வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
'மகனே. இதுவரை உன் தந்தை யார் என்று ஒருபோதும் உன்னிடத்தில் நான் சொல்லியது இல்லை. மரணப்படுக்கையில் இருக்கும் நான் இன்று ஒரு உண்மையை உனக்கு சொல்கிறேன். எனது இளமை காலத்தில் ஒரு ஜெர்மானிய வீரனுடன் தொடர்பில் இருந்தேன். அவன் மூலம் பிறந்த குழந்தை தான் நீ. அந்த வீரனின் பெயர் அடால்ஃப் ஹிட்லர்!'
ஹிட்லர் இறந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாய் இப்படி சொல்லிய போது அதிர்ந்து போனார் ஜின் மேரி லோரட் ( Jean - Marie Loret ).
சில ஆண்டுகளுக்குப் பிறகு இதை பொது வெளிக்கு கொண்டுவந்த லோரட், தன்னை நிருபிக்க பல முயற்சிகளை செய்து பார்த்தார். ஹிட்லரின் உருவதை ஒத்தே அவரும் இருந்தார். ஹிட்டலரைப் போன்று மீசை வேறு. ஆனால் சரியான ஆதாரங்கள் அவரிடத்தில் இல்லாததால் 'ஹிட்லரின் மகன்' என்ற அந்தஸ்து கிடைக்காமல் போனது.
ஹிட்லர் என்ற தனிமனிதனை ஆராய்வது சுவாரசியமானது.
காரணம், ஹிட்லரைச் சுற்றி இப்படி பல சர்ச்சைகள் சூழ்ந்திருப்பதால் தான்.
அதே சமயம் வரலாற்றில் கொஞ்சம் மிகையாகாவே ஹிட்லர் பதிவுசெய்யப் பட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.
ஹிட்லரின் மீசை முதல் அவரது ஆண்மை வரை எதையும் ஆராய்ச்சியாளர்கள் விட்டுவைக்கவில்லை. இதிலிருந்து ஒன்றை நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஹிட்லரை ஒரு சர்ச்சைவாதியாக மட்டும் யாரும் பார்க்கவில்லை, அதையும் தாண்டி அவரிடமிருந்த ஏதோ ஒன்று இவர்களை கவர்ந்திருக்கிறது.
ஹிட்லரின் மனநலனை ஆராய்ந்து தனி புத்தகமாகவே வெளியிட்டனர் பலர். அதில் வால்டர் சார்லஸ் லேங்கர் ( Walter Charles Langer ) என்பவர் முதன்மையானவர். பலவிதமான மனநோய்களால் ஹிட்லர் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற ஒரு பட்டியலே அவர் வெளியிட்டார்.
Borderline Personality Disorder, Mania, Schizophrenia உள்ளிட்ட நோய்கள் அதில் அடங்கும்.

பல லட்சம் யூத மக்களை கொன்று குவித்த ஹிட்லர், அடிப்படையில் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர் என்றும், தாயைப்போல தானும் புற்றுநோயால் இறக்க நேரிடலாம் என்ற பயம் அவரிடம் இருந்தது எனவும் விவரிக்கிறார் வால்டர்.
ஆனால் Parkinsonism எனும் மூளை சம்பந்தபட்ட நோயைத் தவிர, வேறு எந்த மனநோயும் ஹிட்லருக்கு இருந்ததாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் இல்லை.
ஹிட்லர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்றும் பெண்களிடம் கொடூரமாக நடந்து கொள்ளும் ஒரு 'சேடிஸ்ட்' என்றும் பல வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பு எழுதியிருக்கிறார்கள்.
ஆனால் இவை எதுவும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் கிடையாது.
ஹிட்லரைப் பற்றிய சர்ச்சைகள் அவர் இறந்த பிறகும் தொடர்ந்தன. அவருடைய மரணத்திலும் பல கேள்விகள் எழுந்தது. ஹிட்லர் உண்மையில் சாகவில்லை, அவர் சோவியத்திடமிருந்து தப்பித்து வேறோரு நாட்டிற்கு சென்று விட்டார் என்று பலர் நம்பினர்.
ஆரம்பத்தில் இதை மறுத்த சோவியத், பின்பு சந்தேகப்பட்டு ஹிட்லரின் சவம் இருக்கும் மறைமுக இடத்தை ஆராய உத்தரவிட்டது. அதன்பேரில் ஹிட்லரின் தாடை பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட எலும்பின் பாகங்கள், அவருடைய பற்கள் என சிலவற்றை கொண்டு வந்தனர் ஆராய்ச்சியாளர்கள்.
அதை வைத்து பலதரப்பட்ட சோதனைகளை செய்து பார்த்தனர். பின்பு அதை மாஸ்கோவில் உள்ள ஒரு அருங்காட்சியத்தில் வைத்தனர்.
அதற்குப் பிறகு சமீபத்தில் 2017 ஆம் ஆண்டு பிலிப் சார்லியர் ( Philippe Charlier ) என்ற ஆராய்ச்சியாளர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், 'இந்த பற்கள் சேமித்து வைக்கப்பட்ட ஹிட்லரின் மருத்துவ குறிப்புகளோடு ஒத்துப்போகிறது. இது கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் பழமை வாய்ந்தது. எனவே இது கண்டிப்பாக ஹிட்லருடையது தான்', என அடித்துச் சொன்னார்.
ஹிட்லர் இறந்து கிட்டத்தட்ட 78 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் உலகில் ஏதோ ஓர் மூலையில், யரோ ஒருவர் ஹிட்லரைப் பற்றி பேசிக்கொண்டு தான் இருக்கக்கூடும்.
ஹிட்லரைப் பற்றி ஆயிரக்கணக்கான புத்தகங்கள் ஆண்டுதோறும் வெளிவந்து கொண்டேதான் இருக்கின்றன.
தமிழில் எழுத்தாளர் Mugil Siva எழுதிய புத்தகம் குறிப்பிடத்தக்கது.
வரலாற்றை ஆராயும் எந்த ஒரு ஆர்வலரும் ஹிட்லரைக் கடக்காமல் போவது சாத்தியம் அல்லாத ஒன்று. ஹிட்லரைப் படித்தாலே போதும், உலகப்போர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். அந்த அளவிற்கு வரலாற்றின் பொக்கிஷம் ஹிட்லர். ஆனால் ஹிட்லரை சுற்றிச் சுழலும் சர்ச்சைகள் இன்றளவும் தீர்ந்தபாடில்லை.
எது எப்படி இருந்தாலும் ஹிட்லர் ஒரு மர்மங்களின் புதையல். அடுத்த நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அவரை ஆராய நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.
- சரத்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.