அலசல்
அரசியல்
கலை
ஜான்வி கபூர்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

குறைக்கப்படுகிறதா 108 ஆம்புலன்ஸ் சேவை?

உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி, ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு ஓர் ஆம்புலன்ஸ் இயக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் தமிழ்நாட்டின் மொத்தத் தேவை 800 ஆம்புலன்ஸுகள்தான்

Published:Updated:
ஆம்புலன்ஸ் சேவை
பிரீமியம் ஸ்டோரி
ஆம்புலன்ஸ் சேவை
Google Preference
Comments
Share

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் 6-ம் தேதி, 108 ஆம்புலன்ஸ் சேவை ஒரு மணி நேரம் தாமதமாகக் கிடைத்ததால், கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்த சோகம் தமிழ்நாட்டை உலுக்கியது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை குறித்த கள ஆய்வில் இறங்கினோம்.

2008-ம் ஆண்டு முதலே அரசின் நிதியுதவியுடன் இயங்கிவரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை, ஜி.வி.கே-இ.எம்.ஆர்.ஐ (GVK-Emergency Management and Research Institute) என்ற தனியார் நிறுவனமே நிர்வகித்துவருகிறது. இதன் ஊழியர்கள் தரப்பில் விசாரித்தபோது, 108 ஆம்புலன்ஸுகளின் எண்ணிக்கை குறைப்பு, வாகனப் பராமரிப்பில் சுணக்கம், ஊழியர்களின் சம்பளப் பிரச்னைகள் எனப் புகார்கள் வரிசைகட்டின.

நெல்லை, குமரிப் பகுதி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தரப்பில் விசாரித்தபோது, “மாவட்டத்தில் 17 ஆம்புலன்ஸுகள் இயக்கப்படுகிறது எனில், இரவு நேரங்களில் இவற்றின் எண்ணிக்கை மிகுதியாகக் குறைக்கப்படுகிறது. அதனால், சேவை கிடைக்காத பகுதிக்கு வேறு பகுதியிலிருந்தே ஆம்புலன்ஸை அனுப்பவேண்டியிருக்கிறது. கடந்த வாரம்கூட 32 கி.மீ தொலைவிலுள்ள பகுதியிலிருந்து எமர்ஜென்சி அழைப்பு வந்திருந்தது. இதுவும் தாமதத்துக்குக் காரணம். இதனால் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன” என்றனர் அதிர்ச்சியூட்டும் விதமாக.

ஆம்புலன்ஸ் சேவை
ஆம்புலன்ஸ் சேவை

நம்மிடம் பேசிய மதுரை சுற்றுவட்டார ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், “மதுரையில் இருக்கும் 50 ஆம்புலன்ஸுகளில், இரவில் 10 ஆம்புலன்ஸுகள் இயங்குவதில்லை. கேட்டால், ஆள் பற்றாக்குறை என்கிறார்கள். வாகனத்தை விரைந்து இயக்கவேண்டிய எங்களை, இரவுப் பணிகளின்போதும் 15 மணி நேரம் வரை பணி செய்யச் சொல்கிறார்கள். வாகனங்களில் பழுது ஏற்பட்டால் சரிசெய்து தருவதற்கு நீண்ட நாள்கள் ஆகின்றன. ‘சமாளித்து ஓட்டுங்கள்... பார்த்துக்கொள்ளலாம்” என்பதே பல நேரங்களில் எங்களுக்குக் கிடைக்கும் பதில். ஓய்வின்றி, பழுதான வாகனங்களோடு பணிபுரிவது அபாயகரமானதாகவே இருக்கும். போராடி விடுமுறை பெற்றாலும் சம்பளத்தில் பிடிக்கிறார்கள்” என்றனர் வேதனையுடன்.

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் திருநாவுக்கரசர், ராஜேந்திரன் ஆகியோர் பேசும்போது, “அழைப்புகள் குறைவாக வருகின்றன என்று சொல்லி ‘டௌன்டைம்’ குறிப்பிட்டு ஆம்புலன்ஸுகள் நிறுத்திவைக்கப் படுகின்றன. இது குற்றம் நடக்கவில்லையென்று காவல் நிலையங்களை மூடுவது போன்றது. தற்போது தமிழ்நாட்டிலுள்ள 1,353 ஆம்புலன்ஸுகளில், ஏறத்தாழ 900 ஆம்புலன்ஸுகள் மட்டுமே இயங்குகின்றன. சராசரியாக மாவட்டத்துக்கு எட்டு ஆம்புலன்ஸுகளின் சேவை குறைக்கப்பட்டிருக்கிறது. எனினும், அப்படிச் சேவை நிறுத்தப்பட்ட வாகனங்கள் அனைத்தும் செயல்பாட்டில் இருப்பதாகக் கணக்கு காட்டி, தமிழக அரசிடம் நிதியைப் பெற்றுவிடுகிறது ஜி.வி.கே-ஈ.எம்.ஆர்.ஐ நிறுவனம். தொழிற்சங்கங்கள் இதைச் சுட்டிக்காட்டினாலோ, அரசுக்குத் தெரியப்படுத்தினாலோ, வாகனப் பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பினாலோ பணிநீக்கத்தையே பதிலாகத் தருகிறது அந்த நிறுவனம்” என்றனர் ஆதங்கத்துடன்.

