Published:Updated:

ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் கூகுள் பே ஃபிக்சட் டெபாசிட் திட்டம்; இனி என்ன நடக்கும்?

Google Pay
Google Pay ( Photo: Twitter/ @GooglePayIndia )

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் - கூகுள் பே செயலியின் மூலம் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்பதுதான் இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம்.

கூகுள் நிறுவனம் தனது கூகுள் பே செயலி மூலமாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு வைப்புநிதி (எஃப்.டி) வசதியை வழங்க இருக்கிறது. இந்த வசதி ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் மற்றும் ஃபின்ன்டெக் (Fintech infrastructure) ஸ்டார்ட்-அப் நிறுவனமான சேதுவுடன் இணைந்து இந்த வசதியைத் தரவுள்ளது என்கிற செய்தி சமீபத்தில் வெளியாகி, அனைத்து டெபாசிட்தாரர்களின் புருவங்களை உயர வைத்தது.

இந்தத் தகவல் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியானபோதே, பேசுபொருளாக மாறியது. ஏனெனில், இந்திய வங்கிகள், தங்களின் ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்குக் குறைவான வட்டி விகிதம் வழங்கிவரும் நேரத்தில், கூகுள் பே தளத்தைப் பயன்படுத்தி டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், ஆண்டுக்கு 6.35% வட்டி கொடுப்பதாக உறுதியளித்தது.

Google Pay
Google Pay
Photo: Twitter/ @GooglePayIndia
`இனி கூகுள் பே-யிலேயே ஃபிக்சட் டெபாசிட்!' - புதிய முதலீடுக்கு என்ன செய்யவேண்டும்?

பிக்சட் டெபாசிட் திட்டம்!

இந்தத் திட்டத்தின் ஆரம்ப நிலையில் ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்கின் திட்டங்களை மட்டும் கூகுள் பே அளிக்கிறது. இந்தத் திட்டத்தில் இணைந்துகொள்ள விரும்பும் பயனர்கள், ஒரு முறை கடவுச்சொல் (OTP) மூலம் ஆதார் அடிப்படையிலான கே.ஒய்.சி (KYC) விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் சேமிப்புக் கணக்கு இல்லையென்றாலும், கூகுள் பே செயலியின் மூலமாக ஈக்விடாஸ் எஃப்.டி-ல் முதலீடு செய்யலாம் என்பதுதான் இத்திட்டத்தின் சிறப்பம்சம். ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் இணைந்தவுடன், வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும். எஃப்.டி முடியும்போது அதே வங்கி கணக்கு பணம் வந்து சேரும். தற்போது இந்த வசதி நடைமுறைக்கு வந்திருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கியின் கவனம் இந்தத் திட்டத்தின் மீது திரும்பியிருக்கிறது.

பாலமாக செயல்படும்!

இது குறித்து, கூகுள் பே தரப்பில், ``நாங்கள் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு நல்ல திட்டத்தை வழங்க வேண்டும் என்பதற்காக, ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ஃபிக்சட் டெபாசிட் வசதியை கூகுள் பே தளத்தில் அனுமதித்து, அதை வாடிக்கையாளர் பயன்படுத்திக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறோம். கூகுள் பே, ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையில் ஒரு பாலமாக மட்டும் செயல்படும். வருமானம் ஈட்டும் நோக்கில் இதை செய்யவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெபாசிட்
டெபாசிட்

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்கின் மூத்த தலைவர் முரளி வித்யநாததன், ``கூகுள் பே தளத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு, நாங்கள் எங்களுடைய ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தைக் கொண்டு சேர்ப்பதற்காகவே கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறோம். இந்தத் திட்டம் சார்ந்த நடவடிக்கைகளில் கூகுள் நிறுவனம் தலையிடாது. மேலும், ஃபிக்சட் டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்களின் விவரங்களை கூகுள் நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்ள மாட்டோம். ஆர்.பி.ஐ-யின் அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டுதான் இந்தத் திட்டத்தை கூகுள் நிறுவனத்துடன் சேர்ந்து தொடங்கியிருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டம் தொடர்பாக ரிசர்வ் வங்கி கேட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் தந்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இதற்கான பதில் எதுவும் ரிசர்வ் வங்கியிடமிருந்து வரவில்லை என்று சொல்லப்படுகிறது. புதுமையான இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டம் டெபாசிட்தாரர்களிடம் பல புதிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு