Published:Updated:

Exclusive: ``எங்கள் கூட்டணியினருடன் பல விஷயங்களில் முரண்படுகிறோம்...” - கே.எஸ்.அழகிரி `பளிச்’

கே.எஸ்.அழகிரி

``காங்கிரஸ் கட்சி நாத்திகக் கட்சி அல்ல, கடவுள் மறுப்பு சொல்கிற கட்சியும் இல்லை. இதைப் பல பேர் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.” - கே.எஸ்.அழகிரி

Exclusive: ``எங்கள் கூட்டணியினருடன் பல விஷயங்களில் முரண்படுகிறோம்...” - கே.எஸ்.அழகிரி `பளிச்’

``காங்கிரஸ் கட்சி நாத்திகக் கட்சி அல்ல, கடவுள் மறுப்பு சொல்கிற கட்சியும் இல்லை. இதைப் பல பேர் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.” - கே.எஸ்.அழகிரி

Published:Updated:
கே.எஸ்.அழகிரி

`காங்கிரஸ் உட்கட்சிப்பூசல்கள் பற்றி வேண்டாம்...’ என்கிற நிபந்தனையோடு பேசத் தொடங்கிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் நடப்பு அரசியல் குறித்து, அவரின் சென்னை இல்லத்தில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தேன்.

`` `கலைஞர், ஜெயலலிதாவுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருக்கிறது. அதைச் சரியாகப் பயன்படுத்தினால் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க முடியும்’ என்கிறார் அமித் ஷா. அதுபோல் தேசியக் கட்சியான காங்கிரஸ் எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லையா?”

`` `தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது’ என்று அமித் ஷா சொல்வது தவறான கருத்து. ஓர் அரசியல் கட்சித் தலைவராக ஒரு மாநிலத்துக்கு வந்தால் அவருடைய கட்சிக்காரர்களுக்கு ஊக்கம் கொடுக்கக்கூடிய வார்த்தைகள்தன் அது. தி.மு.க-வில் கலைஞருக்குப் பிறகு அந்த இடத்தில் ஸ்டாலின் ஒரு வலிமையான தலைவராக, சிறந்த முதலமைச்சராக உருப்பெற்றிருக்கிறார். அமித் ஷா கூறியது அ.தி.மு.க-வுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஏனென்றால் ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு இணையாக அங்கு ஒரு தலைமை உருவாகவில்லை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ராகுல் காந்தியின் தலைமை, தமிழக மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. நாங்களும் அவரின் தலைமையை மேம்படுத்துகிறோம். கட்சியில் முதன்முறையாக பொதுக்குழு உறுப்பினர்கள் ஏறக்குறைய 380-க்கும் மேல் மெரிட்டில், மின்னணு முறையில், உறுப்பினர் சேர்க்கை அடிப்படையில் வந்திருக்கிறார்கள்.”

அமித் ஷா
அமித் ஷா

``இதுபோல் மின்னணு முறைக்கு காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்பு இருக்கிறதே?”

``இல்லை. இது தவறான விமர்சனம். ஏறக்குறைய 55 ஆண்டுகளாக காங்கிரஸில் இருக்கிறேன். ஏதோ ஓர் இடத்தில் உட்கார்ந்துகொண்டு புத்தகத்தில் எழுதுவதைத்தான் ஏமாற்று வேலையாகப் பார்க்கிறேன். ஏனெனில், இந்த முறையில் நேரடியாக, ‘நான் காங்கிரஸ் கட்சியில் சேருகிறேன்’ என்று அவர்கள் சொல்வதை வீடியோ எடுக்க வேண்டும். அவர்களுடைய ஆதார் எண், மொபைல் எண், முகவரி எல்லாவற்றையும் குறிக்க வேண்டும். எனவே அதில் தவறே நிகழாது.”

`` `தமிழகத்தில் பா.ஜ.க பிசாசுபோல் வளர்ந்துவருகிறது’ என்று உங்கள் கூட்டணிக் கட்சியின் மூத்த தலைவர் சொல்கிறாரே... அதுபோல் காங்கிரஸ் வளர்ச்சிக்கு மாநிலத் தலைவராக ஏதும் திட்டம் வைத்திருக்கிறீர்களா?”

