முல்லை பெரியாறு விவகாரம்: ``கேரளா ஆளுநரை எதிர்த்துப் போராடுவோம்!" - பி.ஆர்.பாண்டியன்
``கடந்த 18-ம் தேதி முதல் அணை பாதுகாப்பு மசோதா செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கெனவே மசோதா குறித்து பாராளுமன்றத்தில் தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது."

முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டப்படும் என்று கேரள ஆளுநர் முகமது ஆரிப்கான் கூறியதைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பிப்ரவரி 21-ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரிடம் பேசினோம். ``முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவோம் என்றும், 136 அடிக்கு மேல் தண்ணீரை தேக்கி வைக்க அனுமதிக்க மாட்டோம் எனக் கேரள சட்டமன்றத்தில் அம்மாநில ஆளுநர் முகமது ஆரிப்கான் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவரது செயல் அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது மட்டுமன்றி அண்டை மாநில உறவுகளை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.

உச்ச நீதிமன்றத்தில் முல்லை பெரியாறு குறித்த அனைத்து வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிற நிலையில் இவரது கருத்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாக அமைந்துள்ளது. இவரது கருத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் போராட்டக் களத்துக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரளா தமிழகம் இடையேயான உறவுகளை சீர்குலைக்கும் இவரது நடவடிக்கையைக் குடியரசுத் தலைவர் அனுமதிக்கக் கூடாது. அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாகப் பேசியுள்ள ஆளுநர் முகம்மது ஆரிப்கானை திரும்பப் பெற குடியரசுத் தலைவர் முன்வர வேண்டும் என வலியுறுத்தி வரும் 21-ம் தேதி தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
கடந்த 18-ம் தேதி முதல் அணை பாதுகாப்பு மசோதா செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கெனவே மசோதா குறித்து பாராளு மன்றத்தில் தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அணைப் பாதுகாப்பு மசோதா செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் குடியரசுத் தலைவர் அனுமதி வழங்கியுள்ளதாக வந்திருக்கிற செய்தி கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணானதாக உள்ளது. குறிப்பாக, இந்தியாவில் உள்ள பல்வேறு நதிநீர் ஆணையங்களைவிட தன்னாட்சி அதிகாரம் கொண்ட தனிச்சிறப்பு பெற்றது காவிரி மேலாண்மை ஆணையம் ஆகும்.

மற்ற ஆணையங்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆணையம் மட்டும் மத்திய அரசுக்கு எதிராகத் தமிழக அரசு வழக்கு தொடர்ந்ததையடுத்து உச்ச நீதிமன்றம் தன் நேரடி கட்டுப்பாட்டில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து செயல்படுத்தி வருகிறது. தற்போது ஆணையம் தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்படுகிறது.
இந்நிலையில், அணைகள் பாதுகாப்பு மசோதா என்கிற பெயரில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் பறிக்கப்படுமா? ஆணையம் அணை பாதுகாப்பு அமைப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்படுமா? என்பது குறித்து தமிழக முதலமைச்சர் தெளிவான விளக்கத்தை விவசாயிகளுக்கு வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்றார்.













எனினும், கண்ணியத்தையும் மரியாதையையும் காப்பது அனைவரின் பொறுப்பு. தனிப்பட்ட தாக்குதல், அவதூறு அல்லது வெறுப்பைத் தூண்டும் கருத்துகளை விகடன் அனுமதிக்காது.
அத்தகைய கருத்துகள் Moderation பகுதிக்குச் செல்லக்கூடும் அல்லது நிராகரிக்கப்படலாம் என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.