நெல்லை: கட்டுப்பாட்டை இழந்த 108 ஆம்புலன்ஸ்; நடைப்பயிற்சி மேற்கொண்டவருக்கு நேர்ந்த சோகம்!

ஆம்புலன்ஸ் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்ததால், அதை நிறுத்த ஓட்டுநர் முயன்றபோது சாலையில் நடந்து சென்றவர் மீது மோதி விபத்து நடந்திருக்கிறது. பின்னர் சாலையோர மரத்தில் மோதி நின்றிருக்கிறது.

Published:Updated:
விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்
விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்
Google Preference
0Comments
Share

நெல்லை மாவட்டம், முக்கூடல் பகுதியிலுள்ள நோயாளியை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஏற்றிவந்த 108 ஆம்புலன்ஸ், மீண்டும் முக்கூடல் நோக்கி திரும்பிக்கொண்டிருந்தது. அன்னராஜ் என்பவர் அந்த வாகனத்தை ஓட்டிச் சென்றிருக்கிறார்.

விபத்து
விபத்து

நெல்லை புறநகர்ப் பகுதியான கொண்டாநகரம் கிராமத்தின் அருகே ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்திருக்கிறது. கட்டுப்பாட்டை இழந்து ஓடிய வாகனத்தை நிறுத்த ஓட்டுநர் அன்னராஜ் முயன்றிருக்கிறார். ஆனால் ஆம்புலன்ஸ் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த சுப்பிரமணியன் என்பவர்மீது மோதியது. அதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியன், கொண்டாநகரம் கிராமத்தில் கோமதி நகரில் வசித்துவந்தார். அந்தப் பகுதியிலுள்ள மளிகைக்கடையில் வேலை செய்துவந்த அவருக்கு இரு குழந்தைகள் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

விபத்து நடந்த இடம்
விபத்து நடந்த இடம்

கட்டுப்பாடு இல்லாமல் ஓடிய ஆம்புலன்ஸ், சாலையோரத்திலுள்ள மரத்தின் மீது வேகமாகச் சென்று மோதி நின்றது. ஆம்புலன்ஸ் உள்ளே சிக்கிக்கொண்ட ஓட்டுநர் அன்னராஜ் மற்றும் உதவியாளரை அந்தப் பகுதி மக்களும் போலீஸாரும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து சுத்தமல்லி போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

Loading...
Vikatan

விகடனின் கிளாசிக் படைப்புகள் இப்போது ஆடியோ புத்தகங்களாக!