எங்கள் வீட்டில் எல்லோரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என டிரெட்மில் ஒன்று வாங்கினோம். ஆனால், ஒருவாரம்கூட அதைப் பயன்படுத்தவில்லை. இப்போது துணி காயவைப்பதற்குத்தான் அது பயன்படுகிறது. இடத்தை அடைத்துக்கொண்டு நிற்கிறது. பல வீடுகளிலும் இப்படித்தான் நடப்பதாகக் கேள்விப்படுகிறேன். உடற்பயிற்சிக் கருவிகளைத் தொடர்ந்து பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்? எப்படி மோட்டிவேட் செய்துகொள்வது?
- பவித்ரா, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்
இந்த விஷயம் பெரும்பாலான வீடுகளில் நடக்கும் சகஜமான ஒன்றுதான். ஒரு பொருளை ஆசையாக வாங்குவோம். ஆனால், வாங்கிய பிறகு, அதைப் பயன்படுத்தும் ஆர்வம் இல்லாமல் போய்விடும். நீங்கள் கேட்டுள்ள மோட்டிவேஷனை எந்தக் கடையிலும் வாங்க முடியாது. அது உங்களுக்குள்ளிருந்துதான் வர வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஜிம்முக்குப் போக வேண்டாம் என நினைத்து இப்படி வீட்டிலேயே பயன்படுத்தும் வொர்க் அவுட் கருவிகளை வாங்கி வைப்பார்கள் சிலர். ஆனால், அவற்றைப் பயன்படுத்த மாட்டார்கள். அதே மாதிரிதான் ஜிம்மில் சேர பணம் கட்டுபவர்களும்... பணம் கட்டும்போது இருக்கும் வேகம், பிறகு காணாமல் போய்விடும். வீட்டிலேயே வொர்க் அவுட் செய்வதோ, ஜிம்மில் சேர்வதோ எதுவானாலும் உங்களை நீங்கள் முதலில் மனதளவில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
அவசரப்பட்டு சைக்கிள் வாங்குவது, டிரெட்மில் வாங்குவது எனப் பல வீடுகளிலும் இப்படி நடக்கும். அதை ஏன் வாங்கினோம் என்று யோசிக்க வேண்டும். அதைப் பயன்படுத்திப் பலன்பெற வேண்டும் என்ற உத்வேகத்தை நீங்கள்தான் உங்களுக்கு கொடுத்துக்கொள்ள வேண்டும். வொர்க் அவுட் என்பது அது வீட்டில் செய்தாலும் சரி, ஜிம்மில் சேர்ந்து செய்தாலும் சரி, ரெகுலராகச் செய்யப்பட வேண்டும். அதற்கு முழுப் பொறுப்பாளர் நீங்கள் மட்டும்தான்.
ஒரு நல்ல டிரெட்மில் வாங்க என்னென்ன விஷயங்களைப் பார்க்க வேண்டும்?
-ASHOKKUMAR
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உங்கள் பட்ஜெட், வீட்டின் இடவசதி என இரண்டு விஷயங்களைப் பொறுத்து முடிவுசெய்யப்பட வேண்டியது இது. டிரெட்மில் வாங்குவதற்கு முன், முந்தைய கேள்வியையும் அதற்கான பதிலையும் ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள். வாங்குவதில் உள்ள அவசரமும் அக்கறையும் அதைப் பயன்படுத்துவதிலும் இருக்குமா என யோசியுங்கள்.

அதையும் தாண்டி வாங்குவது என முடிவெடுத்துவிட்டால் உடற்பயிற்சிக் கருவிகள் விற்பனை செய்யப்படும் கடைகளை அணுகினால் உங்களுடைய பட்ஜெட்டுக்கேற்ற பல பிராண்டுகளை, மாடல்களை உங்களுக்குக் காட்டுவார்கள். அவற்றிலிருந்து உங்களுக்குப் பிடித்ததைத் தேர்வு செய்து கொள்ளலாம்.