்டிருக்கும் இமாச்சலப் பிரதேசத்திலும், வழக்கமாக பா.ஜ.க- காங்கிரஸ் என இரு கட்சிகளுக்கிடையே இருந்துவந்த போட்டியில், ஆம் ஆத்மி கட்சியும் சேர்ந்து, மும்முனைப் போட்டியை உருவாக்கியிருக்கிறது.

கெஜ்ரிவால் - மோடி
கெஜ்ரிவால் - மோடி

கருத்துக்கணிப்புகளின்படி, ``குஜராத்தைப்போலவே, இமாச்சலப் பிரதேசத்திலும் பா.ஜ.க-வே ஆட்சியைத் தக்கவைக்கும். காங்கிரஸ் கட்சிக்கான வாக்கு சதவிகிதம் குறையும். அதேசமயம், ஆம் ஆத்மிக்கு 10% வாக்குகள் கிடைக்கும்" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

எது எப்படி இருப்பினும், தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியான பிறகே உண்மைநிலை உலகுக்குப் புலப்படும்!