Exclusive: ``எங்கள் கூட்டணியினருடன் பல விஷயங்களில் முரண்படுகிறோம்...” - கே.எஸ்.அழகிரி `பளிச்’

“நாங்கள் பிசாசுபோல் வளர முடியாது... நல்ல முறையில்தான் வளர முடியும். துரைமுருகன் அவர்கள் நக்கலாகப் பேசக்கூடியவர். வேறு விஷயத்தில் ஏதாவது பேசியிருப்பார். ஆளுகின்ற கட்சி ஒரு கூட்டம் போட்டால் செலவு செய்து கூட்டத்தை அழைத்து வருகிறார்கள். அதை வைத்துக்கொண்டு அவர்கள் வளர்ந்துவிட்டார்கள் என்று சொல்லிவிட முடியாது. தேர்தலில் 23 தொகுதிகளில் நின்றார்கள். நான்கு தொகுதியில்தானே ஜெயித்தார்கள்... இன்றைய தலைவரும் வெற்றிபெறவில்லை. அன்றைய தலைவரும் வெற்றிபெறவில்லை. அப்படி இருக்கும்போது இதில் என்ன வளர்ச்சி?”

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

`` `காங்கிரஸ் கட்சியில் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்குத் தகுதியானவர்கள் யாருமில்லை’ என்கிறாரே கார்த்தி சிதம்பரம்..?”

“வருகிறபோது அது தானாக வரும். அரசியல் கட்சியின் வாய்ப்பு என்பது அந்தச் சூழலை பொறுத்ததுதான். 50 ஆண்டுகள் நாங்கள் ஆட்சியில் இல்லை என்றாலும் இயக்கம் உயிரோட்டமாக இருக்கிறது. எந்த ஊருக்குப் போனாலும் எங்களுடைய கிளைகள் இருக்கின்றன. இன்றைக்கும் காங்கிரஸ் ஒரு வலிமையான அரசியல் கட்சி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனவே முதல்வருக்கான தேவை வரும்போது எல்லாம் வருவார்கள்.”

“தமிழகத்தில் மக்கள் நல பிரச்னைகளில் காங்கிரஸ் நிர்வாகிகள் நேரடியாகச் சென்று அணுகுவதில்லை என்கிற வாதத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இதெல்லாம் தவறு... நாங்கள் நிறைய விஷயங்களில் கலந்துகொள்கிறோம், போராடுகிறோம், செயல்படுகிறோம். ஊடகங்களுக்கும், விமர்சனம் செய்கிறவர்களுக்கும் எளிதாகக் கிடைக்கிற இரை காங்கிரஸ் என்பதால் இது போன்ற விமர்சனங்கள் வருகின்றன.”

ராகுல் காந்தி நடைப்பயணம்
ராகுல் காந்தி நடைப்பயணம்

“தி.மு.க-வுடனான காங்கிரஸ் கூட்டணி திருப்திகரமாக இருக்கிறதா?”

“அதில் என்ன சந்தேகம்... திருப்திகரமாகத்தான் இருக்கிறது.”

கே.எஸ். அழகிரி
கே.எஸ். அழகிரி

“அப்புறம் ஏன் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் ஏகப்பட்ட முரண்கள் இருக்கின்றன என்று சொல்லியிருந்தீர்கள்?”

“அது முரண்பாடு கிடையாது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எங்களது கூட்டணிக் கட்சிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும், எங்கள் கூட்டணியில் இருப்பவர்களும் ஏற்றுக்கொள்ள முடியாது. உதாரணமாக தாராளமயமாக்குவதையும், உலக வர்த்தகத்தையும் கொண்டு வந்தது காங்கிரஸ். ஆனால், பொதுவுடமை இயக்கங்கள் இதை வன்மையாக எதிர்க்கிறார்கள். இருந்தாலும் நாங்களும் அவர்களும் ஒரே கூட்டணியில் இருக்கிறோம். அதேபோல் தி.மு.க-வுடன் பேரறிவாளன் விடுதலை, இட ஒதுக்கீடு எனப் பல விஷயங்களில் முரண்படுகிறோம். நாங்களெல்லாம் ஒன்று சேர்வது மதச்சார்பின்மை என்கிற ஒரு நேர்கோட்டில்.”

“ஆனால், மதச்சார்பின்மை என்கிற விஷயத்தில் சறுக்கியதால்தான் காங்கிரஸுக்குப் பல இடங்களில் பின்னடைவு என்கிறார்களே?”