ஆம்புலன்ஸ் சேவை
ஆம்புலன்ஸ் சேவை

ஜி.வி.கே-இ.எம்.ஆர்.ஐ நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவர் செல்வக்குமாரிடம் பேசினோம். “ஆம்புலன்ஸ் சேவைகளில் ஓர் ஊழியரைப் பணியில் சேர்த்தால் உடனடியாக அவர்களை வேலையில் அமர்த்திவிட முடியாது, அவர்களுக்கு 45 நாள்கள் பயிற்சி வழங்கப்பட வேண்டும். அதேநேரம் மாதத்துக்கு, 6% ஊழியர்கள் பணியிலிருந்து விலகிச் செல்கிறார்கள். மேலும், மருத்துவ உதவியாளர்களில் 60% பேர் பெண் ஊழியர்கள் என்பதால், அவசியத்துக்கேற்ப மகப்பேறு உள்ளிட்ட பணி விடுமுறைகள் வழங்கப்படுகிறது. பற்றாக்குறை இருக்கும்பட்சத்தில் மட்டுமே ஊழியர்கள் கூடுதல் நேரம் பணிசெய்யவேண்டியிருக்கிறது. மேலும், சிலநேரங்களில் ஒரேபகுதியில் இரண்டு ஆம்புலன்ஸுகளும் சேவையில் இருக்கும்போது, இன்னொரு அழைப்பு வரும்பட்சத்தில் தவிர்க்க முடியாமல் சில துயர சம்பவங்கள் நிகழ்ந்துவிடுகின்றன” என்றார்.

ஆம்புலன்ஸ் சேவை பிரச்னை, புகார்கள் குறித்து தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத் தலைவரான உமா ஐ.ஏ.எஸ்-ஸிடம் விளக்கம் கேட்டோம். “ஆம்புலன்ஸ் சேவை அரசுக்கும், தனியார் நிறுவனத்துக்கும் இடையே PPP (Public Private Property) ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயங்குகிறது. அதேநேரம் அவை முறையாக இயங்குவதை அதிகாரிகள் கண்காணிக்கிறோம்.

திருநாவுக்கரசர், ராஜேந்திரன், உமா
திருநாவுக்கரசர், ராஜேந்திரன், உமா

உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி, ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு ஓர் ஆம்புலன்ஸ் இயக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் தமிழ்நாட்டின் மொத்தத் தேவை 800 ஆம்புலன்ஸுகள்தான். ஆனால், கூடுதலான எண்ணிக்கையிலேயே ஆம்புலன்ஸுகள் இயக்கப்படுகின்றன. காலாவதியான வாகனங்கள் மட்டுமே சேவையிலிருந்து நீக்கப்பட்டிருக் கின்றன. அவற்றுக்கு பதிலாக புதிய வாகனங்கள் இணைக்கப்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் 750 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. சேவையைப் பொறுத்தவரை ராமநாதபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தாமதங்கள் இருக்கலாம். காரணம், அந்தப் பகுதிகளிலிருந்து உயர்தர சிகிச்சைக்காக மதுரை மற்றும் சென்னைக்கு ஆம்புலன்ஸுகள் தொலை தூரம் பயணிக்கவேண்டிய சூழல் இருக்கிறது. மற்றபடி அவசர அழைப்பு வந்த 14 நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸுகள் சென்றுவிடுகின்றன. ஊழியர்களின் ஊதியம், விடுப்பு சம்பந்தமான விவகாரங்களில் தமிழக அரசு தலையிடுவதில்லை. அதை ஜி.வி.கே ஈ.எம்.ஆர்.ஐ நிறுவனம்தான் பார்த்துக்கொள்கிறது” என்றார்.

ஆம்புலன்ஸ் ஊழியர்களின் புகார்களைக் களைய முன்வருமா தமிழ்நாடு அரசு?