“மதச்சார்பின்மையிலேயே இரண்டு விதம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி நாத்திகக் கட்சி அல்ல, கடவுள் மறுப்பு சொல்கிற கட்சியும் இல்லை. இதைப் பல பேர் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். ஆனால், மதத்தின் பெயரால் அரசியல் செய்யக் கூடாது என்று சொல்கிறோம். `நான் ஓர் உண்மையான இந்து. நான் ஸ்ரீராமபிரான் கட்டளைப் பிரகாரம் வாழ்கிறேன். நடக்கிறேன். அவரின் வார்த்தைகளே என் வழிகாட்டி. இவையெல்லாம் எனக்குத்தான். எனது பக்கத்து வீட்டுக்காரர் மீது இதை நான் திணிக்க மாட்டேன்’ என்று மதச்சார்பின்மைக்கு காந்தியடிகள் சரியான பதில் சொல்லியிருக்கிறார். அதைப் புறம் தள்ளி இன்று ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே இறை வழிபாடு என்று திணிப்பதை எதிர்க்கிறது காங்கிரஸ். எனவே எங்கள்மீது குறை சொல்ல வேண்டும் என்று சொல்கிறவர்கள் சொல்வார்கள்.”

ஸ்டாலின் - கே.எஸ்.அழகிரி
ஸ்டாலின் - கே.எஸ்.அழகிரி

“கூட்டணியில் இருப்பதால் ஆளும் அரசை விமர்சிக்க முடிகிறதா?”

“கண்ணை மூடிக்கொண்டு ஓர் அரசாங்கத்தை எதிர்ப்பது தேவையில்லாதது.10% இட ஒதுக்கீடு, மின்கட்டண உயர்வு போன்ற விஷயங்களில் காங்கிரஸ் மறுப்பு தெரிவித்திருக்கிறது. எனவே அவ்வளவுதான் செய்யலாம்...”

திமுக கூட்டணி
திமுக கூட்டணி

“வெறும் அறிக்கையோடு நின்றுவிடலாமா?”

“அறிக்கையே போதுமே... தோழமைக் கட்சியின் அரசைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது.”

“அப்போது உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கான பொறுப்பு..?”

“நாங்களெல்லாம் ஒன்றாகச் சேர்ந்துதானே வாக்கு கேட்டோம்... தேவையான விஷயங்களில் அரசிடம் எடுத்துச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். அது சரியில்லை என்றால் திருத்தியும் கொள்கிறார்கள்.”

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

“நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் எத்தனை சீட்டுகளை எதிர்பார்க்கிறது?”

“இது கட்சியின் தலைமை முடிவு செய்யும். முன்பைவிட அதிகமாகப் பெறும் என்பது எங்கள் நம்பிக்கை.”

“அப்படிக் கிடைக்கவில்லை என்றால் அ.தி.மு.க-வின் மெகா கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்துகொண்டிருக்கிறது என்கிற ஒரு பேச்சும் அடிப்படுகிறதே?’

“அ.தி.மு.க-வால் மதச்சார்பின்மையாக இருக்க முடியாது. அவர்களால் மோடியைத் தவிர்த்து விட்டும் அரசியல் செய்ய முடியாது. எனவே, இது போன்ற பேச்சுகளெல்லாம் யூகங்களின் அடிப்படையில் வருபவை.”

ஆறு பேர் விடுதலை
ஆறு பேர் விடுதலை

“ஆறு பேர் விடுதலையை ஒட்டி, ‘கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இஸ்லாம் சிறைவாசிகளுக்கு ஒரு நியதியா’ என்று கேள்வி எழுப்பியிருந்தீர்கள். ஏன் இப்போதுதான் அவர்கள் சிறையில் இருப்பது காங்கிரஸுக்குத் தெரிந்ததா?”

“ஒரு விஷயத்தைப் பேசும்போதுதானே அதனோடு தொடர்புடைய எல்லா விஷயங்களையும் பேச முடியும்... அதேநேரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களை, தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுங்கள் என்று காங்கிரஸ் ஒருபோதும் சொல்லாது. ஆனால் சந்தேகத்தின்பேரில் 20 வருடங்கள் வைத்திருப்பதில் என்ன அர்த்தம்... ஏன் சந்தேகத்தை நிரூபிக்க முடியவில்லை... அப்படியென்றால் அவர்களையும் விடுவிக்கலாமே என்கிற கேள்வியைத்தான் இப்போது இந்த விடுதலையை ஒட்டுக் கேட்கிறோம். இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலைசெய்ய வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.”

கே.எஸ் அழகிரி
கே.எஸ் அழகிரி

“தமிழ்நாட்டில் இனி வரும் தேர்தலில் தி.மு.க Vs பா.ஜ.க என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அது ஒருபோதும் கிடையாது... தமிழ்நாட்டு அரசியல் தெரியாதவர்கள், தமிழ்நாட்டின் வாக்குவங்கி தெரியாதவர்கள், சும்மா நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு வக்கணையாகச் சொல்கிற விஷயம் இதெல்லாம்.”